பெண் போராளிகள்
தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பெண்களின் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் 17.12.2021 தேதியிட்ட ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழில் டி.கே. ராஜலெக்ஷ்மி எழுதிய WOMEN WARRIORS என்னும் கட்டுரையின் தமிழாக்கமே இக்கட்டுரை. தமிழின் காத்திரமான மொழி பெயர்ப்பாளர்களுள் ஒருவரான எழுத்தாளர் கமலாலயன் அவர்கள் இக்கட்டுரையை தமிழாக்கம் செய்துள்ளார்
பஞ்சாப் கிஸான் யூனியனின் மாநிலக்குழு உறுப்பினரான ஜஸ்பீர் கவுர் சொல்கிறார்: “லாகூர் நகரை வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்கத் தவறிவிட்டால் அந்த வாழ்க்கையே வீண்தான்- என்று ஒரு பழமொழி பஞ்சாபியில் உண்டு. லாகூரின் மேன்மை பற்றியது அது. இப்போது அது வேறுவிதமாய் புதிய மொழியாக மாறிவிட்டது: ‘விவசாயிகளின் போராட்ட இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமற் போனால், வாழ்க்கைக்கே பொருள் இல்லாமற் போய்விடும்’ என்று பெண்கள் கருதுகின்றனர்.” வேளாண் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட பொழுது, தான் சார்ந்துள்ள அமைப்பு நுண் கடன் வழங்கு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனைக ளுக்குத் தீர்வு காண்பதில் மும்முரமாக மூழ்கியிருந்ததென்று அவர் சொன்னார். வேளாண்மை தொடர்பான அவசரச் சட்டங்களின் அதீதத் தீமை அவர்கள் மேல் கவிந்தபோது, மாநிலம் நெடுக எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கியபோது பெண்கள் அவற்றில் இணைந்து கொள்வது என்ற முடிவு மேற்கொள் ளப்பட்டது. இரயில் போக்குவரத்து மறுபடியும் பஞ்சாப்பில் தொடங்கப்பட்டதால், பெண்கள் டெல்லிக்குப் போவது சாத்தியமானது. [விவசாயிகளின் எதிர்ப்பு இயக்கங்கள் தொடங்கப் பட்டதுமே 2020, செப்டம்பர் 24 - முதல் பஞ்சாப்பில் ரயில் போக்குவரத்து முற்றாக முடங்கிப்போனது.]
உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஜனவரி மாதம் 2021இல், பெண் போராட்டக் காரர்கள், முதிய வயதினர், குழந்தைகள் ஆகியோர் வீடுகளுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்று ‘அறிவுரை’ வழங்கினார். விவசாயிகள் என்ற முறையில், இயக்கத்தில் தொடர்ச்சியாகத் தங்கியிருந்து போராடியாக வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாகவே பெண்கள் கருதினர். “ அதற்குப்பிறகு எந்த ஒரு பொதுக் கூட்டத்திலும் முன் வரிசைகளை நிரப்புபவர்களாகத்தான் பெண்கள் இருந்தோம். போராட்டக்காரர்களைப் பலவந்தமாக அகற்றுவதற்குப் போலீசார் எப்போதாவது முயல்வார்களே எனில், பெண்களாகிய நாங்கள் முதலில் அவர்களை எதிர்கொண்டு சமாளிப்போம் என்று ஆண்களிடம் நாங்கள் கூறியிருந்தோம்...” என்று சொன்னார் ஜஸ்பீர் கவுர்.
விவசாயிகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோர்ச்சா (ஷிரிவி) தங்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்திலும் பெண்களை மைய அரங்குகளில் இருத்தியிருந்தது. ஜனவரி 18-ஆம் நாளை ‘மஹிளா கிஸான் திவாஸ்’ என அறிவித்திருந்ததாக ஜஸ்பீர் கவுர் சொன்னார்: “வேளாண்மைத் தொழில் நடவடிக்கைகளில் பெண்கள் நேரடியாக ஈடுபடுவதில்லை; அல்லது வேளாண் சொத்துகளில் பெண்களுக்கு ஒரு பங்கும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்ற முறையிலும், வழக்கமான அன்றாடக் கடமைகள் தொடர்புடைய பல வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என்ற அடிப்படையிலும் போராட்ட இயக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டியது தமது கடமை என்று உணர்ந் திருந்தனர்.”
மோர்ச்சா நடத்திய இந்த நெடிய போராட்டத்தில், பெண்களில் பலரும் ஆண்டு முழுக்க பங்கெடுத்திருந்ததாக ஜஸ்பீர் சொன்னார். “உங்களை (பெண்களை) இங்கே சமைப்பதற்காக அழைத்து வந்திருக்கிறார்களா”என்று கூட ஒரு செய்தியாளர் என்னிடம் கேட்டார். போராட்டக் களங்களில், சமையல் வேலைகளுள் ஆகப் பெரும்பான்மையானவற்றை ஆண்கள்தாம் செய்து கொண்டிருக்கிறார்கள்; பெண்கள் வெறுமனே உதவிகள் மட்டும் செய்கிறோம். அப்படி யிருக்கையில் மேற்குறிப்பிட்ட செய்தியாளரின் கண்ணோட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக, பொதுக் கூட்டங்களில் உரைகள் நிகழ்த்துகையில் ஆண்கள்தான் தலைமைப் பொறுப்புகளில் இருப்பது நடைமுறை. பொது வெளிகளில் பேசுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண் டிருந்த பெண்கள், இப்போது தடையரண்களை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டனர். நாட்டார் பாடல்களில் இசைக் கோவைகளின் அடிப்படையில் எதிர்ப்பியக்கப் பாடல்களையும் கூட எழுதிப் பாடத் தொடங்கிவிட்டார்கள்...” என்கிறார் அவர்.
டெல்லி நகர எல்லைப் பகுதிகளில், போராட்டங்களின் வேகத்தை நிலையாகத் தக்க வைப்பதற்காக ஆண்கள் அங்கேயே தங்கிவிட்டி ருந்த சூழலில், பல பெண்கள் பயிர்கள், கால்நடைகளைப் பராமரித்தாக வேண்டுமென்ற நிலையில் கிராமங்களில் தங்கியிருக்கவும் செய்தனர். பெண்களில் சிலர், வேளாண் உற்பத்திப் பொருள்களை விற்கவும் கூட செய்தனர். ஜனவரி 7-ஆம் நாளன்று, ஓர் எக்ஸ்ப்ரஸ் வேயின் (அதிவிரைவுச்சாலை) சுற்றுப் பகுதியில் ஒரு பேரணி நடத்தப்பட்ட பொழுது, பெண்களே பெரும் எண்ணிக்கைகளில் டிராக்டர்களை ஓட்டிக்கொண்டு போய்ப் பங்கேற்றிருந்தனர். ஹரியானா மாநிலத்திலிருந்து மிகப் பெரும் திரள்களாகப் பெண்கள் வந்து பங்கேற்றதுதான் மிக ஆச்சரியம் தந்த அம்சம் என்கிறார் ஜஸ்பீர் கவுர்.
“பெண்கள் தமது முகத்திரைகளை மேலே எடுத்துவிட்டுக் கொண்டு பங்கேற்றிருந்தனர்.ஒரு குறிப்பிட்டகிராமத்தில், முழுக்க முழுக்க பெண்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு விட்டனர். எல்லைகளில் நடைபெற்று வந்த எதிர்ப்பியக்கத்தில் பங்கேற்பதற்கு அக்கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் ஓர் உறுப்பினரையாகிலும் அனுப்பி வைக்க வேண்டுமென்று அவர்கள் பிரகடனம் செய்திருந்தனர்” என்றார் அவர். கார்ப்பரேட் இந்தியா, உலக வங்கி அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலை [விஷிறி] போன்ற சொல்லாடல்களை அதற்கு முன் ஒருபோதும் கேட்டிராத அந்தப் பெண்களில், இது ஒரு மிகப் பெரும் சாதனை. இப்போதோ, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான உத்தர வாதம், தங்கள் நல வாழ்வுக்கான தரமான மருத்துவம், குழந்தைகளுக்குத் தரமான கல்வி பற்றியெல்லாம் அவர்கள் பேசுகின்றனர். அரசியல் நலன்களுக்காகவே இந்தப் போராட்டம் தூண்டிவிடப்பட்டது என்று அரசாங்கம் முத்திரை குத்துவது தவறான கருத்து என்கிறார் அவர். வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களில் சில அரசியல் குழுக்களுக்கு இந்தப் போராட்டம் ஆதாயம் அளிக்கக் கூடுமென்பதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்ட ஜஸ்பீர், ஆனால் இத்தகைய [வேளாண் விரோத] கொள்கைகளை எந்த அரசியல் கட்சி முன் வைத்தாலும் அதை விவசாயிகளின் இயக்கம் எதிர்த்தே நிற்கும் என்று உறுதிபடச் சொல்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)