தலையங்கம்

திராவிட மாதிரி புதிய மொந்தையா?! சில நாட்களுக்கு முன்பு இகக(மாலெ) தோழர்கள் சென்னை தாம்பரம் மாநகராட்சியில் மேயரிடம் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனு கொடுக்கச் சென்றார்கள். அவர்களிடம் மேயரின் தந்தை வாக்குவாதம் செய்து அராஜகமாகப் பேசியுள்ளார். இச் செயலானது மனைவியை மேயராகவோ, கவுன்சிலராகவோ, பஞ்சாயத்துத் தலைவராகவோ ஒப்புக்கு வைத்துவிட்டு அவர்களது கணவர்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டு பவனி வருவதைப் போன்றுதான். பெண்கள் அதிகாரத்தில் இருக்க, உண்மையில் அதிகாரத்தை கையில் வைத்திருப்பது, அவர்களது கணவர், தந்தை, சகோதரன்தான். மேயரைப் பார்த்து மக்கள் மனு கொடுக்க வந்தால் அவர்களிடம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியான மேயர்தானே பேச வேண்டும், மேயரின் தந்தைக்கு அங்கு என்ன வேலை? தன் மகளைப் பார்க்க வந்தார் என்றாலும் மனு கொடுக்க வந்தவர்களிடம் பேசுவதற்கு அவருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள்? 3.7.2022 அன்று நாமக்கல்லில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளையெல்லாம் குறிப்பாக திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்து மாபெரும் மாநாட்டை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்தியிருக்கிறார். அதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இதுபோன்று பெரியார் மண்ணில், பதவியை பெண்கள் கையில் கொடுத்துவிட்டு, அதிகாரத்தை அவர்கள் வீட்டு ஆண்கள் வைத்துக் கொண்டிருப்பது சரியானதல்ல என்று ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அது பெண்கள், தலித்துகள் சுயமாகச் செயலாற்றிடும் வகையில் உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதன் முதற்கட்டமாக தாம்பரம் மேயரின் தந்தை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்னொரு மேயர் உதயநிதி ஸ்டாலின் வந்தவுடன் அவரை வரவேற்க மேயர் உடையோடு ரோட்டிற்கு வந்து உதயநிதியின் காலில் விழுந்து வணங்குகிறார். மேயர், பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர் ஆகியோருக்கு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர் அதிமுக்கியமானவர்கள்தான். அதற்காக, தாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்துவிட்டுச் செயல்படுவது திராவிட மாதிரி ஆட்சியின் சிறப்பு ஆகாதே. மக்கள் அதிமுக ஆட்சியின் அவலங்களுக்காக, பாஜகவின் அடிமைகளாக அவர்கள் செயல்பட்டதற்காக அவர்களை தூக்கி எறிந்திடத்தான் திமுகவை ஆட்சியில் அமர வைத்தார்கள். ஆனால், திமுகவினர் அதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்களா என்று தெரியவில்லை. பாசிச பாஜக எதிர்ப்பு என்பதுகூட ஒப்புக்கானதாகவே உள்ளது திராவிட மாதிரி ஆட்சியில். ஆதீனங்கள் அதிகாரம் செய்கிறார்கள். அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்கள். அறநிலையத் துறையிடமிருந்து இந்துக் கோயில்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி-சங்கிகள் கத்துகிறார்கள் என்பதற்காக அறநிலையத்துறை அமைச்சரோ பக்திப் பழமாகப் பவனி வந்து, கோயில்களுக்கான பூசை விவகாரங்களில்தான் அதிக அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறார். கோயில், மடங்களின் சொத்துக்களை அரசு கைப்பற்றி நிலமற்றவர்களுக்கு வழங்குவது தொடர்பாக எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் இல்லை. சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் கொட்டம் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் அன்னியூரில் இடுகாட்டுக்குப் போக பாலம் இல்லாததால் கழுத்தளவு தண்ணீரில் இறந்தவரை எடுத்துச் செல்கிறார்கள். இந்த அவலம் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. இதை சரி செய்ய திமுக அரசு முன்வரவேண்டும். மாறாக பாஜகவின் வன்மையான இந்துத்துவத்தை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் தலைவர் கோயில் கோயிலாக சுற்றி மென்மையான இந்துத்துவாவாக மாறியது போல்தான் திமுக அரசின் செயல்பாடும் இருந்து கொண்டி ருக்கிறது. வன்மையான இந்துத்துவாவை வீழ்த்தை, வன்மையாக பெரியார் கொள்கைகளையே கையில் எடுக்க வேண்டும்.