மிகவும் பிற்போக்குத்தனமான காவிப் பாசிசத்தை எதிர்த்து விவசாயிகளை அணி திரட்டும் நோக்கோடு டெல்டா மாவட்டத்தில் நடத்தப்படும் இந்த மாநாடு சிறப்பு வாய்ந்தது. மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை முறியடிக்க போராட்டக் களத்தில் விவசாயிகள் எப்படி முன் நின்றார்களோ அதுபோல காவிப் பாசிசத்தை முறியடிக்கவும் விவசாயிகள் முன்னிற்க வேண்டும். பாசிசம் ஒரு சித்தாந்தமாக ஜனநாயகத்திற்கு எதிரானது. பாசிசத்தில் கருத்துரிமை பறிக்கப்படுவது மாத்திரமல்ல, அங்கே சமூக நீதிக்கும் இடம் இருக்காது.
உலகம் முழுவதும் பாசிசம் என்று சொல்கிற அந்த பொது மொழி, இந்தியாவில் அது இந்துத்துவாவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா என்பது இந்து மக்களின், ஒட்டு மொத்த இந்துக்களின் கோட்பாடு அல்ல. அது ஆர்எஸ்எஸ்-ன் கோட்பாடு. இந்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, ஏற்றுக் கொண்டிருக்கிற ஒரு கருத்தியல் அல்ல. அங்கே கோவில்களில் கருவறையில் நுழைய இந்துக் களுக்கே இடம் கிடையாது. அது பார்ப்பனியம். அதுதான் புதிதாக இந்துத்துவா என்ற அடையா ளத்தோடு வருகிறது. சனாதனம், மனுஸ்மிருதி என்ற சித்தாந்தம்தான் ஒரு கட்டமைப்பை, ஒரு ஒழுக்கத்தை, ஒரு சமூக ஒழுங்கை நிலை நிறுத்தி இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக மனித உழைப்பை செலுத்தாமலே இருப்பதற்கு பெயர்தான் பார்ப்பனியம். அது இந்துத்துவா என்ற போர்வை கொண்டு வருகிறது. பாரதியஜனதா கட்சி என்கிற அரசியல் கட்சியின் அணிகளாக இருக்கிற அனைத்தும் சங்பரிவார் கள்தான். அதனால்தான் மோடியும் அமித்ஷாவும் அந்த அமைப்புக்குள்ளேயே இருக்கிறார்கள். பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும். நம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும். ஆகவே அதை வீழ்த்து வதற்கு இடதுசாரி இயக்கத்தோடு எம்எல் போன்ற இயக்கங்களோடு கூட்டு இயக்கங்களில் செயல்படுவது விடுதலை சிறுத்தைகளின் கடமையாக இருக்கிறது. அதனால்தான் இந்த மேடை எனது மேடை, இந்த மேடை திருமா வளவன் மேடை. இந்தியா முழுவதும் இருக்கிற இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும். அதை உணர்த்துகிற மாநாடுதான் இந்த மாநாடு.
அம்பேத்கரியம் என்பது பார்ப்பனியத் துக்கும் முதலாளித்துவதற்கும் எதிரான சித்தாந்தம் ஆகும். இந்துத்துவாவுக்கு அரசியலமைப்புச் சட்டமும் அம்பேத்கரும் சித்தாந்த எதிரிகளாக இருக்கின்றனர். அடையாளத்துக்கு தலித்துகளை, பழங்குடியினரை நாட்டின் அதிபர் ஆக்குவதால் எந்தப் பயனும் இல்லை. கம்யூனிஸ்டுகளும் ஜனநாயக சக்திகளும் நமது நட்பு சக்திகளாக எப்போது இருக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க உறுதி எடுத்துக் கொள்வோம். 2024ல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. மோடி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கிறதோ இல்லையோ அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி, சிதைத்து இல்லாமல் செய்துவிடுவார்கள்.