திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்நாடு மாநில மாநாடு 2022 ஆகஸ்ட் 6-9 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 6 அன்று, “சமூக நல்லிணக்கத்தைக் காப்போம், மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் கலந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஅய்(எம்) மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

எழுச்சி மாநாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

எழுச்சி மாநாட்டில் சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே. நடராஜன் பேசியதிலிருந்து...

நமது நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடத் தயாராக வருகிறது. மோடியும் தயாராகி வருகிறார். வீடுகள் தோறும் மூவர்ணக் கொடியை ஏற்றச் சொல்லி வருகிறார். சங்பரிவார் கூட்டங்களும் கொடி ஏற்றத் தயாராகி வருகின்றனர். இந்த மோடி கூட்டங்களுக்கும் நாடு விடுதலை போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. விடுதலை போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள். மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொள்ள மறுத்துவர்கள். இன்று இவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுகொள்ளாதவர்கள். அம்பேத்கார் முன்வைத்த அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு பதிலாக மனுஸ்மிருதி கூறும்சட்டத்தை முன்நிறுத்துப்பவர்கள், மூவர்ண தேசியக் கொடியை ஏற்றச் சொல்வது வரலாற்று நகைமுரண்.

இந்திய நாடு பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள் பலவேறுபட்ட பண்பாடுகளைக் கொண்ட நாடு. நாடு முழுவதும் உள்ள பல தேசிய இனங்களை, பல மதங்களைச் சார்ந்த தலைவர்களின் தியாகத்தால் உருவானது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் இயக்கப் போக்கில், பல மாறுபட்ட மக்கள் திரளின் ஒற்றுமையால் உருவானதுதான் இந்தியா.

ஒற்றைக் கலாச்சாரம், ஒரே மதம் என பாரதிய ஜனதா கட்சி, பாசிச மோடி தலைமையில் இந்த நாட்டை பிளவுபடுத்தி கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு சேவை செய்வதோடு உழைக்கும் மக்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. மக்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பாசிச ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இதுவரையில் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை இல்லாததால் மோடி தப்பித்து பிழைத்து வருகின்றார். வருகின்ற 2024 தேர்தலில் மோடியை ஆட்சியை வெளியேற்ற ஒன்றுபட்டு போராடுவோம்