பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளரும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவருமான எம்.சுந்தர்ராஜ் மற்றும் இகக(மாலெ) நெல்லை பாட்டப்பத்து கிளைச் செயலாளர் பேச்சிராஜா ஆகியோர் குடியிருக்கும் பகுதியில் ஊர்க் கமிட்டி என்ற பெயரில் கந்து வட்டிக் கும்பல்கள், கட்டப்பஞ்சாயத்து நடத்துவதையும் ஊர்க் கமிட்டியில் ஊர் மக்களின் சீட்டுப் பணத்தை கையாடல் செய்ததையும் தட்டிக் கேட்டார்கள் என்பதற்காக பேச்சிராஜாவை ஊர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லி, அவர் மறுத்ததால் பேச்சிராஜாவின் குடும்பத்தை ஊர் விலக்கம் செய்து அவரின் திருமணத்திற்கு யாரும் செல்லக் கூடாது என்று அறிவித்தார்கள். இது தொடர்பாக மாவட்ட வருவாய் துறை அதிகாரி அவர்களுக்கு புகார் கொடுக்கப்பட்டு அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நெல்லை நகர காவல் உதவி ஆணையர் திரு.விஜயகுமார் கட்சி நிர்வாகிகளான சுந்தர்ராஜ் மற்றும் பேச்சிராஜாவையும் கட்சியையும் அவமரியாதையாகவும் அவதூறாகவும் பேசியது மட்டுமின்றி கட்சியையும் அவதூறாகப் பேசி, அவர்கள் மீது பொய் வழக்குப் போட முயற்சிக்கும், இதன் பின்னணியில் பாஜக-இந்துமுன்னணியினர் மற்றும் நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இருந்து வரும் நிலையில், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக நெல்லையில் பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, இந்து முன்னணி கும்பல்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாக, அவதூறாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் திரு. விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 20.6.2022 அன்று மாலை நெல்லை நகரம் வாகையடி முனை அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் த.சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.ரமேஷ் கண்டன உரையாற்றினர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டச் செயலாளர் எஸ்.காசிவிஸ்வநாதன், திராவிட தமிழர் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் கதிரவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய்தித் தொடர்பாளர் முத்துவளவன், தமிழ் உரிமை மீட்புக் களம் அமைப்பாளர் லெனின் கென்னடி உரையாற்றினர். மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் கணேசன், கருப்பசாமி, அந்தோணிராஜ் மற்றும் சிவகாமிநாதன், பேச்சிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் ஊர் விலக்கம் கட்சித் தோழர்கள் மீது தொடர்கிறது. எனவே தொடர் போராட்டங்களுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.