புதுச்சேரியின் குறடு ( நடைபாதை) களை எவர் ஆக்கரமிக்கின்றனர்?
தெரு வணிகம், நகர வாழ்க்கை, வாழ்வாதாரத்தின் ஓர் அங்கமே!
புதுச்சேரியின் கடைத்தெருக்களில் இரண்டு விதமான வணிகம் நடைபெறுகிறது. ஒன்று நிரந்தரமாக கடைகள் வைத்து வணிகம் செய்தல். மற்றொன்று நடைபாதை( குறடு) ஓரங்களில் தற்காலிக கடைகள் வைத்தோ அல்லது பண்டங்களை தலையில் தூக்கிக் கொண்டோ தெருக்களில் அலைந்து திரிந்து நடந்து செல்வோர்க்கு , போக்குவரத்துக்கு இடையூறின்றி, பொது மக்களுக்கு அன்றாடம் பயன்படும் எளிய பொருட்களை குறைந்த விலையில் வணிகம் செய்து வருதல். இவர்கள் மிகச் சிறிய மூலதனமும் அதனால் மிகக் குறைந்த வருமானம் உடையவர்கள். தமது உணவிற்கும் ,உடைக்கும் கூட போதிய அளவு சம்பாதிக்க முடியாதவர்கள்.
இவ்வாறாக வணிகம் செய்யும் தெரு வணிகத்தை ,தெருவணிகர்கள் (வாழ்வாதார பாதுகாப்பு ,தெரு வணிகம் ஒழுங்கு படுத்துதல் )சட்டம் 2014 அங்கீகாரம் செய்துள்ளது. நாடு முழுவதும் 10 மில்லியன்
தெரு வணிகர்கள் உள்ளனர். விவசாயம் சாராத ,அமைப்புசாரா தொழிலாளர்களில் 14% தெரு வணிகர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தவர்களாகவும், நிரந்தர வேலை இழந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
புதுச்சேரி நகராட்சியில் 1325 தெரு வணிகர்களும் ,உழவர் கரை நகராட்சியில் 920 தெரு வணிகர்களும் அனுமதி உரிமம் வைத்துள்ளனர் . நகராட்சிகளின்உரிமம் பெறமுடியாத வீதி வணிகர்கள் சில ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 54 விழுக்காடு பெண்கள். இத்தகைய தெரு வணிகர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக செய்யும் தொழில் காரணமாக சுய வேலை செய்வோர் ஆவர். அவர்களை , ஒப்பீட்டளவில் பெரிய வணிகத்தில் முதலீடு செய்து, நிரந்தரமாக கடை நடத்தி வரும் சிறிய, நடுத்தர , பெரிய வணிகர்களுடன் ஒப்பிட முடியாது. இத்தகைய நிரந்தர கடை வணிகர்களுக்கு போதுமான வசதிகள் இருந்தும், அவர்களின் வணிகப் பொருட்களை நடைபாதை வணிகர்கள் போல் நடைபாதைகளில் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியும், விளம்பர தட்டிகள் வைத்தும் வணிகம் செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இத்தகைய நிரந்தர கடை வணிகர்கள் தங்கள் ஊழியர்களுக்கு தனியான வாகன நிறுத்த வசதி செய்து தராமல் இருப்பதால் ஊழியர்களின் வாகனங்கள் நாளில் பல மணி நேரம் சாலைகளை, நடைபாதைகளை அடைத்துக் கொண்டு கடைகளுக்கு எதிரே நிறுத்தப்படுகின்றன. இதனால் குறடு கள் மேல் நடந்து செல்வோர்க்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது .
மேலும் புதுச்சேரியின் பல முக்கிய தெருக்களில் வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு எதிரே உள்ள குறடுகளை மறித்து கம்பி வேலி அமைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் கடைகள் வைத்துக் கொள்ள வாடகைக்கும் விடுகின்றனர்.
புதுச்சேரியின் புல்வார்( Boulevard)பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் அங்காடிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன. அதன் அக்கம் பக்கமாகவே தெரு வணிகர்களும் வளர்ந்து வருகின்றனர் என்பன போன்ற விவரங்கள் நகராட்சிகளின் நிர்வாகங்களுக்கு நன்கு தெரியும்.
எனவே உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை தெரு வணிகத்தை நிரந்தர வணிகர்களின் வணிகத்தோடு இணைத்துப் பார்த்தல் கூடாது. தெரு வணிகம் என்பது நகரத் தொழில்களில் ஒரு அங்கமாகும். நடைபாதை வணிகத்தை மேம்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்கள் படி பிரதம மந்திரி தெரு வணிகர் சுயசார்பு நிதி( PM SVANNidhi) Prime minister street vendors Atma Nirbhar திட்டத்தின் கீழ் வங்கிகளும் ரூபாய் பத்தாயிரம் முதல் ரூபாய் ஐம்பது ஆயிரம் வரை மானிய வட்டியில் கடன் வழங்குகின்றன இவ்வாறாக சாலையோர வணிகத்தை அரசு அங்கீகாரம் செய்துள்ளது என்பது தொடர்புடைய அரசு துறைகளுக்கு நன்கு தெரியும்.
கச்சித நகர (Smart City) திட்டத்தின் கீழ் ரூபாய் 1860 கோடி மேம்பாட்டு நிதிஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரும் கூட புதுச்சேரியின் நடைபாதைகள்( குறடுகள் )பல இடங்களில் சரிந்தும் ,சமனற்றும் , பள்ளங்கள், குழிகளுடன் காணப்படுகின்றன ., இதனாலாலேயே குழந்தைகள், முதியோர் ,பெண்கள் நடைபாதைகளை தவிர்த்து சாலைகளின் குறுக்கு நெடுக்காக நடக்கின்றனர். மேலும் புதுச்சேரி நகராட்சி, உழவர் கரை நகராட்சி இவைகளின் உட்புற சாலைகள் ,100 அடி , 45 அடி சாலைகளின் இணைப்பு சாலைகள் வாகன போக்குவரத்திற்கு ஏற்ப தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால் நகரத்தில் அவசியமற்ற ,தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. மேலும் முக்கிய சாலைகளுடன் போதுமான இணைப்பு சாலைகள் இல்லாததும் போக்குவரத்து நெருக்கடியை அதிகரிக்கின்றன.
உண்மை இவ்வாறு இருக்க ஏதோ? நடைபாதை வணிகர்கள் தான் நடைபாதைகளை ஆக்கிரமித்து இருப்பதாகவும் அதனால் பொதுமக்கள் அவதியுருவதாகவும் அங்கலாய்ப்பது நியாயம் அல்ல. வணிகத் திருவிழா நடைபெறும் இந்த வேளையில் இத்தகைய கருத்துக்கள் , செயல்முறைகள் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் நிரந்தர கடை வணிகர்களை மட்டுமே ஆதரிக்கும் நோக்கம் கொண்டது. கச்சித நகரத்திட்டதின் கீழ் கூட நேரு வீதி நடைபாதைகள் தரத்தை புதுச்சேரி நகராட்சி மேம்படுத்தவில்லை. காந்தி வீதி, மாதா கோயில் வீதி ,இரங்கப் பிள்ளை வீதி , செட்டி தெரு,பாரதி வீதி ,அம்பலத்தாடையர் மடம் வீதி அரவிந்தர் வீதி , வைசியாள் வீதி போன்ற முக்கிய வணிகத் தெருக்களில் குறடுகளையே காண முடிவதில்லை. புல்வார் (Boulevard) முழுவதும் பெரும்பாலான தெருக்களில் குறடுகள் உள்ளன. பலத்தெருக்களில் வீட்டு உரிமையாளர்கள் குறடுகளை ஆக்கிரமித்து தாழ்வாரம் ஆக்கிவிட்டனர் அல்லது சிறு வணிகர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இருசக்கர வாடகை நிலையங்கள் தெருக்களையே அடைத்து வண்டிகளை நிறுத்தியுள்ளன. வண்டிகள் நிறுத்த வளாகங்கள் அவைகளிடம் இல்லை .
புதுச்சேரி நகராட்சி புல்வார்( Boulevard) முழுவதும் உள்ள
குறடுகளை , நடந்து செல்வோர், நடைபாதை ஓர தெரு வணிகர்கள் நலன்கள் கருதி போக்குவரத்து நெரிசலை குறைத்திட, மீட்டெடுக்க வேண்டிய அவசியமும் தேவையும் உள்ளன. சில தெருக்களில் மத அமைப்புகளும் குறடுகளை ஆக்கிரமித்து வேலியிட்டுள்ளன,என்பதை நகராட்சி கவனத்தில்கொண்டு குறடுகளை அவர்களிடமிருந்து மீட்டெடுப்பதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். அப்பொழுதுதான் பொது மக்கள் குறடுகளில் நடப்பதற்கும் , தெருவோர வணிகர்கள் வணிகம் செய்வதற்கும் சுலபமாக இருக்கும். நடைபாதை( குறடு) வணிகர்களும் நகரத்தின் ஓ ர்அங்கமாக வாழ்வாதாரத்துடன் வாழ்ந்திட இத்தகைய மீட்டெடுப்பு உதவும். சுற்றுலா நகரத் திட்டம், தெரு வணிகம் தடை செய்யப்பட்ட இடம் என்ற பெயரில் என் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அதிகாரிகளை பயன்படுத்தி தெரு வணிகர்களை நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் என சித்தரித்து , தண்டம் விதித்து, வணிகத் திருவிழாவில் பங்கெடுக்கும் நிரந்தர வணிகர்களுக்கு ஆதரவாக அவர்களை அப்புறபடுத்தும் எந்த முயற்சியையும் உடனடியாக நிறுத்த வேண்டும். தெரு வணிகர்களும் இணைந்தால்தான் வணிகத் திருவிழாவும்வெற்றி அடையும். நகரப் பொருளாதார வளர்ச்சியின் ஓர் அங்கமாக விளங்கும் நடைபாதை வணிகர்களுக்கு குடிநீர் , குளியலறை, கழிப்பறை ,ஓய்வறை,பொருள் பாதுகாப்பு இடம் ஏற்படுத்தி , உரிமம் விடுப்பட்ட அனைத்து தெரு வணிகர்களுக்கும் உரிமம் வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எந்த ஒரு நல்வாழ்வு அரசுக்கும் உண்டு. அதே நேரத்தில் பெருமளவில் சங்க ரீதியில் அமைப்பாக்கபடாமல் உள்ள தெரு வணிகர்களை அமைப்பாக்கி அவர்களது அரசியல், வாழ்வாதார உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய பணிகள் புரட்சி கர தொழிற்சங்கத்திற்கு அவசியமாகும். கச்சித நகர த்திட்டமிடல், தெரு வணிகர் சட்டம் 2014 சாராம்சத்தில் தெரு வணிகர்களை அப்புறப்படுத்தவே முயற்சிக்கின்றன என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
-----சோபா-
கூடுதல் உள் விவரங்கள் தோழர் விஜயா, செயலாளர். புதுவை உடல் உழைப்போர் சங்கம் (எஐசிசிடியு)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)