அன்பார்ந்த தோழர்களே,

பெரியார் பிறந்த மண்ணில், வலதுசாரி களுக்கு இடமில்லை என நினைத்த காலம் பழங்கதையாகிக் கொண்டிருக்கிறது என்பதை நமது மாநாட்டு அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டி இருக்கிறது. தமிழகத்தில் காலூன்றிட தன்னாலான அனைத்து முயற்சிகளையும் பிஜேபி மேற்கொண்டு வருகிறது. காசிக்கும் தமிழுக்கு மான தொடர்பு பழந்தொடர்பு என்று சொல்லி காசியில் தமிழ்ச் சங்கமத்தை பிஜேபி நடத்துகிறது. இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கும் மோடியின் பிஜேபி, தமிழுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. தமிழக ஆளுநர் திருவாளர் ரவி, ஆர்எஸ்எஸ்- பிஜேபியின் கொள்கை பரப்புச் செயலாளராகவே செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பாசிச சக்திகளை தமிழக மண்ணிலிருந்து முழுமுற்றாக விரட்டி அடிப்பது என்பது தமிழ் மக்களின் தலையாயக் கடமையாக முன்வந்து இருக்கிறது. பாசிச சக்திகளை வெளியேற்றுவது என்பது காவிமயமாக்கத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, கார்ப்பரேட்மயமாக்கத்தை எதிர்ப்பதும் ஆகும். இவ்விரண்டு கடமைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்கப்பட முடியாதவை. தோழர் திபங்கர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, பாசிச எதிர்ப்புப் போராட்டம் என்பது, சாதி ஒழிப்பு, மதவெறி எதிர்ப்பு, கார்ப்பரேட்மய எதிர்ப்பு, அதிகார மையப்படுத்தலுக்கு எதிர்ப்பு, பிஜேபியின் காலனீய மரபு மீட்சிக்கு எதிர்ப்பு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

அந்த அரசியல் பின்னணியில், தமிழகத்தில் திமுக ஆட்சியிலிருக்கும் பின்னணியில், மதவெறிக்கு எதிராக, பிஜேபிக்கு அது எந்த அளவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறதோ அந்த அளவுக்கு நாம் நிபந்தனைக்குட்பட்டு அதனை நாம் ஆதரிக்கலாம். ஆனால், சிபிஐ எம்எல் ஒரு புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரத்தை ஆற்றிடும். அதில் எந்தவிதமான சமரசமும் இல்லை. அதே போல, கார்ப்பரேட்மயமாக்க கொள்கைகளையும், உழைக்கும் மக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் எந்த சமரசமுமின்றி சிபிஐஎம்எல் எதிர்த்துப் போராடும்.

அத்தகைய அரசியல் கடமைகளை நிறைவேற்றிடப் பொருத்தமானதாக, நமது கட்சி அமைப்பை வலுப்பெறச் செய்ய வேண்டிய கடமை நமது முதன்மையான கடமையாக முன்வந்து இருக்கிறது. அந்தச் சவாலை நாம் இந்த மாநாட்டில் ஏற்றிருக்கிறோம்.

தமிழகத்தின் 11வது மாநில மாநாடு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

1.தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சுமார் 29 மாவட்டங்களுக்கு நமது விரிவடைந்திருக்கிறது. 

2.கட்சி உறுப்பினர் எண்ணிக்கை, பல்லாண்டு கால எல்லையைத் தாண்டிச் சென்றிருக்கிறது.

3.மாணவர், இளைஞர், பெண்கள் வேலைகள் வளர்கிறது.

4.அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், நீதிக்கான மக்கள் இயக்கம் போன்ற அமைப்புகளை புதிதாக துவங்கி இருக்கிறோம். 

5.இடதுசாரி, ஜனநாயக சக்திகள் நமது கட்சியை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.

6.இதர கட்சிகள், அமைப்புகளுடனான நமது அரசியல் உறவாடல் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

7.சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் சுட்டிக் காட்டியது போல, இதர இடதுசாரி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் முதல் தமிழ் மாநில மாநாடு இந்த 11வது மாநாடுதான்.

8.சுமார் 400 தோழர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது வரை தமிழகத்தில் நடந்த மாநில மாநாடுகளிலேயே அதிக பிரதிநிதிகள் கலந்து கொள்வது இந்த மாநாடுதான். ஒன்று இது நமது வளர்ச்சியை சுட்டிக் காட்டுகிறது. அதைவிட முக்கியமாக, கட்சியில் ஜனநாயக வெளி அதிகரித்து இருப்பதை இது காட்டுகிறது. பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது வெறும் எண்ணிக்கை குறித்ததோ, அதிக செலவு குறித்ததோ அல்ல, மாறாக, அது உட்கட்சி ஜனநாயகத்தின் வெளியை அதிகப்படுததுவது குறித்தது ஆகும். கட்சியின் ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் போது, மாநாட்டு முடிவுகளை எடுப்பதில் அவர்கள் பங்கேற்கிறார்கள். அதை நடைமுறைப் படுத்துவ தற்குப் பொறுப்பும் ஏற்கிறார்கள் என்று பொருள். முடிவுகள் சில தலைவர்கள் சம்பந்தப் பட்டது மட்டும் அல்ல, மொத்த கட்சி சம்பந்தப் பட்டது என அதற்குப் பொருள் ஆகும்.

9.அதே போல, தமிழக மாநாடுகளிலேயே முதல் முறையாக 100க்கும் அதிகமான பெண்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னும் சிறப்பு மிக்கது.

10.அது மட்டுமல்ல, 10 சதவீதம் பெண்கள் மாநில கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக் கிறார்கள் என்பது இன்னும் சிறப்புடையது. இதுவும் தமிழகத்தில் முதல் முறைதான்.

மேலும், இளைஞர்களின் எண்ணிக்கையும் பிரதிநிதிகள் மட்டத்தில் அதிகரித்து இருக்கிறது. தலைமை மட்டத்திலும், மாவட்ட கமிட்டி முதல் மாநில கமிட்டி வரை பல இளம் தோழர்கள் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள் என்பது கூட சிறப்பு மிக்கதே. மாநில கமிட்டியில் சுமார் மூன்றில் ஒரு பகுதி இளைஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும், நாம் பல்வேறு வேலை முனைகளிலும், அரங்கங்களிலும் முன்னேறி இருக்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இப்படி பல வகைகளில் 11வது மாநில மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

கடந்த மாநாட்டில் நமக்கு சுமார் 8 மாவட்டங் களில், கட்சி அமைப்புச் சட்டப்படி முறையாக உருவான, முழுவிரிவான மாவட்டக் கமிட்டிகள் இருந்தன. அந்த பழைய 8 மாவட்டக் கமிட்டிகளில், இரண்டு தவிர, பழைய ஆறோடு இன்னும் புதிய ஆறு மாவட்டங்கள் இணைந்து 12 மாவட்ட மாநாடுகளை இம்முறை நடத்தி இருக்கிறோம். பழைய 2 மாவட்டங்களோடு சேர்த்து புதிய இரண்டு மாவட்ட மாநாடுகள் இன்னும் நடத்த வேண்டியிருக்கிறது. கன்னி யாகுமரி, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களில் சிலவற்றில் புதிதாகவும், சிலவற்றில் மிகநீண்ட இடை வேளைக்குப் பிறகும் மாநாடுகள் நடந்துள்ளன. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மீண்டும் புது வேகத்துடன் வளர்ந்துள்ளன. சென்னை வேலைகள், செங்கல்பட்டைத் தாண்டி, மாற்றி அமைக்கப்பட்ட முன்னுரிமையின் அடிப்படையில், சென்னை, தாம்பரம் மாநகரங்களிலும் காஞ்சியிலும் வளர்ந்து வருகின்றன. சமீபத்தில் கட்சி வரைபடத்திலிருந்து மங்கிப் போயிருந்த திருவள்ளூரில், புதிய வேலையைத் துவங்கியது மட்டுமல்ல, மாவட்ட மாநாட்டையும்கூட நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறோம்.

அதே போல, ஏற்கனவே நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாவட்டங்களில் கட்சி வேலைகளை ஆழப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் சில மாவட்டங்களில் காணக் கிடைக்கின்றன. அவற்றை மறுசீரமைப்பு இயக்கத் திசைவழியில் முறைப்படுத்துவதும், வளர்ப்பதும் தேவை இருக்கிறது. சில மாவட்டங்கள், நீண்டகால மவுனத்திற்குப் பிறகு, வளர்ந்து வருகின்றன, சில புதிதாக கட்சி வரைபடத்தில் இணைந்துள்ளன. நாம் ஏற்கனவே செயல்பட்டு வரும் சில மாவட்டங்களிலும் பல புதிய சக்திகள் நம்மோடு இணைந்துள்ளனர். மாநிலம் முழுக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து இடதுசாரி, ஜனநாயக சக்திகள் கட்சியில் சேர்ந்த வண்ணமுள்ளனர். அவர்களை அரசியல் ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் கட்சி வழியோடு இணைக்கும் இயக்கப்போக்கு துவங்கி இருக்கிறது. அதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கி, நிறுவனப்படுத்திட வேண்டி இருக்கிறது. பல்லாண்டு களாக செயல்பாடற்று இருந்த பெண்கள் இயக்கம் புதுப்பிக்கப்பட்டு, முறையான செயல்பாட்டைத் துவங்கி இருக்கிறது. இளைஞர் மாணவர் இயக்கங்களும் புதுவேகத்துடன் செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர் வர்க்க வேலை மட்டுமல்லாமல், விவசாயத் தொழிலாளர் விவசாயிகள் மத்தியிலான வேலையும் கூட வளர்ந்து வருகின்றன. தொழிற்சங்க அரங்கில் கூட்டு நடவடிக்கைகள் மிக நீண்ட காலமாக இருக்கின்றன. ஆனால்,விவசாயிகள் அரங்கில், விவசாயத் தொழிலாளர் அரங்கில் கூட்டு நடவடிக்கைகள் புதிதாகத் தொடங்கி இருக்கின்றன. 

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு மிகமுக்கிய முன்முயற்சி என்பது, பாசிச எதிர்ப்பு நோக்கில், இதர இடதுசாரி, ஜனநாயக சக்திகளுடனான நமது உறவாடலை மேம்படுத்தி இருக்கிறோம் என்பதாகும்.தஞ்சை பாசிச எதிர்ப்பு மாநாடும், மாநில மாநாட்டின்அங்கமாக நடந்த பொது மாநாடும் அதற்கு உதாரணங்கள் ஆகும். அகில இந்திய அளவிலானகூட்டு நடவடிக்கை கள்  மட்டுமல்லாமல், தமிழக அளவிலும், பாசிச எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் கோணத்தில், இதர கட்சிகள்,அமைப்புகளுடனான நமது உறவை அதிகரிக்கவிரும்புகிறோம். நமது உறவாடல் வெறும் தேர்தல் கூட்டணிக்கான உறவாடல் மட்டுமென நாம்கருதவில்லை. மாறாக, இந்த உறவாடல் தமிழக மண்ணிலிருந்து பாசிச சக்திகளை, வலதுசாரி சக்திகளை, ஆர்எஸ்எஸ்-பிஜேபி போன்ற சக்திகளை விரட்டியடிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அணியை, ஒரு மக்கள் போராட்ட மாற்றணியைக் கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டதோர் உறவாடலாகும். அந்த இயக்கப்போக்கில் தேர்தல் வருமானால், அதிலும் கூட ஒரு பரந்த பாசிச எதிர்ப்பு அணியை உருவாக்கிடத்தான், வலுப்படுத்திடத்தான் நாம் பாடுபடுவோம். தமிழகத்தில் பாசிச எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் அனைத்து கட்சிகளோடும் இணைந்து செயல்பட நாம் தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில், இதர கட்சிகளோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற நிலையிலிருந்து மாறி, அவற்றோடு கோட்பாடு அடிப்படையில் உறவாடுவதற்கான ஒரு செயல்தந்திர நிலைப்பாட்டை இந்த மாநாடு தீர்மானித்து இருப்பது வரவேற்கத் தக்கது. பாசிச எதிர்ப்பு அரசியலை முதன்மையாகக் கொண்டு, அதனை எதிர்த்திடும் எதிர்க் கட்சிகள் மத்தியிலான, அரசியல் மற்றும் கொள்கை வேறுபாடுகளையும், அவற்றோடு நாம் ஒன்றுபடுவ தற்கான நியாயமான அடிப்படைகளையும் காண முயற்சிக்க வேண்டும். அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில், பிரச்சனைகள் அடிப்படையில் அந்த உறவு அமைய வேண்டும். அதே நேரத்தில், தமிழகத்தில் ஒருமக்கள் போராட்ட மாற்றணியைக் கட்டி எழுப்பும் பார்வையோடும் (நோக்கோடு அத்தகைய உறவுகள், அணிகள் உருவாக்கப்பட வேண்டும். 

நமது கட்சி உறுப்பினர் எண்ணிக்கையும் பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருந்ததிலிருந்து இப்போது பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. டிசம்பர் 18 க்குள், அகில இந்திய கட்சிக் காங்கிரசுக்கு முன்னால் அதை இரட்டிப்பாக்குவதை நோக்கி மொத்த கட்சியும் செயல்படவேண்டும்.

ஆழமான வேலைகள் விரிவாக்க வேலைகள், அதற்கான பகுதிகள் பற்றி நமது மறுசீரமைப்பு இயக்கம் முன்வைத்தது. அவற்றை நாம் தீர்மானித்து இருக்கிறோம். ஆய்வு படிப்பின் முக்கியத்துவத்தை அது சுட்டிக் காட்டியது. அதை நாம் துவங்கி இருக்கிறோம். மக்களோடு உயிரார்ந்த தொடர்பு என்பது நமது வளர்ச்சிக்கு முன் நிபந்தனை என்று அது கூறியது. அதற்கேற்ப நமது வேலைநடையை மாற்றிட நாம் முயற்சிக்கிறோம். நமது வெகுமக்கள் வேலையை விரிவுபடுத்த தீவிர முயற்சிகள் தேவைப்படுகிறது. இந்த மாநாடு ஆழமான வேலை என்றால் என்ன என்பதையும் கூட வரையறை செய்திருக்கிரது. அந்த வரையறையை பூர்த்தி செய்திட நாம் பாடுபட வேண்டும்.

கல்வியை நிறுவனப் படுத்தும் முயற்சி முன்னேறி வருகிறது. தீப்பொறியை ஜனரஞ்சகமானதாக, செழுமையானதாக, அதிக பிரதிகள் விநியோகிப்பதை நோக்கி முன்னேறி வருகிறோம். தீப்பொறியை வார இதழாக மாற்றிடுவதை இலக்காகக் கொண்டிருக்கி றோம். விரைவில் ஒரு இணையதள ஏட்டையும் கூட துவங்கிட வேண்டும். தீப்பொறி நமது கட்சியின் கட்சித் தோழர்களின் அரசியல் கருத்தியல் ஆய்தம் ஆகும். அதனைக் கட்சித் தோழர்கள் படிப்பதோடு மட்டும் நிறுத்திவிடக் கூடாது. அதைப் பரந்த மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றிட வேண்டும். அதனை மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் கூவிக்கூவி விற்கிற, விரிவாக எடுத்துச் செல்லக் கூடிய பரப்புரைக் குழுக்களை உருவாக்கிட வேண்டும். தீப்பொறி விநியோ கத்தை அதிகரிப்பதை கட்சித் தோழர்களின், கட்சிக் கமிட்டிகளின் முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும். அதற்கான திறன் வாய்ந்த, விநியோக வலைப்பின்னலை உருவாக்க வேண்டும். அதற்காக, மொத்த கட்சியும் பாடுபட வேண்டும். தாராளவாதம் என்றால் என்ன என்று ரத்தினச் சுருக்கமாக ஆனால் மிகக் கூர்மையாக தோழர் மாவோ இரண்டே பக்கத்தில் முன்வைத்து இருக்கிறார். அந்த தாராளவாதத்தின் வெளிப் பாடுகள் கட்சி அமைப்பில் இன்று என்னென் னவாக இருக்கின்றன என்பதை இந்த மாநாட்டு அறிக்கை துல்லியமாக முன்வைத்து இருக்கிறது. அதற்கு எதிரான தீவிர போராட்டத்தை நாம் நடத்திட வேண்டும். அது நமது பாய்ச்சலான வளர்ச்சிக்கான அடிப்படையாக இருக்கும். மாநாட்டு அறிக்கையில் சுட்டி இருக்கும் விசயங்கள் மற்றவர்களுக்கானது, நமக்கல்ல என நாம் காணக் கூடாது. மாறாக, அந்த ஒவ்வொரு அம்சமும் நமது நடைமுறையில், வேலை நடையில் எப்படி பிரதிபலிக்கிறது என நாம் ஒவ்வொருவரும் சுயவிமர்சனரீதியாக பரிசீலிக்க வேண்டும். அப்படி செய்வோமானால், நிச்சயமாக நாம் ஒரு மாற்றத்தை நமது கட்சி அமைப்பில் கொண்டு வரமுடியும். 

இவை அனைத்தும் தமிழகத்தில் நமது கட்சி வேலைகள் விரிவடைந்து வருவதை, வளர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டுகின்றன. நாம் ஒரு பாய்ச்சலான வளர்ச்சிக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த மாநில மாநாட்டிற்குள் சுமார் 5 லட்சம் உறுப்பினர்களைக்கொண்டதாக நமது வெகுமக்கள் அமைப்புகளை வளர்த்திட வேண்டும். நமது அணிதிரட்டல்பலத்தை பல்லாயிரங்களாக மாவட்ட மட்டத்திலும் மாநில மட்டத்திலும் வளர்த்திட வேண்டும். அதை நோக்கிய திசையை இந்த மாநாடு சுட்டிக்காட்டி இருக்கிறது. அதை நாம் அடைந்திடு வோமானால், இந்த மாநாடு கண்டிப்பாக தமிழக கட்சி வரலாற்றில் ஒரு திருப்பு முனை மாநாடாக அமைந்திடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழக மாற்று கல்விக் கொள்கை குறித்த மாநாட ஒன்றை மிக விரைவில் மதுரையில் நடத்திட நமது இளைஞர் மாணவர் அமைப்புகள் முடிவு செய்திருப்பது வரவேற்கத் தக்கது. அதனை வெற்றி பெறச் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

மார்ச் ஏப்ரலில் திட்டமிடப்பட்டிருக்கும் மாவட்டப் பேரணிகளையும், 2023 இறுதியில் அல்லது 2024 துவக்கத்தில் திட்டமிடப் பட்டிருக்கும் மாநிலப் பேரணியையும் மாபெரும் வெற்றி பெறச் செய்திட வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம். மொத்த கட்சியும் அதற்காக அணிதிரள வேண்டும். முழு ஆற்றலையும் பயன்படுத்தி பணியாற்றிட வேண்டும். 2023 பிப்ரவரி 15 முதல் 20 வரை நமது கட்சியின் 11வது அகில இந்திய மாநாடு (காங்கிரஸ்)பாட்னாவில் நடைபெற இருக்கிறது. அதை வெற்றி பெறச்செய்வதற்கான கண்கவர்பரப்புரையையும் அதற்கான நிதி இலக்குகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். டிசம்பர் 18க்குள் உறுப்பினர் இலக்குகளைப் பூர்த்தி செய்வது, சனவரி 15க்குள் நிதி இலக்குகளை கட்டம் கட்டமாக பூர்த்தி செய்வது என முடிவெடுத்து செயல்பட வேண்டும்.

தோழர்களே, 

11ஆவது மாநில மாநாட்டை, தமிழக கட்சி வரலாற்றின் ஒரு மைல்கல்லாக மாற்றிடப் பணியாற்றுவோம்!

சிபிஅய் எம் எல் கட்சியை தமிழக அரசியலின் பிரதான நீரோட்ட கட்சியாக வளர்த்திட சூளுரைப் போம்!

சிபிஅய் எம் எல் கட்சியை மிகப்பெரிய கட்சியாக, மிகப்பலமான கட்சியாக வளர்த்திடுவோம்!

பாசிச சக்திகளை விரட்டியடிப்போம்!

புரட்சிகர எதிர்க் கட்சியாய் செயல்படுவோம்! அந்தக் கடமையை நிறைவேற்றிடத் தகுந்ததாக கட்சி அமைப்பை வலுப்படுத்துவோம்!

இதுவே இந்த மாநாட்டின் வாயிலாக நாம் ஏற்கும் சூளுரை ஆகும்!

இன்குலாப்! ஜிந்தாபாத்!