அக்னிபத் திட்டம்: பணிஓய்வு திட்டம், ஆளெடுப்பு ஊழல் மோசடி! அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறு!!
அக்னிபத் என்றால் நெருப்புப் பாதை என்று பொருள். 1973 ஆம் ஆண்டு ஹரிவன்ஷ் ராய் பச்சன் இந்தப் பெயரில் ஒரு சிறு கவிதையை எழுதியபோது, அய்ம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இது உண்மையில் நாட்டில் தீப்பிழம்பை கட்டவிழ்த்துவிட்டு நாட்டை சாம்பலாக்கும் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பாடலை, மானுட மன உறுதியின் சக்தியை அல்லது எந்த ஒரு துன்பச்சூழலிலும் துவளாத மானுட அர்ப்பணிப்பை விவரிக்கும் ஒரு எழுச்சிப் பாடலெனக் கூறலாம். 1990 இல் இந்தப்பாடலின் தலைப்பால் உந்துதல் பெற்று, திரைப்படம் ஒன்று இதே பெயரில் 1990ல் வெளிவந்தது. அது தனது தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் வளரும் ஒரு சிறுவனைப் பற்றியதாகும். 2012 இல் இப்படத்தின் மறுஆக்கம் ஒன்றும் வந்திருந்தது. இப்போது அக்னிபத், இந்திய ஆயுதப்படைகளில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மந்திர மாற்றமாக முன்தள்ளப்படுகிறது.
முதலாவதாக, இந்த அறிவிப்பை நரேந்திர மோடி வெளியிடவில்லை, ஊடக வெளிச்சத்தைக் கவரும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜூன் 14 அன்று முப்படை தளபதிகள் முன்னிலையில் இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றார். உண்மையில், பிரதமர் இன்னும் இந்தத் திட்டத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை, இந்த திட்டத்துக்கான எதிர்ப்பு நாடு தழுவிய அளவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தனது சகாக்களிடமும், கட்சித் தலைவர்கள் மற்றும் இராணுவ உயர்மட்டத் தலைவர்களிடமும் எதிர்ப்பை சரி செய்யும் பணியை ஒப்படைத் திருக்கிறார். இந்தியாவின் இளைஞர்கள், ராணுவத்தில் சேரவிரும்புபவர்களுக்கும் நரேந்திர மோடியின் திடீர் பண மதிப்பிழப்பு, பொது முடக்க அறிவிப்புகளைப் போலவே இந்தத் திட்டமும் அதிர்ச்சியளித்திருக்கிறது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வேலைவாய்ப்பின் மையிலும் விலைவாசி உயர்விலும் தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள், மோடி அரசாங்கத்தின் தொடர் ஏமாற்று பேச்சுக்களை கடந்த சில வருட அனுபவங்களில் உணர்ந்து, விரைவாகவே அதிர்ச்சியை சமாளித்து எதிர்ப்புப் போராட்டங்களில் பொங்கி எழுந்துள்ளனர்.இராணுவத்திற்கு இளம் ரத்தம் பாய்ச்சுவது என்ற பெயரில் இத்திட்டம், ஆட்சேர்ப்பு செயல்முறையில் ஒட்டுமொத்தமானதொரு மாற்றத்தை கொண்டுவர முயல்கிறது. இத் திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட 46000 இளைஞர்கள், பெண்கள் (இப்போது, ஒரு முறை சலுகையாக 23 வயது வரை தளர்வளிக்கப்பட்டிருக்கிறது) ஆண்டுதோறும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நான்கு வருட சேவைக்குப் பிறகு, பணியமர்த்தப் பட்டவர்களுள் 75 சதவீதத்தினர் அக்னிவீரர் சான்றிதழ், சுமார் 12 லட்சம் ரூபாய் வரியில்லா பணி முறிவு தொகுப்பு மற்றும் பாதுகாப்பு ஊழியர்களாக சில சேவை துறைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணி நியமன முன்னுரி மையுடன் பணி ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், மிகவும் பேசப்பட்ட, ஒரு பதவி ஒரு ஓய்வூதியத் திட்டம் என்பது, பதவியும் இல்லை ஓய்வூதியமும் இல்லை என்பதாக மறுக்கப்பட்டு விட்டது. ராணுவ வீரர்களுக்கான சம்பளம், ஓய்வூதியக் குறைப்பு திட்டம் என்பது, அரசாங் கத்தைப் பொறுத்தவரையில் உண்மையில் மிகப்பெரிய பொருளாதார நியாயம் என்றாலும் அக்னிவீரர்களுக்கு இது மிகப்பெரிய பொருளாதார இடியாகும். உண்மையை தெளிவுபடுத்திட வேண்டு மாயின், 2019-20 ஆம் ஆண்டில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தின் கீழ் 80,000க்கும் மேற்பட்டோர் இராணுவத்தின் நிரந்தரப் பணிகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். கொரோனாவை, ஒரு தெய்வீக வாய்ப்பு என இராணுவ விவகாரத் துறையின் கூடுதல் செயலாளரால் குறிப்பிடப்பட்டது போல, பெரும் தொற்றினால் ஏற்பட்ட இரண்டு ஆண்டு கால இராணுவ வீரர்கள் பணி நியமன முடக்கத்தினால், வழக்கமான வீரர்களின் எண்ணிக்கை சுமார் 11,500 ஆகக் குறைந்துவிடும். இந்த ஒட்டுமொத்த ஒப்பந்த முறையின் மூலம், ஆயுதப்படைகளின் சராசரி வயது விகிதம் படிப்படியாகக் குறைப்பதை சாத்தியமாக்க முடியும். என்றாலும் இராணுவ வீரர்களின் அமைப்பு ஒருமைப்பாட்டிலும் ஆயுதப்படைக ளின் ஆற்றலிலும் மோசமான விளைவுகளைக் கொண்டுவரும். ஒரு சிப்பாயின் செயல்திறனுக்கு மிகவும் முக்கியமான நீண்ட காலப் பொருளாதாரப் பாதுகாப்பு (நிரந்தர வேலை, நிலையான வருமானம், உத்தரவாத ஓய்வூதியம் மற்றும் குடும்பத்திற்கான மருத்துவப் பலன்கள்), அக்னிவீரர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். ஏனெனில், அவர்களில் 75% பேர் மிக விரைவாக ஓய்வு பெறுவதோடு (21 முதல் 25 வயதுக்குள்) நீண்ட நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். இத்திட்டம் 1939ஆம் ஆண்டு முதல் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், 2020ஆம் ஆண்டு பணியின் போதே விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், இத்திட்டம் பற்றி பெரும் அய்யத்தை எழுப்பிய தோடு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெறப்போகும் ஒரு சிப்பாய்க்காக இராணுவம் தனது அனைத்து வளங்களையும் முதலீடு செய்து ஒரு சிப்பாயைப் பயிற்றுவிப்பது எப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் என்று அவர் வெளிப்படையாகவே தனது வியப்பை வெளிப்படுத்தினார். ஓய்வுபெற்ற ராணுவ உயரதிகாரிகளில் மிகவும் பரிச்சயமான, மோடிக்கு தீவிர ஆதரவுக் குரலாக இருக்கும் மேஜர் ஜெனரல் ஜி.டி.பக்ஷி, அவர் திகைத்துப்போன இந்தப் புதிய சீர்குலைக்கும் மாற்றம் குறித்து சுட்டுரை வெளியிட்டுள்ளார். எந்தவொரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் அக்னிபத் திட்டத்தால் கவரப்படவில்லை மாறாக பெரும்பாலானோர் அதன் சீர்குலைக்கும் விளைவுகள் பற்றி கவலை அடைந்துள்ளனர். பெருத்த கவலைகள் இரண்டு புள்ளிகளி லிருந்து தோன்றுகின்றன. முதலாவது, இராணுவ கட்டமைப்பிற்காக இந்த திட்டத்தினை செயல்படுத்துவது, இரண்டாவதாக வெறும் நான்கு வருட இராணுவப் பயிற்சி, சேவைக்குப் பிறகு அக்னிவீரர்கள் சமூகத்துடன் எவ்வாறு மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என்பது பற்றிய
கவலைகளாகும். குறிப்பாக அக்னிபத் அடிப்படையிலான ஆட்சேர்ப்புக்குப் பிறகு, இராணுவத்தில் இரண்டு வகையான சிப்பாய்கள் இருப்பார்கள், வேலைப் பாதுகாப்புடன் கூடிய நிரந்தர வீரர்கள், இராணுவத்தில் தங்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து நிரந்தரமாக கவலையடையக் கூடிய குறுகிய கால ஒப்பந்த அக்னிவீரர்கள். மேலும், தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணியமர்த்தப்படக் கூடிய ஆண்கள் எண்ணிக்கை காரணியால் உறுதி செய்யப்பட்டுள்ள ராணுவத்தின் கூட்டமைப்புத் தன்மை அல்லது பிராந்திய சமநிலை அக்னிபத் திட்டத்தின் கீழ், ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத் தால் பெரும் குழப்பத்திற்கு ஆளாக நேரிடும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி வீரர்களின் மறுவாழ்வு, மறு ஒருங்கிணைப்பு பிரச்சனையின் அளவும் தன்மையும் ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும். தற்போது, வீரர்கள் நாற்பதுகளின் பிற்பகுதியில் அல்லது அய்ம்பது களின் தொடக்கத்தில் சராசரியாக இருபது ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெறு கின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் தனியார் பாதுகாப்புத் துறையில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசு அலுவலகங்களில் அல்லது சிறப்பு துணைக் காவல்துறைக் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இருபதுகளின் தொடக்கத்தில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறப்போகும் அக்னி வீரர்களுடன் இந்த முன்னாள் ராணுவ வீரர்கள் போட்டியிட வேண்டிவரும்.
இந்த இளம் அக்னிவீரர்கள் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி பெற்ற திறமையான இளைஞர்கள், பத்து இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட நிதி அடித்தளத்துடன், தாங்கள் விரும்பும் விதத்தில் எதிர்காலத்தை சிக்கலின்றி வடிவமைத்துக் கொள்ள முடியும் என்பது போன்ற ஒரு அழகிய சித்திரத்தை அரசாங்கம் தீட்டுகிறது. ஆனால், பாஜக தலைவர்கள் பேசுவதைக் கவனித்தால், இந்த ஆட்டத்தின் உண்மைத் தன்மைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உரத்துப் பேசும் பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா. பாஜக அலுவலகங்களில் இவர்களை காவலர்களாக நியமித்துக் கொள்ள முன்வந்துள்ளார். மற்றொரு பாஜக செய்தித் தொடர்பாளரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.யுமான மகேந்திர சிங் சோலங்கி கூறுகையில், நான்கு ஆண்டுகள் நாட்டைக் காப்பாற்றிய பிறகு, அக்னிவீரர்கள் தங்கள் குடும் பங்களை பிற மதத்தினரிடம் இருந்து காப்பாற்றுவார்கள் என்கிறார்! இஸ்ரேலின் ஊதியமே இல்லாத கட்டாய இராணுவப் பணி போலின்றி சிறிதளவாவது சம்பளம் பெறுகிறோமே என்று அக்னிவீரர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும், என்று கூறுகிறார்!
பாசிச இத்தாலியில் முசோலினியின் கருஞ்சட்டை, நாஜி ஜெர்மனியில் ஹிட்லரின் பழுப்புச்சட்டை, பிறகு எஸ்எஸ் படை ஆகியவற்றின் அவப்பெயர்பெற்ற பாத்திரத்தை நாம் நன்கு அறிவோம். இந்திய ராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்ட அக்னிவீரர்களை, அதிநவீன மற்றும் உயர் பயிற்சி பெற்ற பஜ்ரங் தளத்தை போல் சங்பரிவாரின் துணை ராணுவ அமைப்பின் ஒரு படைப்பிரிவாக ஆர்.எஸ்.எஸ் கருதுகிறதா? பாரதிய சேனாவுக்கு அல்லது இந்திய ராணுவத்திற்கு சேவை செய்வதற்குப் பதிலாக, அரசியலமைப்புச் சட்டத்தின்படி மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவை பாசிச இந்து ராஜ்யமாக மாற்றும் ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தும் பாரதிய ஜனதா கட்சி சேனாவை அமைக்க முயல்கிறார்களா?
'நல்ல நாள்' என்ற மோடியின் முற்றிலும் மோசடியான வார்த்தை ஜாலத்தை இளைய இந்தியா அடையாளம் கண்டுகொண்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, மக்கள்தொகை சார்ந்த ஈவுத்தொகை என்று பெருங்கூச்சல் போட்ட அரசு இப்போது பணியிடங்களை நீக்குவது, நிரந்தரப் பணியாளர்களைக் குறைப்பது, வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஓய்வூதியத் திட்டங்கள் போன்றவற்றில் இறங்கியுள்ளது! ரயில்வே, பிற அரசுத் துறைகள் முதல் பள்ளி, கல்லூரிகள் வரை மற்ற வேலைவாய்ப்புத் துறைகளில் படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதை இராணுவ பணி ஆர்வலர்கள் கவனித்திருக்கிறார்கள். அக்னிபாத் திட்டத்தால் தூண்டப்பட்ட கோபம், இராணுவ ஆட்சேர்ப்பு மைய பகுதிகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படப் போவதில்லை, இது இந்தியாவின் பிற வேலையற்ற, துரோகமிழைக்கப்பட்ட இளைஞர்களை உத்வேகப் படுத்தும் அனைத்து ஆற்றலையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. 14 ஜூன் 2022ல் பற்ற
வைக்கப்பட்ட தீ 1975ஆம் ஆண்டின் அவசரநிலை மற்றும் 1977இல் அதன் முடிவு ஆகிய இரண்டிற்கும் முன்னோடியான ஜெய்பிரகாஷ் நாராயணனால் ஈர்க்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முழுப் புரட்சி இயக்கத்தைத் தூண்டிய ஜூன் 5, 1974இல் ஏற்பட்ட தீயையொத்தது. இளைஞர்களுக்கு தற்கால இந்தியாவின் போராட்ட வடிவ மாதிரியாக விவசாய சட்டங்களை ரத்து செய்ய மோடி அரசாங்கத்தை அடிபணிய செய்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை வழிநடத்தி தற்போதும் பிற நியாயமான விவசாயக் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் விவசாயிகள் இயக்கம் உள்ளது. மாபெரும் 1857 கலகம் தொடங்கியது முதல் சிப்பாய்கள் சீருடையில் இருப்பது பெரும்பாலும் விவசாயிகளே. இன்றைய இராணுவப் பணி ஆர்வலர்களில் பெரும் பாலானோர் கிராமப்புர இந்திய விவசாயிகளின் பிள்ளைகள். அக்னிபத் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரும் போராட்டம், விவசாயிகள் இயக்கத்தின் விடாமுயற்சி மற்றும் ஒற்றுமை, நெகிழ்திறன் உறுதிப்பாட்டிலிருந்து கற்றுக் கொண்டு நம்பிக்கையுடன் முன்னேறட்டும். அரசாங்கம் போராட்டக்காரர்களை அச்சுறுத்த, மிரட்ட முயற்சிக்கிறது; ஆனால் போராட்டக் காரர்கள் மக்களின் ஆதரவுடன் நிச்சயம் அரசை தோற்கடித்து பின்வாங்கச் செய்வது உறுதி.  
லிபரேஷன் 2022 ஜூலை தலையங்கம் -

தமிழாக்கம் - விஜி