கண்ணகி -முருகேசன் படுகொலை, தீர்ப்பு:

சமூகநீதி, சாதி ஒழிப்பு போராட்டத்துக்கு அணியமாக வேண்டும்!

புத்தர் காலம் தொட்டு நடந்துவரும் சாதி ஒழிப்புப் போராட்டம் இன்றளவும் கூட நடந்து வருகிறது. நடந்துவரும் சாதி ஒழிப்புப் போராட்டங்கள், வெவ்வேறு அளவில், வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

ஆழப் பொதிந்துள்ள சாதி அமைப்பு முறைக்கு எதிரான எண்ணற்ற முயற்சிகளும் வீரமிக்கப் போராட்டங்களும் நடந்து வந்துள்ளன. சந்நியாசிகள், சிந்தனையாளர்கள், அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார் ஈவெரா, அய்யன்காளி போன்ற அரசியல் தலைவர்களும் படிப்பாளிகளும் சாதி இயங்கியல் பற்றிய நுணுக்கமான புரிதல்களை வழங்கியிருக்கிறார்கள்; சாதி அமைப்பு முறையை தூக்கி எறிவதற்கான மாற்றுகளையும் வழங்கியிருக்கிறார்கள்.

அடையாள \ சமூகநீதி அரசியல் ஆதரவாளர் கள், திட்டவட்டமான, ஆக்கபூர்வமான, ஜனநாயக வழிமுறைகள் மூலம் சாதிய நிலையை சாதி ஒழிந்த நிலையாக மாற்றமடையச் செய்யவேண்டிய இடத்தில் சொல்லாடலை பதிலீடாக்க முனைகின்றனர். வேறுசிலரோ தங்களது சமூக-பொருளாதார, அரசியல் நிலை களை மேலுயர்த்திக்கொள்ள சாதியை கையகப் படுத்திக் கொள்கிறார்கள்.

இத்தகைய சூழலிலில்தான், சாதித் திமிர் கொண்ட, குருதியை உறைய வைக்கும் அவப் பெயர் பெற்ற கண்ணகி-&முருகேசன் படுகொலை வழக்கில், கடந்த 18 ஆண்டுகளாக நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இந்திய நீதித்துறை மீது ஒரு நம்பிக்கைக் கீற்றை வழங்குகிறது. துயருற்ற அந்த குடும்பத்துக்கு இந்த நீதியை பெற்றுத்தந்ததில் வழக்கறிஞர் ரத்தினம், சுகுமாரன் போன்ற சாதி எதிர்ப்புப் போராளிகளும் இன்னும் சில ஆதரவாளர்களும் இல்லாமல் பெற்றிருக்க முடியாது. அழுத்தங்களையும் அச்சுறுத்தல் களையும் தாக்குப் பிடித்து நின்ற அவர்களது தார்மீகத் திறனும் சமரசம் செய்து கொள்ளாத உணர்வும் சாதி ஒழிப்பு கடப்பாடும் நமது எல்லோருடைய பாராட்டுதல்களையும் ஒருமைப் பாட்டையும் பெறத் தகுதி கொண்டது.

சமூகநீதி, இடஒதுக்கீட்டுக் கொள்கையாக மட்டும் முடங்கிப் போய்விடக்கூடாது. சமூகநீதி தீண்டாமை, வன்முறைக்கு எதிராக, ஆணவத் திற்கு எதிராக, காட்டு மிராண்டித் தனத்துக்கு எதிராக போராட வேண்டும். உண்மையில், இத்தகைய அநாகரிக நடத்தைகள், சமூகநீதி, சுயமரியாதை, மாற்றத் துக்கான அரசியல் என்றெல்லாம் கூறப்படும் இந்த மண்ணுக்கு அவமானத்தையே கொண்டு வருகிறது.  

  • பேராசிரியர் லட்சுமணன், எம்அய்டிஎஸ்,

அம்பேத்கரிய செயல்பட்டாளர்