காவிரிப் படுகை விவசாயத்தைப் பாதுகாப்பதில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிலைப்பாடு என்னவாகஇருக்க வேண்டும்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை, காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட புதிய திட்டங்களை தொடங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள் ளன. ஆனாலும், அதேநேரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் முற்றிலுமாக அகற்றப்பட்டால், அதில் நீண்டகாலமாக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அந்த பகுதியில் சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் இணைந்து போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 23ல் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று போராட் டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, நாகை முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து மற்றும் தொழிற்சங்கத்தினர், 'ஓஎன்ஜிசி தொடர்ந்து இயங்க வேண்டும். அதில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓஎன்ஜிசிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும். விவசாயிகளை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணைபோகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.
'ஓஎன்சிஜிக்கு ஆதரவு, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு' என்ற இத்தகைய அணுகுமுறை கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுகள் மீது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
வரலாற்றுப் பக்கங்களைத் திரும்பி பார்ப்போம்: "முப்பதாண்டுகளுக்கும் மேலாக காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு களை அமைத்து எரிபொருளை உறிஞ்சி விவசாய நிலங்களுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வதால் நிலவளம் மட்டுமின்றி, குடிநீர் உட்பட சுற்றுச் சூழல் பெரிய அளவில் மாசுபடுவதால் ஓஎன்ஜிசியின் செயல்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்" என்பது விவசாயிகளின் / மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.
காவிரிப் படுகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ‘எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தை” (Oil and Natural Gas Corporation - ONGC) அரசை எதிர்த்துப் போராடி வரும் செய்திகள், கதிராமங்கலம், அடியக்க மங்கலம் எனப் பல்வேறு கிராமங்கள் ஓஎன்ஜிசி எதிர்ப்புப் போராட்ட மய்யங்களாகவும் மாறிய செய்திகளும் கடந்த பத்தாண்டுகளாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. ஓஎன்ஜிசி திட்டங்கள் முழுமையாக காலி செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். காவிரி டெல்டாவில், 2012ம் ஆண்டு மீத்தேன் திட்டம் அறிவிக்கப்பட்டபோது இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இகக(மாலெ) உள்ளிட்ட இடதுசாரிகள் போராட்டங்களை நடத்தினர். மீண்டும் 2016ல் பாஜக அரசாங்கத்தின் ஆட்சியில், மீத்தேன், ஷேல் காஸ், டைட்கா உள்ளிட்ட வற்றை ஹைட்ரோகார்பன் என அறிவித்து, அவற்றை எடுப்பதற்கான அனுமதி பெறும் முறையையும் எளிமைப்படுத்தியது; இவற்றை வெளிக்கொணர ஹைட்ரோ ஃப்ராக்கிங் முறையைப் பயன்படுத்தும்போது வெளியேறும் ரசாயனக் கழிவுகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், விவசாயிகளின் எதிர்ப்புகள் தீவிர மடைந்தன. காவிரிப் படுகை பாலைவனமாக மாறிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிC கச்சா எண்ணெய் குழாய் உடைந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள், நெடுவாசல் எண்ணெய் எடுப்புத் திட்டம், திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் எரிவாயு எடுப்பதற்கான திட்டங்களை அறிவித்த மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகளும் பங்கெடுத்தனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமும், ஹைட்ரோகார்பன் திட்டங்களும்:
விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் காரணமாக, காவிரிப் படுகையை /டெல்டாவை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக" கடந்த 9.2.2020 ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறி வித்தார். அந்த சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகிய வற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஐந்து வட்டா ரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத் தின் கீழ் வந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மண மேல்குடி, திருவ ரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும், கடலூர் மாவட்ட காட்டு மன்னார் கோவில், மேல் புவனகிரி, கீரப் பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களும் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் உள்ளன.
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டு, அது முதலமைச்சர் தலைமை யில் செயல்படும் எனவும், இதில் முப்பது உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் எனவும் இப்பகுதியில் விவசாய உற்பத்தியை மேம்படுத்து வதற்கான ஆலோசனைகளை அவர்கள் அளிப்பார்கள் என்றும் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் கூறுகிறது.
கொல்லைப்புற வழியில் கார்ப்பரேட்டுகள் நுழையமுயற்சி :
தமிழகம் மற்றும் புதுவையில் இந்த 2019ம்
ஆண்டில் மட்டும் 489 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளன.
(1984ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை தமிழகத்தில் தோண்டப்பட்ட பெட்ரோலிய கிணறுகளின் எண்ணிக்கை 768 ஆகும்.)
தமிழ்நாட்டில் வலுவான கார்ப்பரேட் எதிர்ப்பு சூழல் நிலவுவதால், 'பொதுத்துறை நிறுவன பெட்ரோல் கிணறுகளுக்கு மட்டும்தான்' என்று முதலில் அனுமதி வாங்கிக் கொண்டு, அதை காரணமாக காண்பித்து கொல்லைப்புற வழியாக வேதாந்தா, ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு காவிரிப் படுகையை படிப்படியாக திறந்து விடலாம் என்பது மோடி அரசின் மாகும். சதித் திட்டமாகும்.
ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனத் தின் சென்னையில் உள்ள காவிரிப் ஓஎன்ஜிசி படுகை அலுவலக மானது, தமிழ்நாட்டில் காவிரிப்படுகை மண்டலத்தில் அமையும் பல்வேறு இடங்களில் பெட்ரோலிய கிணறுகள் அமைக்க அனுமதி கோரி யுள்ளது. தமிழ்நாட்டில் 2021ல் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 15 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க சுற்றுச் சூழல் அனுமதிகோரியது. ஓஎன்ஜிசி நிறுவனம் அளித்த இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் SEIAA ஜூன் 21,2021ல் தொழில்நுட்ப குறைபாடுகள் சுட்டிக் காட்டி நிராகரித்துள்ளது.
காவிரிப் படுகையை பாதுகாக்க வேண்டும் என்பது, திமுக அரசின் கொள்கை முடிவாக இருந்தால், "தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அடிப்படையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் தமிழ்நாடு எப்போதும் ஏற்காது என நேரடியான மறுப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.
மோடி அரசாங்கம், மீண்டும் மீண்டும் குறுக்குவழியில் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கொண்டு வரும் முயற்சிகள் நிறைந்த
காலகட்டத்தில், இடதுசாரிகள் "ஓஎன்ஜிசி உள்ளிட்ட அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் எதிர்ப்போம்!” என உறுதியாக நிற்கவேண்டும். இகை(மாலெ) உறுதியாக நிற்கும்.
அரைகுறை நிலச்சீர்திருத்தமும் கோவில், மடங்களின் ஆதிக்கமும் காவிரிப்படுகையின் விவசாயத்தையும் விவசாய சமூகத்தையும் வளரவிடாமல் கழுத்தை நெரிக்கிறதென்றால் பன்னாட்டு, இந்நாட்டு கார்ப்பரேட் கூட்டம் டெல்டாவையே பாலைவனமாக்கத் துடிக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு கதவைத் திறந்து விடும் ஓஎன்ஜிசி (எண்ணெய் எரிவாயு ஆணையம்) உட்பட எந்தவிதமான கார்ப்பரேட் திட்டங் களையும் அனுமதிக்காமலிருக்க வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசுகளை வழிக்கு கொண்டுவர
வேண்டும். அதேசமயம், டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாயச் சிறப்பு மண்டல மாக இருக்க வேண்டுமானால், கோயில், மடங்கள் நிலங்களை உழுபவருக்கே சொந்த மாக்கும் நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட விவசாய சீர்திருத்தம் கொண்டுவர போராடியாக வேண்டும். நிலமற்றோருக்கு நிலம், வேலை யற்றோருக்கு வேலை, வாழிடம் அற்றோருக்கு வாழிடம் கிடைக்கப் போராட வேண்டும். பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மீட்டெடுக்கப் போராட வேண்டும். இது நீண்ட கால விரிவான போராட்டம். விரிவான போராட்டத்துக்கு விரிவான மக்களை, பெரும்பான்மை கிராமப்புறச் சமுதாயத்தை திரட்டியாக வேண்டும். உறுதியாக போராடுவோம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)