விவசாயிகள் பிரச்சனை:

ஒரு புதிய அனுபவம்

கள்ளக்குரிச்சி மாவட்டம், திருநாவலூர் ஓன்றியத்திலுள்ள சேந்தநாடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் பெரும் ஊழல், முறைகேட்டில் சிக்கிக் கிடக்கிறது. 17 கிராமங் களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த கூட்டுறவு கடன் சங்கம் கடன் வழங்க வேண்டும். இந்த கடன் சங்கத்தில் கடன் கேட்டு விண்ணப்பித் திருந்த அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச்செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் வீரன், அவிகிதொச மாவட்டச் செயலாளர் ஏழுமலை ஆகியோருக்கு தகுதி இருந்தும் கடன் வழங்க சங்கத்தலைவர் மறுத்துவந்தார். இதுபோல் தகுதியுள்ள ஏராளமான விவசாயிகளுக்கும் கடன் மறுக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. விவசாயிகள் பலரிடம் விசாரித்த போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

700 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தில் இதுவரை 350 விவசாயிகளுக்கு ரூபாய் 3.5 கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ள தாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் பொறுப்பில் இருந்து வரும் அதிமுகவைச் சேர்ந்த கோவிந்தராஜ் தனக்கு வேண்டியவர்கள், தன் கட்சிக்காரர்க ளுக்கு விதிகளுக்கு புறம்பாக கடன் வழங்குவது வாடிக்கை என்று விவசாயி கள் கூறுகின்றனர். அரசியல் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கரில்  முந்திரிக் காடுகளை வைத்தி ருப்பவர் களுமான  ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்திருப்பதாகவும்  சொல்கிறார்கள்.

இவ்வாறு பல புகார்கள் வந்தநிலையில் இந்த முறைகேடுகளைக் கண்டித்து 1-.11.-2021 அன்று சேந்தநாட்டில் உண்ணாநிலைப் போராட்டத்தை அகில இந்திய விவசாயிகள் மகாசபை அறிவித்தது. அந்த கடன் சங்கத்தில் நடக்கும் மேற்சொன்ன ஊழல், முறைகேடுகளை பட்டியலிட்டு துண்டறிக்கை வெளியிட்டு விவசாயிகள் மத்தியில் விநியோகிக்கப் பட்டது. விவசாயிகள் மத்தியில் இந்தப் பிரச்சனை பேசுபொருளானது. உடனடியாக உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். 3.10.2021 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி, விவசாயிகள் மகாசபை மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடன் சங்கத்தின் செயலாளர் சண்முகமும் கலந்து கொண்டார். மகாசபை யிலுள்ள தகுதியான விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும், விவசாயிகள் சொல்லும் முறை கேடுகள் இனி நடக்காது என்று வாக்குறுதி யளித்ததை அடுத்து அமைதிக்கூட்டம் சுமூகமாக முடிந்ததாக வட்டாட்சியர் அறிவித்தார். வட்டாட்சியர் கேட்டுக்கொண்டபடி போராட்டம் ஒத்திவைக்கப் பட்டது. வட்டாட்சியர் அளித்த அறிக்கையின்படி அந்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சண்முகத்தை இடமாற்றம் செய்யும் உத்தரவு வந்தது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர் தலையீட்டால் அவரது மாறுதல் ரத்து செய்யப்பட்டது.

மேலும் வாக்களித்தபடி கடன் வழங்காமல் கடன் சங்க நிர்வாகிகள் இழுத்தடித்தனர். இதனால் 19-.11.-2021 அன்று மீண்டும் போராட்ட அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கிடையில், மகாசபை நிர்வாகிகள், விழுப்புரத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரை சந்தித்து புகார் மனு (15.-11.-2021) அளித்தனர். சேந்தநாடு கூட்டுறவு சங்கத்துக்கு 17-.11.-2021 அன்று நேரடி விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேரடி விசாரணையை காண்பதற்காக அஇவிமச, இகக(மாலெ) தலைவர்கள்,ஊழியர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். அதிகாரிகள் வருவதற்கு காலதாமதமாகிக் கொண்டிருந்தது. ஆவேசமடைந்தவர்கள் முழக்கம் எழுப்பினார்கள். அலுவலகத்திற்கு வந்திருந்த விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் திரண்டுவிட்டனர். அதிகாரிகளிடம் (இணைப்பதிவாளர் பெண் அதிகாரி) கூட்டுறவுசங்க முறைகேடுகள் குறித்து அஇவிமச செயலாளர் ஆறுமுகம், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி இருவரும் விளக்கியதோடு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை, வரவு-செலவு விவரங்களையும் கேட்டனர். தலித் விவசாயிகள் அவமதிக்கப் படுவதாகவும் அவர்களுக்கு கடன் மறுக்கப்படு வதாகவும் புகார் கூறினர். அதோடு தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

சில விவரங்களை தெரிவித்த இணைப் பதிவாளர், சங்கத்தின் கோரிக்கையின்படி புதிதாக 106 பேர்களுக்கு கடன் வழங்கப்பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடன் சங்க பதிவேடுகள் பரிசீலிக்கப்படுவதாகவும் உரிய விசாரணை மேற்கோள்ளப்படுமென்றும் தெரிவித்தார். மட்டுமின்றி கடன் சங்க செயலாளர் சண்முகத்தை (ஓய்வுபெறும் காலம் ஓராண்டு மட்டுமே இருக்கும் போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற புதிய உத்தரவின் காரணமாக) விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தினார். புதிய செயலாளராக சீனிவாச ராகவன் என்பவர் நியமிக்கப்படுவதாகவும் அறிவித்தார்இது கூடியிருந்த விவசாயிகளி டையே பெருத்த உற்சாகத்தையும் வரவேற்பை யும் பெற்றது. பல கிராமங்களுக்கும் செய்தி பரவியது.

106 பேர்களுக்கு புதிதாக கடன் வழங்கப் படும் என்று அறிவித்திருந்தாலும் 94 பேர்களுக்கு மட்டும் கடன் அனுமதிக்கப்பட்டு வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இதில் அஇவிமச, இகக(மாலெ) நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் (ஏக்கருக்கு ரூ.27,000 வீதம்) கடன் கிடைத்துள்ளது. சில சில்லரை காரணங் களை காட்டி அஇவிமச மாவட்டத் தலைவர் வீரனுக்கு கடன் வழங்கப்படவில்லை. இது நமது அமைப்புக்குள் முரண்பாடுகளை உருவாக்கும் முயற்சியுமாகும். நமது தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்தவுடன், அடுத்த தவணையில் வழங்கப்படுமென உறுதி அளித்துள்ளனர்.

1. போராட்டத்தின் மூலம் கடன் பெற முடியும் என்ற நம்பிக்கை விவசாயகளிடையே ஏற்பட்டுள்ளது. அஇவிமசவும் இகக(மாலெ) வும் பரவலாக அறிமுகமாகியுள்ளது.

2. இந்த போராட்ட நடவடிக்கை மூலம் பல கோடிகள் புரளும் இந்த வேளாண் கூட்டுறவு சங்கத்தை கட்டுப்படுத்தும் சக்திகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எதிரெதிர் முகாமான திமுக, அதிமுக வைச் சேர்ந்தவர்கள் கரம் கோர்த்து நிற்பதையும் காணமுடிகிறது. ஒவ்வொரு கூட்டுறவு கடன் சங்கமும் ஒரு அதிகார மய்யமாக இருப்பதும் தெரிய வருகிறது.

3. வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை ஜனநாயக ரீதியாக செயல்பட வைப்பதற்கான நடவடிக்கை பரந்த விவசாயிகளை அணிதிரட்டு வதற்கான பெரும் வாய்ப்பு கொண்ட அரங்கமாக இருக்கும். அதேசமயம் உக்கிரமான போராட்டத்துக்கான களமாகவும் இருக்கும்.

4. போராட்ட அறிவிப்பைக் கண்ட உடனேயே பேச்சு வார்த்தை, உடன்பாடு என வந்திருப்பதற்கான காரணம், புரையோடிப் போயிருக்கும் ஊழல், முறைகேடுகளுமாகும். அதேசமயம் உடனடி உடன்பாடு காண்பதன் மூலம் போராட்ட சக்திகளின் கைகளை கட்டிப் போடுவதற்கான முயற்சியுமாகும்.

5. தலித் விவசாயிகள் கணிசமாக இருக்கும் இந்த பகுதியில் இந்தப்பிரச்சனையில் நம்முடன் கூட்டுநடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வந்துள்ளது. திமுகவைச் சேர்ந்த தலித் விவசாயிகள் தங்களுக்கு கடன் வழங்கப்படாதது குறித்து தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரிடம் புகார் செய்துள்ளனர். எம் எல் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி பற்றியும் சுட்டிக் காட்டி யுள்ளனர்.

6. ஊழல் புகாரில் சிக்கியுள்ள கடன் சங்க பொறுப்பாளர்களும் தகுதிக்கு மீறி பலன்பெற்ற அரசியல் பிரமுகர்களும் அரசியல் தொடர்புகள் -சட்ட மன்ற உறுப்பினர், அமைச்சர்- மூலம் பிரச்சனையை மூடிமறைக்க முயன்று வருகின்றனர்.

7. இந்தப் பிரச்சனை நமது ஆய்வு, படிப்புக்கும் மறுசீரமைப்பு இயக்கம் சொல்லி யுள்ளவாறு புதிய பிரிவினர் மத்தியில் செல்வதற்கு வாய்ப்புகளை திறந்திருக்கிறது.

8. போராட்ட அறிவிப்பு, பேச்சுவார்த்தை யோடு விவசாயிகளை அணிதிரட்டும் வேலைக்கு கவனம் செலுத்திட வேண்டும். வட்டார அளவில் இதுபோன்ற குறிப்பான பிரச்சனைகளில் கிளர்ச்சி, போராட்டங்கள் மூலமே அவிமச வுக்கு உருவம் கொடுக்க முடியும்.

சேந்தநாடு கூட்டுறவு கடன் சங்கத்துக்குட்பட்ட கிராமங்களில் தலித், தலித் அல்லாத விவசாயிகள் மத்தியில் பிரச்சாரம் செய்து விவசாயிகள் மகாசபையில் விவசாயிகளை உறுப்பினர்களாக்கவும் திட்டமுள்ளது; போராட்டம் தொடர்கிறது.

-டி. கலியமூர்த்தி, சி. கொளஞ்சிநாதன்