ஏப்ரல் 17, 2022 அன்று, இடதுசாரி கட்சிகளின் (சிபிஐஎம், சிபிஐ, சிபிஐஎம்எல், பார்வர்ட் பிளாக்) உண்மை அறியும் குழு ஒன்று, வகுப்புவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீர்புரிசி’-பிளாக் பகுதிகளில் சென்று பார்த்தது. அந்தப்பகுதியில் உள்ள இரு சமூகத்தைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்களையும் குடியிருப்போர்களையும் சந்தித்துப் பேசி, பின்வரும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்தப் பிரதிநிதிகள் குழு கிட்டத்தட்ட 50 வீடுகளில் குடியிருப்பவர்களிடம் கலந்துரையாடியது. மேலும், அந்த பகுதியிலுள்ள ஜஹாங்கீர்புரி காவல் நிலையத்தின் கூடுதல் உதவி காவல்துறை  ஆணையர் ஸ்ரீ கிஷன் குமார் மற்றும் அந்த காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவல்துறையினரையும் சந்தித்துப் பேசியது.

 

ஏப்ரல் 16 அன்று என்ன நடந்தது?

ஹனுமான் ஜெயந்தி அன்று 150 முதல் 200 பேர் கொண்ட கும்பல், கைகளில் ஆயுதங்களோடும் உரத்த இசைகக்கருவிகளோடும் ஜஹாங்கீர்புரி தெருக்களில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, பிற்பகலில் இருந்தே ஊர்வலமாக  அலைந்து கொண்டிருந்தனர் என உண்மையை அறியச் சென்ற குழுவினரிடம் அனைவரும் தெரிவித்தனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் துப்பாக்கிகளையும் வாள்களையும் கைகளில் உயர்த்திப் பிடித்தவாறு ஆட்டிக் கொண்டே சென்றனர் என ஆங்காங்கே வேடிக்கைப் பார்த்தவர்கள் கூறினர். அது, பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்ட காணொலிகளில் உறுதியானது. இந்த ஊர்வலம் உள்ளூர் மக்களால் நடத்தப் படவில்லை எனவும் பெரும்பாலானவர்கள் அந்தப் பகுதிக்கு வெளியில் இருந்து பஜ்ரங்தள இளைஞர் பிரிவினரால் கொண்டுவரப்பட்டனர் எனவும் இந்தக் குழுவினரிடம் தெரிவிக்கப் பட்டது.

ஒன்று ஊர்வலத்திற்கு முன்பாகவும் மற்றொன்று அதன் கடைசியிலும் என இரண்டு காவல்துறை வாகனங்கள் இந்த ஊர்வலத்தோடு இணைந்து வந்ததென இந்த குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு காவல் துறையினர் மட்டுமே இருந்தனர்.

நமக்கு எழும் முதல் கேள்வி:

காவல்துறை ஏன் போதுமான அளவு முன் தயாரிப்புகள் செய்யவில்லை? இந்த ஊர்வலத்தில் ஆயுதங்களை வெளிப்படையாக எடுத்துச் செல்ல காவல்துறை எப்படி அனுமதி வழங்கியது?

வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியான ஜஹாங்கீர்புரிசி’-பிளாக்கில், இந்த ஊர்வலம் ஏற்கனவே இரண்டு சுற்று சுற்றிவந்தது என இந்த குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. மூன்றாவது சுற்றில் தான் இந்த சம்பவங்கள் நடந்தன. பிஜேபி தலைவர்கள் சொல்வது போன்று, இந்த ஊர்வலத்தை தாக்குவதே உள்ளூர் முஸ்லிம்களின் "திட்டமிட்ட சதி" என்றால், அது முதலிலேயே நடந்திருக்க வேண்டும். உண்மை என்ன வென்றால், ரமலான் நோன்பு இருப்பவர்கள் மசூதியில் தொழுகை நடத்துவதற்காக கூடும், மிகச் சரியான அதே நேரத்தில், அந்த மசூதியின் வெளிப்புறத்தில் ஊர்வலம் நின்றதாலேயே இந்தச் சம்பவம் நடந்தது.

நமக்கு எழும் இரண்டாவது கேள்வி:

அந்த ஊர்வலம் அங்கு நிறுத்தப்பட அனுமதிக்கப் பட்டது ஏன்? மசூதிக்கு வெளியே முழக்கங்கள் எழுப்பப்பட அனுமதிக்கப்பட்டது ஏன்? வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ரமலான் நோன்பு முடித்து தொழுகைக்காக முஸ்லிம்கள் கூட்டமாக கூடிய மிகச் சரியான அதேநேரத்தில், ஆயுதங்கள் வைத்திருந்த ஊர்வலத்தினர் மசூதிக்கு வெளியே நிற்பதற்கும் முழக்கங்களை எழுப்புவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. திட்டமிட்ட சதியால் இந்தச் சம்பவங்கள் நடந்தது என்றால் காவல்துறையினரும் கூட உடந்தையாக இருந்த, மேற்கூறிய அந்த திட்டமிட்ட சதியே இதற்கு காரணமாகும்.

இரு தரப்பினரும் கல்லெறிவதைத் துவக்கினர் என இந்த குழுவிற்கு தெரிவிக்கப் பட்டது. மேலும், ஊர்வலத்தினர் மசூதிக்குள் நுழைந்து விடுவார்கள் என்றும் காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பகுதிக்கு அருகில் குடியிருப்பவர் களிடையே பயம் இருந்தது என்றும் இந்த குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது. எனவே, பெரிய கூட்டம் கூட ஆரம்பித்தது. சிறுபான்மை சமூகத்தின் சில பிரிவினர் சிறிது நேரம் கழித்து ஆயுதங்களை கொண்டு வந்தனர் என பெயர் சொல்ல விரும்பாத சிலர் தெரிவித்தனர். ஊர்வலத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவர்கள் ஓடிவிட்டனர்.

சில கார்களும் இருசக்கர மோட்டார் வாகனம் ஒன்றும் எரிக்கப்பட்டிருந்ததை பிரதிநிதி குழுவினர் கண்டனர். இந்து சமூகத்தை சேர்ந்தவர் ஒருவருடைய கடை சூறையாடப் பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கல்லெரிதலின் நடுவில் மாட்டிக்கொண்ட, அந்த பகுதிக்கு வந்த காவல் துறையினர் சிலருக்கும் இதில் காயம் ஏற்பட்டது எனவும் தகவல் கூறப்பட்டது.

ஏப்ரல் 16 அன்று இரவில், அந்தப் பகுதியில், காவல்துறை சோதனைகளை நடத்தி கண்மூடித்தனமாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது. தங்களுடைய வீடுகளில் ஏன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது என பெண்கள் தெரிந்து கொள்ள முயற்சித்தபோது, அவர்க ளுடைய வயிறுகளில் ஆண் காவல் துறையினர் கைகளால் குத்தினர், அடித்து உதைத்தனர்.

இந்தக் குழு காவல் நிலையத்திற்கும் சென்றது. பிஜேபி தலைவர் ஆதேஷ் குப்தாவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஹன்சும் காவல்நிலைய வளாகத்திற்குள்ளேயே, காவல் துறையின் உயரதிகாரிகள் முன்னிலையில், பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றியிருந்த பலர், ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

நமக்கு எழும் மூன்றாவது கேள்வி:

காவல்துறையினரின் பாரபட்சமான அணுகு முறையை இது மிகத் தெளிவாக காட்ட வில்லையா? ஒட்டுமொத்த பகுதியிலும் காவல் துறையினரின் மேல் எந்த நம்பிக்கையும் இல்லை. மேலும், பிஜேபி தலைவர்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டமுழுவதும் ஒருதரப்புக்கு ஆதரவான, முன் முடிவுகள் கொண்ட விசாரணை தான் அங்கு நடந்தது. காவல்துறையினரின் பங்களிப்பை பிஜேபி வெளிப்படையாக பாராட்டியது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. இந்தப் பின்னணியில், ஊர்வலம் சென்றவர்களின் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளும் தாக்குதல் தன்மை கொண்ட செயல்களுக்குமான காணொலிச் சான்றுகள் இருந்தபோதும் கூட, பெரும்பாலும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர்களை மட்டுமே கைது செய்த, ஒரு தரப்பினருக்கு மட்டுமே ஆதரவான, காவல்துறையினரின் நடவடிக்கை அநீதியானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.

ஊர்வலம் சென்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அதேநேரத்தில், முஸ்லிம் சமூகத்தை சார்ந்த இளைஞர்களை மட்டும் கண்மூடித்தனமாக பிடித்துக் கொண்டு சென்றதனால், முழுவதும் ஒரு தரப்புக்கு ஆதரவான காவல்துறையினரின் நடவடிக்கை யால் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களிடையே உருவான எதிர்மறை உணர்வுகள் குறித்து கூடுதல் உதவி காவல்துறை ஆணையரிடம் பிரதிநிதிகள் குழு பேசி விளக்கியது. தங்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொண்ட ஆண் காவல்துறையினர் பற்றி, பெண்கள் கூறிய புகாரையும் பிரதிநிதிகள் குழு காவல்துறையினரிடம் தெரிவித்தது.

அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களிடையே இதற்கு முன்பு எந்த ஒரு வகுப்புவாத கலவரமும் நிகழவில்லை என்பதை இந்தக் குழு கண்ட றிந்தது. பல பத்தாண்டுகளாக, இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர உணர்வுடன் அங்கு வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பாக, அந்தப் பகுதியில் மறுகுடியேற்றக் குடியிருப்புகள் உருவானதி லிருந்தே வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள், ஜஹாங்கீர்புரி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தெருவோரக் கடைகள், சிறுகடை வியாபாரிகள், மீன் விற்பவர்கள், குப்பைப் பொறுக்குவோர் போன்ற சுயதொழில் செய்யும் குடும்பத்தினரே அங்கு பெரும்பாலும் உள்ளனர். "சட்ட விரோத மானவர்கள்" அல்லது ரோஹிங்கியா அகதிகள் என அவர்களைப்பற்றி பிஜேபி வரையறுத்து சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் டெல்லியின் உண்மையான குடிமக்கள் தான்.

முடிவுகள்:

மத நிகழ்ச்சிகளையும் விழாக்களையும் வகுப்புவாத வன்முறையைத் தூண்டு வதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் சங்கப் பரிவார் கூட்டத்தினரின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே, ஜஹாங்கீர்புரி சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது என இந்தக் குழு கண்டறிந்தது. டெல்லியைப் பொறுத்தவரையில், இதற்கு முன்பு நடந்த சம்பவங்களையும் இதோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. தெற்கு டெல்லி மாநகராட்சி மேயரான பிஜேபி கட்சியை சார்ந்தவர், அசைவ உணவு விற்பதற்குத் தடை விதித்து அறிவிப்பு செய்திருந்தார். ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் சைவ உணவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டுமென்ற திட்டத்தை ஏபிவிபி அமல்படுத்த முயற்சித்தது. மேலும், அதற்கு எதிராக போராடியவர்களைத் தாக்கியது. சாவ்லா கிராமத்தில், விவசாயப் பண்ணையின் பராமரிப்பாளர் ராஜாராம் என்பவர் பசுவைக் கொன்று விட்டதாக காரணம் காட்டி, பசு கண்காணிப்புக் குழுவினரால் கொல்லப் பட்டார். ஜஹாங்கீர்புரியில் இப்போது நடந்த வகுப்புவாத வன்முறையானது அனைத்து தொடர் நிகழ்வுகளின் சமீபத்திய அத்தியாயமேயாகும்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட் டுள்ளதாக தெரிகிறது. இது ஒரு கண்துடைப்பும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும். உண்மையை வெளிக்கொண்டுவர குறிப்பிட்ட கால வரையறை கொண்ட நீதிமன்ற விசாரணை நடத்தப்பட ஆணை பிறப்பிக்கவேண்டும். இதன்மூலம், தலைநகரில் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு செய்யும் சங்கப் பரிவார கூட்டங்களின் கொடூர மான முயற்சிகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இடதுசாரி கட்சிகளின் வேண்டுகோள்:

மக்களின் ஒற்றுமையும் அணிதிரட்டலுமே இந்த பிரித்தாளும் சக்திகளுக்கு எதிரான ஒரே பதில் நடவடிக்கையாக இருக்கமுடியும் என நாங்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். ஆர்எஸ்எஸ் &-பிஜேபியின் திட்டங்கள் வெற்றிபெற, எந்த வகையிலும் நாம் அனுமதித்து விடக்கூடாது என்பதே இன்றைய காலத்தின் அவசியமாகும். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார மந்தநிலை, மக்களின் வாழ் நிலைமைகள் மீதான நெருக்கடி ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற் காகவே, வகுப்புவாத பூசலை பரப்ப அவர்கள் முடிவு செய்திருக் கிறார்கள். மக்களின் வாழ்நிலை மைகளைப் பாதுகாக்க, ஒன்று பட்ட மக்களின் போராட்ட இயக்கங்களும் மதவெறிக்கு எதிராக வெகுமக்கள் போராட்டங் களைத் தீவிரப்படுத்துவதுமே  நம்முடைய மாற்று நடவடிக்கை யாக இருக்கும்.

ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படும் டெல்லி காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை மாற்ற, உள்துறை அமைச்ச கமும் குடியரசு தலைவரும் உடனடியாக தலையிட வேண்டும் என நாங்கள் கோருகிறோம். குற்றமிழைத்த காவல் துறையினரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பிரித்தாளும் சக்திகளுக்கு எதிராக, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்இதைப் போன்ற பிரச்சனை களில் அரசாங்கத்தை நம்ப முடியாது என்ப தையே நடவடிக்கை எடுப்பதில் தாமதம் என்பது விளக்குகிறது. டெல்லியின் துணைநிலை ஆளுநர் தன்னுடைய மௌனத்தை கலைத்து விட்டு, உடனடியாக இதில் தலையிடவேண்டும்.

 

1) ராஜீவ் குமார் சிபிஐ-எம்

2) ஆஷா சர்மா, செயலாளர், ஜேஎம்எஸ்

3) மைமூனா முல்லா, தலைவர், ஜேஎம்எஸ்

4) விபின், உள்ளூர்கமிட்டி செயலாளர்,

  வடக்கு மாவட்டம், சிபிஐ-எம்

5) சஞ்சீவ், துணைத்தலைவர், டிஒய்எப்ஐ

6) சுபாஷ், டிஒய்எப்ஐ

7) ரவி ராய், சிபிஐ-எம்எல்

8) ஸ்வேதா ராஜ், ஏஐசிசிடியூ

9) பிரசாந்த்ஜித், பொதுச்செயலாளர் ஏஐஎஸ்ஏ

10) கண்வால்பிரித் கவுர், வழக்கறிஞர்

11) அமித், பார்வர்ட் பிளாக்

12) விவேக் ஸ்ரீவஸ்தவா, சிபிஐ

13) சஞ்சீவ் ராணா, சிபிஐ