கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் தோழர் சாரு மஜூம்தார் இறந்து 50 ஆண்டுகளாகி விட்டன. நக்சல்பாரியைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய புரட்சி அலைக்கு அவரது மரணம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அந்த சமயத்தில் இந்திய அரசு எதிர்பார்த்து பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்க வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி ஆட்சிக்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்புக் குரலையும் ஒடுக்கும்போதும், 'நகர்ப்புற நக்சல்' என்று சொல்ல வேண்டியதாகி விட்டது. சாரு மஜூம்தார் இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும், நக்சல்பாரி, சாரு மஜூம்தார் பூதம் இந்திய ஆட்சியாளர்களை துரத்திக் கொண்டிருக்கிறது.மே 1967இல் நக்சல்பாரியில் விவசாயிகள் எழுச்சி வெடித்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதை 'வசந்தத்தின் இடி முழக்கம், இந்தியா முழுவதும் முழங்கிக் கொண்டி ருக்கிறது' என்று கூறி வரவேற்றது. நக்சல்பாரியால் காணப்பட்ட விவசாயப் புரட்சியின் பாதை, பெருமளவில் சீனப் புரட்சியின் பாதையால் ஈர்க்கப்பட்டிருந்தது. சாரு மஜும்தாரும் நக்சல்பாரியும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இதக(மாலெ)வும் சீனா. சீனப் புரட்சி மற்றும் மாசேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கப்பட்டது. ஆனால், நக்சல்பாரி மற்றும் இதக(மாலெ) கட்சி, பல வழிகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை இந்தியாவின் சமூக, வரலாற்று மண்ணுக்குள் ஆழமாக எடுத்துச் சென்றது. மார்க்சியத்தின் இந்தியமயமாக்கல், மார்க்சியத்தின் உலகளாவிய புரட்சிக் கொள்கைகளை இந்தியாவின் குறிப்பிட்ட நிலைமைகள், சூழலுக்குப் பொருத்துதல் என்பதை நோக்கிய ஒரு மாபெரும் முன்னெடுப்பாக நக்சல்பாரி இருந்தது.நக்சல்பாரி, ஒரே இரவில் நடந்து விடவில்லை. இந்தியாவின் விவசாய இயக்கத்தின் போர்க்குணம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் இது தெளிவான ஆழமான வேர்களைக் கொண்டிருந்தது. பிரிக்கப்படாத வங்காளத்தின் உழைக்கும் விவசாயிகளின் நிலம் மற்றும் பயிர் உரிமைகளை
மையமாகக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தெபாகா இயக்கத்தின் முன்னணி அமைப்பாளர்களுள் ஒருவரான சாரு மஜூம்தார், 1948 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது அந்தக் காலத்தின் பல கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, வடக்கு வங்காள மாவட்டங்களான டார்ஜிலிங், ஜல்பைகுரியில் நடந்த தெபாகா போராட்டத்திற்கு அவர் திரும்பினார். தெபாகா நாட்களில் இருந்து தொடர்ந்த போர்க்குணமிக்க விவசாயிகள் இயக்கத்துடனான இந்த ஆழமான நீடித்த தொடர்புதான் நக்சல்பாரியில் விவசாயிகளின் எழுச்சியைக் கற்பனை செய்து அதை ஒரு பரந்த விவசாயப் புரட்சியை நோக்கி வழிநடத்த சாரு மஜூம்தாருக்கு வழிகாட்டியது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடந்த பெரும் விவாதத்தில் ஏதாவது ஒரு தரப்பை ஆதரிப்பது பற்றிய கேள்வி அவருக்கு முக்கியமானதாக இருக்கவில்லை; மாறாக மிக முக்கியமாக, இந்தியாவிற்கான வர்க்கப் போராட்ட அரங்கில் பெரும் புரட்சிகர ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவது பற்றியதாக இருந்தது.

இந்தியாவின் ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் மேட்டுக்குடி பின்னணியில் இருந்து வந்தவர்கள் ; வெளிநாட்டில் படிக்கும் போது கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப் பட்டவர்கள். சாரு மஜும்தார், முற்றிலும் வேறு பட்ட பாரம்பரியத்தின் வாயிலாக கல்வி பெற்ற வர்; அவர் பிரிக்கப்படாத வங்காளத்தில், சுதந்திர இயக்கத்தின் கம்யூனிஸ்ட் நீரோட்டத்தில் சேர்ந்தார், விவசாயிகளை அமைப்பாக்குவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

நக்சல்பாரியின் விவசாயிகளின் எழுச்சி மாணவர்களிடையே மாபெரும் புரட்சிகர விழிப்புணர்வை ஏற்படுத்தியபோது, சாரு மஜும்தார் மாணவர்களை உடனடியாக கிராமங்களுக்குச் சென்று நிலமற்ற ஏழைகளுடன் ஒன்றிணையும்படி அழைப்பு விடுத்தார். உண்மையில் அவர் தனது இளமைக் காலத்தில் கடந்து வந்த பாதையிலேயே மறுபடியும் பயணித்தார். இளைஞர்கள், இந்தியாவின் உழைப்பாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்திய இளைஞர்களுக்கு பகத்சிங் கொடுத்த அழைப்பும் கூட

நக்சல்பாரிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்து புதிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்தனர். இந்தப் புதிய கட்சியைத் தொடங்கும் போது, சாரு மஜும்தார் அதன் புரட்சிகர மரபு குறித்து வலியுறுத்தினார். அவர், புதிய கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர நீரோட்டமாகக் கண்டார்; இது கேரளாவின் கையூர் மற்றும் புன்னப்புரா வயலார் எழுச்சிகள், ஆந்திராவின் மாபெரும் தெலுங்கானா இயக்கம் மற்றும் பிரிக்கப்படாத வங்காளத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெபாகா விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனக் கருதினார்.

நக்சல்பாரி மற்றும் இகக(மாலெ) கட்சி, இந்தியாவின் காலனிய எதிர்ப்பு பற்றிய புதிய மற்றும் ஆழமான வாசிப்புக்கு உத்வேகத்தை அளித்தது. காலனிய இந்தியாவில் ஆதிவாசி களின் கிளர்ச்சிகளின் வரலாற்றை முன்னுக்குக் கொண்டுவந்ததன் மூலம் அந்நிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற கேள்விக்கிடமற்ற அவாவை, ஒரு பெரிய மக்கள் எழுச்சியின் தொடக்கத்தையும் அடையாளம் காட்டியது. நக்சல்பாரியின் சூறாவளிக் கட்டமும் அதனுடன் எழுந்த உடனடி பின்விளைவுகளின் போதும் சாரு மஜும்தாரும் நக்சல்பாரியால் உந்துதல் பெற்ற புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஸ்தாபக தலைமுறையினரும் முழுவதும் விவசாய கொரில்லா போரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாக, தேர்தல்கள் புறக்கணிக்கப்பட்டன, மேலும் வெகுமக்கள் அமைப்பு மற்றும் பொருளாதாரப் போராட்டத்தின் அன்றாட செயல்பாடுகள் பின்னுக்குச் சென்றன.

சாரு மஜும்தாருக்கு, இது ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு உகந்த மிகவும் அவசரமான குறிப் பிட்ட பதில்வினை மட்டுமே, வரவிருக்கும் எல்லா நேரங்களிலும் பயன்படுத்தும் ஒரு புதிய உத்தியாக இல்லை. நக்சல்பாரிக்கு முன்னர், வெகுமக்கள் அமைப்புக்கள் மற்றும் வெகுமக்கள் போராட்டங்களின் தேவையை சாரு மஜூம்தார் ஒருபோதும் ஒதுக்கித் தள்ளியதில்லை. அவரே ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இகக(மா) வேட்பாளராக சிலிகுரி தொகுதியில் போட்டியிட்டார்.

இந்திய அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட கடுமையான இராணுவ அடக்குமுறை; 1971 போரில் இந்தியாவின் வெற்றியை அடுத்து, 'வறுமையே வெளியேறு' முழக்கத்தாலும் வங்கி தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளாலும் இந்திராகாந்தி தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்ட அதிரடியான அரசியல் சூழ்நிலையிலும் சாரு மஜும்தார் தனது கடைசி கட்டுரைகளில் பின்னடைவைக் கடக்க வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தி எழுதினார். மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பது, கட்சியின் உச்சபட்ச நலன்களாக மக்களின் நலன்களை நிலைநிறுத்துவது, மத்தியில் இந்திரா அரசின் எதேச்சதிகார தாக்குதலுக்கு எதிராகவும் மேற்கு வங்கத்தில் சித்தார்த்த சங்கர் ரே ஆட்சிக்கு எதிராகவும் பரந்த அளவிலான இடதுசாரிகள் மற்றும் போராடும் சக்திகளுடன் ஒற்றுமையை உருவாக்கிட வேண்டும் என்பதுதான் சாரு மஜும்தார் தனது தோழர்களுக்கு இறுதியாகச் சொன்ன சொற்கள்.

சாரு மஜும்தாரின் இந்த கடைசி அழைப்புதான் போராட்டக் களத்தில் புரட்சிகர கம்யூனிஸ்டுகளை மீண்டும் அணிசேரத் தூண்டியது. பீகாரில் ஒடுக்கப்பட்ட கிராமப்புற ஏழைகளின் எழுச்சியின் எல்லையற்ற ஆற்றல், ஆழம், போர்க்குணத்தின் மீது நின்று. தோழர் சாரு மஜும்தார் தியாகியானதன் இரண்டாவது நினைவு நாளில் கட்சியின் மத்திய குழு மறுசீரமைக்கப்பட்டது. நக்சல்பாரி எழுச்சியின் முழுப் பாதையிலிருந்தும் தோழர் சாரு மஜூம்தாரின் அரசியல் பயணத்திலிருந்தும் பெற்ற உத்வேகமும் படிப்பி னைகளும் மறுசீரமைக்கப்பட்ட இசுக(மாலெ)க்கு பரந்த அளவிலான ஜனநாயக முயற்சிகள் மற்றும் போராட்டங்கள் வழியாக அவசரகால அடக்குமுறை, பின்னடைவைத் தாங்கி நிற்பதற்கு மட்டுமின்றி கட்சியின் உறுதியான மீட்சிக்கும் விரிவாக்கத்திற்கும் வழிவகுத்தது.

இன்று நவீன இந்தியா அதன் மோசமான அரசியல் பேரிடரை எதிர்கொண்டுள்ள நிலையில், இன்றைய பாசிச எதிர்ப்புப் பின்னணியில் சாரு மஜூம்தாரின் உணர்வு, லட்சிய நோக்கு மற்றும் அறிவு ஒரு புதிய பொருத்தத்தைப் பெற்றுள்ளது. அவசரநிலையோடு தொடர்புடைய ஜனநாயக மறுப்பும் அடக்குமுறையும் அறிவிக்கப்பட தேவை இல்லாத ஒன்றாக எங்கும் விரவியிருப் பதாகவும் நிரந்தரமானதாகவும் மாறிப் போயுள்ளது. மேலோங்கிய ஊடகத்தின் தன்மை
மிகவும் முழுமையாகவும், அதிரடியாகவும் மாற்றப்பட்டு, ஊடக தணிக்கையும் கூட தேவையற்றதாகிவிட்டது. இன்று நிர்வாக அதிகாரம் குடியரசின் மீதமுள்ள மூன்று தூண்களான நீதித்துறை, சட்டமியற்றும்துறை, ஊடகம் ஆகியவற்றுக்கு கட்டளையிடுகிறது. நிர்வாக அமைப்பைச் சுற்றி அதிகாரத்தை மையப்படுத்துதல் என்பது நாம் கொண்டிருந்த ஓரளவான கூட்டாட்சி சமநிலையையும் கூட முற்றிலும் சீர்குலைத்துள்ளது. இந்த கட்டுப் பாடற்ற மையப்படுத்தலும் அதிகாரக் குவிப்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வகுப்புவாத துருவசேர்க்கையும் வெறுப்பும் பெரிய அளவிலான பொய்களுடன் வருகின்றன.

நாட்டுப்பிரிவினையின் வலிமிகுந்த துன்பகரமான நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் சமூக, கலாச்சார கட்டமைப்பு இவ்வளவு பெரிய தாக்குதலை எதிர்கொண்டதில்லை. இந்த கொடிய பாசிச ஆக்கிரமிப்புடன் நாட்டின் விலைமதிப்பற்ற இயற்கை, உள்கட்டமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு வளங்களை தொடர்ந்து கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. வெகுநீண்ட சுதந்திர இயக்கத்தின் போதும் இந்தியா ஒரு அரசியலமைப்பு குடியரசாக இருந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் இந்தியா அடைந்த பலன்களும் மக்களது உரிமைகள் அனைத்தும் ஆபத்தில் உள்ளன.

தோழர் சாரு மஜும்தாரிடம் இருந்து கற்றுக்கொண்டு, மீண்டும் ஒருமுறை நாம் நமது திரட்டப்பட்ட வரலாற்று வளங்களை ஆழமாகப் படித்து, பாசிச சதியை முறியடித்து, ஜனநாயக புத்தெழுச்சியின் புதிய சகாப்தத்தை உருவாக்க மக்களின் புரட்சிகர முன்முயற்சியையும் கற்பனை வளத்தையும் கட்டவிழ்த்துவிட்டாக வேண்டும்.