இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையடைந்த 75 ஆம் ஆண்டில், அதை அனனவரும் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியாளர்கள் யார் என்றால், விடுதலைக்காகப் போராடியவர்களை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள். ஆங்கிலேயர் களிடம் தங்களுக்குச் சேவை செய்யக் கடன்பட்டுள்ளேன், என்னை சிறையில் இருந்து விடுவித்திடுங்கள் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரின் வாரிசுகள். நாட்டு விடுதலைப் போரின் போது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக, இந்திய நாட்டை மதரீதியாகத் துண்டாடத் துடித்த கோல்வார்க்கரின் வாரிசுகள் சனாதன இந்துமத வெறி கோட்சே வாரிசுகள்.

அவர்களின் வழிவந்த பிரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில் சந்தடிச் சாக்கில் சாவர்க்கரை, விடுதலைப் போராட்ட தியாகிகள் பட்டியலில் சேர்க்கிறார். வட நாட்டுப் பத்திரிகைகளில் (தி இந்து உள்பட) பகத்சிங், காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற விடுதலைப் போராட்ட தியாகிகள், தலைவர்கள் படங்களுடன் சாவர்க்கரின் படமும் உள்ளே நுழைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் சாவர்க்கர் படம் அவ்வாறு பத்திரிகைகளில் போடப்படவில்லை என்றாலும் சங்கிகள் சந்து பொந்துகளில் சாவர்க்கரை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பச்சை தமிழச்சி நான் என்று சொல்லிக் கொள்ளும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், சாவர்க்கர் போன்று இன்று யாராவது அந்தமான் சிறையில் இருக்க முடியுமா? என்று கேட்கிறார். ஆங்கிலேயேருக்குப் போட்டியாக, தன் சொத்தை யெல்லாம் இழந்து, சுதேசிக் கப்பல் விட்டு, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் செக்கிழுத்து சித்தரவதைக்குள்ளான வ.உ.சி, சிறை சித்தரவதையால் தொழுநோய் கண்ட சுப்பிரமணிய சிவா, புரட்சித் தீ மூட்டிய பாரதி போன்றோர் தமிழிசையின் கண்ணுக்குத் தெரி யாததில் வியப்பில்லைதான்.
விடுதலைப் போராட்டத்திற்கு முதல் குரல் தமிழகத்தில் இருந்துதான் வந்தது. அதேபோல் இந்தியாவில் முதல்முதலாக ஒரு அரசியல் காரணத்திற்காக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததும் தமிழ்நாட்டில்தான். ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில்தான். வஉசி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி ‘கோரல் காட்டன் மில்' தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தூத்துக் குடியில் மட்டுமல்ல இந்த மில்லின் சென்னை கிளையிலும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஆங்கிலேய அரசாங்கம் அந்த வேலை நிறுத்தத்தை ஒடுக்க கடும் ஒடுக்குமுறையைக் கையாண்டது. கோரல் மில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலா ளர்கள், ஓட்டுநர்கள் என எல்லா தொழிலாளர் களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அது திருநெல்வேலி எழுச்சியாக உருவெடுத்தது.

விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் டுகளின், விவசாயிகளின், பாட்டாளிகளின் பங்கு அளப்பரியது. இரயில்வே தொழிலாளர்கள், கப்பல் தொழிலாளர்கள், விவசாயிகள் உழைக்கும் மக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சாதி, மதம் கடந்து ஒன்றுபட்டார்கள். நீலச் சாயம் தயாரிக்கும் இண்டிகோ பயிரை பயிரிடச் சொன்னதால் வங்கத்தில் விவசாயிகள் போராட்டக் களத்தில் குதித்தார்கள். இங்கி லாந்தின் ஜவுளி ஆலைகளுக்காக பஞ்சு பயிரிடவும் இங்கிலாந்து படைவீரர்களுக்காக கோதுமை பயிரிடவும் இந்திய விவசாயிகள் கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.

இந்தியாவில் பாரம்பரியமாக இருந்த கைவினைத் தொழில்கள் இங்கிலாந்தின் பட்டரைத் தொழில்களால் ஒழித்துக் கட்டப் பட்டன. அப்படித்தான் தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் வகையில் நெய்யப்பட்ட பத்தமடைப் பாய் தொழில் அழிக்கப்பட்டது. இங்கிலாந்தின் முதலாளிகளுக்காக இந்தியாவில் தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்பட்டார்கள். தேயிலைத்தொழில், சணல் தொழில், சுரங்கத் தொழில் என தொழில்மயம் ஆன காலக்கட்டம் அது. ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளி யேற்ற வேண்டும் என்று விடுதலை எழுச்சி ஒரு பக்கம் என்றால், அந்த ஆங்கிலேயர்கள் தொழிலாளர்களை, விவசாயிகளைக் கொத்தடி மையாக நடத்தியதற்கு எதிராக உரிமைக்கான போராட்டங்கள் வெடித்தன. அதன் விளை வாகத்தான் தொழிற்சங்கச் சட்டம், தொழிற் சாலைகள் சட்டம், தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம், கூலிச் சட்டம் என பல்வேறு தொழி லாளர் நலச் சட்டங்கள் உருவாக்கப் பட்டன. விடுதலைப் போரின் வேட்கையின் ஊடே, அக்கம்பக்கமாக உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டங்களும் நடந்தன. மும்பை, நாக்பூர் போன்ற தொழில் மையங்களில் தொழிலாளர்களின் போராட்டங்கள் 1908ல் வெடித்தன.

அப்படி தங்கள் இன்னுயிரைக் கொடுத்துப் பெற்ற உரிமைகளுக்கான சட்டங்களை, இன்று ஆங்கிலேயர்க்கு சேவகம் செய்த சாவர்க்கரின் வாரிசுகளான மோடியும் அமித் ஷாவும் அம்பானிக்களுக்காகவும் அதானிகளுக்காகவும் நான்கு தொகுப்புகளாக்கி உரிமைகளையெல்லாம் ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தோழர் பகத்சிங், அன்றே சொன்னார். வெள்ளை நிறக் கொள்ளைக்காரர் களிடம் இருந்து நாடு பழுப்பு நிறக் கொள்ளைக் காரர்களின் கைகளில் சென்றுவிடக்கூடாது என்று சொன்னார். தோழர் பகத்சிங்கோடு சேர்ந்து தோழர் சுகதேவ்வும் தோழர் ராஜகுருவும் தூக்கிலிடப்பட்டார்கள். ஆனால், இப்போது நாடு கொள்ளைக்காரர்களிடம் மட்டுமல்ல காவிப் பாசிஸ்டு களிடம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்துத்துவ சக்திகளிடம் நாடு சிக்கிக் கொண்டால், அவர்களிடமிருந்து நாட்டை மீட்பது மிகக் கடினம். அதனால் எப்பாடு பட்டாவது இந்துத்துவ சக்திகள் நாட்டை கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அவர் எச்சரித்தது போலவே இன்று நாடு இந்துத்துவ வாதிகளின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. அவர்கள் தங்கள் விருப்பம்போல் எல்லாவற் றையும் மாற்றுகிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றையே மாற்றுகிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை சாவர்க்கர் என்று பள்ளிக்கூடத்தில் போட்டி நடத்தி, வரலாற்றை மாற்றி எழுதப் பார்க்கி
றார்கள். காந்தியைக் கொன்ற கொலைகார கோட்சேவை தியாகியாக்கப் பார்க்கிறார்கள். தேசியக் கொடியின் மாண்பை, மரியாதையை குறைத்து சிறுமைப்படுத்து கிறார்கள். கதர் துணியில் தைக்க வேண்டிய மூவர்ணக் கொடியை, பாலிஸ்டர் துணியில் தைக்க அனுமதி அளித்து அதை அம்பானி விற்று காசாக்கச் செய்கிறார்கள். அது மட்டுமின்றி, தேசியக் கொடியைக் கொண்டு முகம் துடைத்த மோடியின் இந்த (மூன்று நாட்கள் தேசியக் கொடி ஏற்றும்) முடிவால், தேசியக் கொடிக்கான மரியாதையே போய்விட்டது. பல பாஜகவினர் கொடியைத் தலைகீழாகப் பிடித்தார்கள். சிலர் அதை கீழே விரித்து உட்கார்ந்தார்கள். கீழே தேசியக் கொடியைக் கட்டி அந்தக் கம்பத்தின் மேலே பாஜக கொடியைக் கட்டினார்கள். விடுதலைப் போரின் போது, எவ்வளவு அடித்தாலும் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்லி கடைசி வரை கொடியை தாழவிடாமல் உயிர்நீத்த கொடி காத்த குமரனின் தியாகத்தை சிறுமைப் படுத்தும் வகையில் சங்கிகள் இதை திட்ட மிட்டே செய்தார்கள்.

அதனால்தான், இந்த 75ஆவது சுதந்திர நாளில் உண்மையான தியாக விடுதலை வரலாற்றை, கம்யூனிஸ்ட்டுகள், புரட்சியாளர்கள், உழைக்கும் மக்கள் நடத்திய இந்திய விடுதலைப் போரை நம் மக்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது.

முதல் தொழிற் சங்கத்தை சென்னையில் தொடங்கிய சிங்காரவேலர் ஒரு விடுதலைப் போராளி. காங்கிரஸில் இருந்த பலரும் சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்டுகளாவார்கள். பலர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். முதல் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த 138 பிரதிநிதிகளும் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் என்கிற ரீதியில் மொத்தம் அவர்கள் 414 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்கள். காங்கிரஸ்காரராகச் சிறைக்குள் சென்ற தோழர் ஜீவானந்தம் ஒன்பது மாதங்கள் கழித்து வெளியே வரும்போது கம்யூனிஸ்ட்டாக வந்தார். தந்தை பெரியார்கூட காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆரம்பத்தில் விடுதலைப் போராட்டத்தில்தான் ஈடுபட்டார். 100 வயதைக் கடந்தும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் சங்கரய்யா, 97 வயதை எட்டிய பின்னரும் பாசிசத்திற்கு. எதிரான எழுச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும், திருநெல்வேலி சதி வழக்கில் கைது செய்யப் பட்டு சித்தரவதை அனுபவித்த தோழர் நல்ல கண்ணு, கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக ஆகாமல் கம்யூனிஸ்ட்டாக வாழந்த தோழர் சர்க்கரைச் செட்டியார், மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் இருந்த, இந்தியாவில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் பிரதிநிதியான தோழர் சிங்காரவேலர், தஞ்சை வயல் வெளிகளில் புரட்சித் தீயை மூட்டிய தோழர் சீனிவாசராவ், பி.சுந்தரய்யா, விடுதலைக் கான பாடல்களை வீதியெங்கும் பாடிய தோழர் ஜானகியம்மாள், நாடத்தின் மூலம் நாட்டு விடுதலைப் பாடல்களை முழங்கிய விஸ்வநாத தாஸ், தெலுங்கானா போராட்டத்தில் முக்கிய பங்குபெற்ற தோழர் பசவப்புன்னையா, தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இருந்து கொண்டு விடுதலைப் போரில் பங்கெடுத்த தோழர் ஜி.எஸ்.மணி, மதுரை சதி வழக்கு மற்றும் சென்னை சதி வழக்கில் கைது செய்யப்பட்ட தோழர் பி.ராமமூர்த்தி, ஒன்பது ஆண்டுக ளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்த தோழர் உமாநாத், கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான தோழர் முசாபர் அகமது, இலக்கியவாதியும் எழுத்தாளருமான தோழர் மாயாண்டி பாரதி என விடுதலைப் போராட் டத்தில் சிறை சென்றும், தலைமறைவு வாழ்க்கை நடத்தியும் நாட்டிற்காக தியாகம் செய்த கம்யூனிஸ்ட்டுகள், தொழிற்சங்கவாதிகளின் எண்ணிக்கையை எண்ண முடியாது.

சென்னை பி&சி மில் தொழிலாளர்களின் போராட்டம் 1921ல் நடைபெற்றது. தோழர் சிங்காரவேலர் 1923ல் இந்தியாவின் முதல் மே நாள் முழக்கத்தை முன்வைத்தார். வேல்ஸ் பிரபுவின் வருகையை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் வெடித்தது. நாடெங்கிலும் நாட்டு விடுதலைப் போரில் முன்னின்றவர்கள் தொழிலாளர்களும் விவசாயிகளும்தான். தமிழ்நாட்டில் கட்டப்பொம்மன் படத்தின் வசனம் நம் எல்லாருக்கும் நன்கு தெரியும். இந்திய நாட்டிற்குள் வந்து இங்குள்ள விவசாயத்தை அழித்து, மக்களைக் கொத்தடிமை களாக்கி, உழைப்பைச் சுரண்டி இங்கிலாந்திற்கு கொண்டு சென்றது மட்டுமின்றி, இந்திய மக்கள் மீது வரி விதிப்பு செய்து கொடுங்கோல் ஆட்சியை ஆங்கிலேயர் கட்டவிழ்த்து
விட்டபோது, 1700களின் கடைசியிலும் 1800களின் ஆரம்பத்திலேயும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கலகக் குரல்கள் தமிழ்நாட்டில் ஆரம்பித்து விட்டது. 1857 முதல் சுதந்திரப் போருக்கு முன்பே தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கான வேட்கை ஆரம்பித்துவிட்டது. அவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்களால் கொல்லப் பட்டார்கள். கட்டப்பொம்மு, ஊமைத்துரை, மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி நாச்சியார், பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிக்காலடி, வீரன் சுந்தரலிங்கம் ஆகியோர் ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிராகக் கலகக் கொடி பிடித்தார்கள்.

இந்திய சுதந்திரப் போரினை தாங்கள் நடத்தியதாகவும் அதற்குத் தலைமை தாங்கிய வர்கள் தாங்கள்தான் என்பதுபோலவும் கோயபல்ஸ் குணம் கொண்ட சங் பரிவார் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரத்தைத் துவங்கியிருக்கிறார்கள். உண்மையில், இந்த நாட்டில் விடுதலைக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என்பது மட்டுமல்ல, இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர் களும்தான் போர்க்களத்தில் நின்றார்களேயொழிய இந்தச் சங்பரிவார் கும்பல்களின் முன்னோடிகள் அல்ல. போர்க்களத்தில் இருந்தவரை ஆங்கிலே யருக்குக் காட்டிக் கொடுத்தவர்தான் வாஜ்பாய் என்று வரலாறு சொல்கிறது. அதனால்தான் அதை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் இந்த சங்பரிவாரக் கும்பல்கள்.

   ஜாலியன் வாலாபாக் படுகொலையில் செத்து மடிந்தவர்கள் இஸ்லாமியர்கள். இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த திருமதி சுரையா பதுருதீன் இஸ்லாமியர். ஜே.சி. குமரப்பா, பண்டித ரமாபாய், அன்னம்மாள், அம்ரித் கவுர், டைட்டஸ் என கிறிஸ்தவர்களும் கூட விடுதலைப் போரில் பங்குபெற்றார்கள். இந்தச் சங்கிகளின் முன்னோடிகள் போல், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரை கொச்சைப் படுத்திக் கொண்டு இந்து ராஷ்டிரமே இந்தியாவுக்கு வேண்டும் என்று சொல்லிக் கொண்டு ஆங்கியேருக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கவில்லை இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும். இந்திய விடுதலைக்கும் இந்த இந்துத்துவ சங்கிகளுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்களின் இந்துத்துவ நயவஞ்சக நரித்தனத்தை மக்கள் மத்தியில் தோலுரித்திடுவோம்.