நூறு ஆண்டுகளுக்கு பிறகு சங்கம்விடுதி "தலித்" மக்களுக்கு புதிய இடத்தில், புதிதாக கட்டப்பட்ட "மயான மேடை"
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சங்கம் விடுதி கிராமத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு மேலாக சங்கம்விடுதி கிராமத்தில் இருக்கும் அனைத்து சமூக மக்களும் பயன்படுத்துகிற இடுகாடு, சுடுகாடு இரண்டுமே ஒரு ஏரிக்குள்ளே நடுவில் அமைந்திருக்கும். மழைக் காலம் வந்துவிட்டால் குளத்தில் நீர் பெருகிவிட்டால் அந்த சமயத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்கிற நிலைமை தொடர்ந்தது. இதை மாற்ற வேண்டும் என்று பல போராட்டங்கள் சிபிஐ (எம்எல்), சார்பாக முன்னெடுக்கப்பட்டது. அதன் விளைவாக சங்கம் விடுதி ஆதி திராவிடர்களுக்கான மயான கொட்டகை அமைக்கும் திட்டத்தில் ரூ.6,25,000/- நிதி பெற்று புதிதாக மயானத்திற்கு தார்சாலை, மயான கொட்டகை, சுற்று சுவர், தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. "இதுவரை, வாழ்வதற்காகவும் போராடினோம், இறந்தவர்களை அடக்கம் செய்ய அதைவிட கூடுதலாக போராடினோம். இனி தலித் மக்கள் அடக்கம் செய்ய போராட வேண்டிய நிலை சங்கம்விடுதியில் இல்லை. அதேவேளை அனைவருக்குமான பொதுச் சுடுகாடு அமைக்கக் கேட்டுப் போராடுவோம். அதேபோல், அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்க்கைக்கான போராட்டங்களை அனைத்து மக்களின் ஆதரவோடு தொடர்ந்து முன்னெடுப்போம்" என சிபிஐ (எம்எல்) புதுக்கோட்டை மாவட்டக்குழு உறுப்பினரும் சங்கம்விடுதி ஊராட்சியின் 8ஆவது வார்டு உறுப்பினருமான தோழர் ரேவதி கூறுகிறார்.