முதலிடம்பிடித்த தமிழ்நாடு; முதலீட்டிற்கான அமெரிக்கபயணம்!
“தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம்”, ஜூலை 21 நாளேடுகளை இந்த முழுப்பக்க முகப்பு விளம்பரம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டிருந்த அந்த விளம்பரம், ஒன்றிய அரசின், நிதி ஆயோக் அறிக்கையை மாநில விளம்பரமாக வெளியிட்டிருந்தது.
வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி, இந்த மூன்று குறியீடுகளில் முதலிடத்தையும் மேலும் 10 துறைகளில் முன்னணி நிலை வகிப்பதாகவும் அந்த விளம்பரம் கூறுகிறது.
பாஜக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம் பெற்று, தீவிர தேர்தல் பரப்புரை செய்து 40க்கு 40 (தமிழ்நாடு, புதுச்சேரி) பெற்ற திமுக, தேர்தல் முடிந்தவுடன் மோடியின் கைப்பொம்மையான நிதி ஆயோக் கருத்துகளை, தனது ஆட்சிக்கு கிடைத்த ஆகப்பெரிய, பாராட்டாக எடுத்துக்கொண்டு அரசு செலவில் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, கொண்டு வரப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு, இந்தியாவை மாற்றியமைப்பதற்கான தேசியநிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அது, மோடியின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்தியாவை சித்தரிக்கும் ஒரு “சிந்தனை” அமைப்பு. அதன் தரவுகளும் ஆய்வு அணுகுமுறைகளும் கேள்விக்குரியவை. உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம் போன்ற அமைப்புகளின் சிந்தனையை எதிரொலிப்பவை.
நிதி ஆயோக் அறிக்கையை திமுக அமைச்சர்களும் கட்சித் தலைவர்களும் கொண்டாடிக் கொண்டிருக்க, பாஜக அண்ணாமலை அதே அறிக்கையை சுட்டிக் காட்டி “தமிழ்நாடு பின்தங்கிவிட்டது” என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். ஒரே அறிக்கை. எதிரும் புதிருமான கருத்துகள்! அரசியலில் இதெல்லாம் சகஜம்!
நிதி ஆயோக்அறிக்கை; நிதிநிலை அறிக்கை
ஜூலை 23 அன்று மோடி 3.0 ஆட்சியின் முதலாவது நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்கள் மீதான வஞ்சத்தைக் காட்டியது. தமிழ்நாட்டுக்கென எவ்வித திட்டங்களும் இல்லாமல், கோரிக்கைகள் எதுவும் கண்டுகொள்ளப்படாமல் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருந்தது. நிதி ஆயோக் அறிக்கை தமிழ்நாட்டை பாராட்டிக்கொண்டிருக்க, மோடி ஆட்சியின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களை தண்டித்துக் கொண்டிருந்தது. தமிழ்நாடு மக்கள் பாஜக கூட்டணியை தோற்கடித்ததுதான் காரணம். தமிழ்நாட்டு மக்களின் குரலாக, ஜூலை 27 அன்று மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதென்று முடிவு செய்தார். தவறு மேல் தவறு செய்யும் பாஜக இன்னும் மோசமான தோல்வியை சந்திக்கும் என்று விளாசினார். நிதி ஆயோக் அறிக்கையை தலையில் வைத்துக் கொண்டாடிய மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது அவரே எதிர்பார்த்திராத திருப்பம்!
திருப்பம் தந்ததேனீர் விருந்து!
ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த சுதந்திர நாள் தேனீர் விருந்தில் முதலமைச்சர் தனது அமைச்சர் சகாக்களுடன் கலந்து கொண்டார். ஆட்சிக்கு பெரும் முட்டுக்கட்டைகளை போட்டு வந்த ஆளுநர் நடவடிக்கைகளைக் கண்டித்து கடந்த ஆண்டுகளில் தேனீர் விருந்தை புறக்கணித்து வந்த முதலமைச்சர் இந்த ஆண்டு கலந்து கொண்டது அனைவரது புருவங்களையும் உயரச்செய்தது. அமைச்சர்கள் சிலர், அண்ணாமலையுடன் கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தனர். கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தேனீர் விருந்தை புறக்கணிக்க கூட்டணிக்குத் தலைமை தாங்கிய ஆளும் கட்சி கலந்து கொண்டது, அடுத்த தேர்தல் உடனடியாக இல்லாதபோது, கட்சி வேறு; ஆட்சி வேறு என்று காட்டும் முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம். நிதிநிலை அறிக்கை கசப்பைத் தணித்துக் கொள்ள, ராஜ்பவன் தேனீர் விருந்து உதவியிருக்கலாம்!
கலைஞர் நாணயம்
கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி ஓராண்டு முழுவதும் நடந்த கொண்டாட்டங்களின் உச்சகட்டமாக கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. யாரும் எதிர்பாராதவகையில், மோடியின் ஒப்புதலோடு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல கலைஞர் நினைவிடத்தை சுற்றிப்பார்த்துவிட்டு கருணாநிதி பற்றி புகழ்ந்தும் பேசியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் சொற்களில் கூறுவதாயின், “திமுககாரர்கள் கூட இந்த அளவு கருணாநிதியை புகழ்ந்து பேசியிருக்கமாட்டார்கள்”. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், முதல்முறையாக, ஒன்றிய மோடி ஆட்சிக்கு ஒரே சமயத்தில் பாராட்டையும் கண்டனத்தையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுகவோ ஒன்றிய ஆட்சிக்கு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது; திமுக-பாஜகவுக்கிடையே ரகசிய உறவு உள்ளதாகவும் குற்றம் சாட்டியது. கலைஞர் நாணய வெளியீட்டு நிகழ்வுக்கு ஏன் காங்கிரஸ் தலைவர்களை அழைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியது.
அனைத்துலக முத்தமிழ்முருகன் மாநாடு
ஆகஸ்டு 24, 25 நாட்களில் பழனியில், கோலாகலமாக நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் துவக்கிவைத்து பேசியுள்ளார். அறிஞர்கள், ஆதினங்கள், நீதிபதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில், “எல்லார்க்கும் எல்லாமும்” என்பதுதான் திராவிட மாடல் அரசின் கொள்கை\தத்துவம் என்று முழங்கினார். முருகன் கையிலெடுத்த முருகனை முத்தமிழ் முருகனாக்கி திமுக அரசு கையிலெடுத்துள்ளது. மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முதல் தீர்மானம் மிகப்பெரிய வேல் நடுவதை கோருகிறது. பாஜக வுக்கு செங்கோல்; திமுகவுக்கு வேல்! இந்த மாநாட்டுத் தீர்மானங்கள் முருகன் மீது சொந்தம் கொண்டாடும் ’ஆன்மீக அரசியல்’. திமுக இந்துக்களுக்கு எதிரானது, கடவுள் நம்பிக்கை யற்றவர்கள் கோவில்களிலிருந்து வெளியேறவேண்டும் என்ற இந்துத்வா முழக்கங்களுக்கு அதே மொழியில் பதில் கூறும் அரசியல். மதச்சார்பின்மை பேசும் கட்சி நடத்தும் ஆட்சி, மதச்சார்பின்மையை பின்பற்ற வேண்டும்; மதம் சார்ந்த விழாக்களை நடத்தக்கூடாது. முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் கூட்டணி கட்சிகளின் விமர்சனத்தைப் சம்பாதித்துள்ளன.
திமுகவின் உட்கட்சிஅரசியல்
திமுக அமைச்சர், வேலு நடத்திய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினியின் பேச்சு திமுகவிற்குள் புகைச்சலை கிளப்பிவிட்டிருக்கிறது. திமுகவில், “பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள்” என்ற அவரது ஒப்பீடு விவாதப் பொருளாகியிருக்கிறது. திமுகவின் “5ம் தலைமுறை தலைவர் உதயநிதி ஸ்டாலின்”, புதியவர்களுக்கு பழையவர்கள் வழிவிட வேண்டுமென்று பேசியிருக்கிறார். ஆனால், ரஜினியின் பேச்சில் உள்ள வேறொரு குறிப்பை எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் ராஜ்நாத்சிங் பேசிய பேச்சை ஸ்டாலின் போலவே பாராட்டிப் பேசிய ரஜினிகாந்த், “மேலிடத்தில் உள்ளவர்கள் சொல்லாமல் அவர் அப்படி பேசியிருக்கமாட்டார்” என்று ஒரு திருகலை வழங்கியுள்ளார். கலைஞரைப் பற்றி பாராட்டிப்பேசி, பாஜக-திமுக உறவு பற்றிய ஊகங்களுக்கு ராஜ்நாத் தீனிபோட்டு சென்றுள்ளார் என்றால் அந்த ஊக அரசியலை ஊதிப் பெரிதாக்க முயல்கிறார் ரஜினிகாந்த். ரஜினி கட்சி தொடங்காமலிருக்கலாம் ஆனால் அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் செய்கிறார்.
ட்ரில்லியன் பொருளாதாரம்; அமெரிக்கப்பயணம்
ஆகஸ்ட் 17, அன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய பெண்தொழிலாளர் தங்கும் விடுதியை முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார். ரூ 706 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மிக நவீன விடுதிகளில் பாக்ஸ்கான் பெண்தொழிலாளர் 14000க்கும் மேற்பட்டவர்கள் தங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தில், 2022 ல் உணவு நஞ்சாகிப்போய், பல்லாயிரக் கணக்கான பெண் தொழிலாளர் போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தில் குதித்தனர். ஆலை ஸ்தம்பித்துப்போனது. அதற்குப் பிறகே இந்த தங்கும் விடுதி அரசால் கட்டப்பட்டுள்ளது. இது போன்ற விடுதிகளைக் கட்ட வேண்டிய பொறுப்பு பெரும் தொழில் நிறுவனங்களுடையது. அந்த பொறுப்பை, அரசு ஏற்றுக் கொள்கிறது, நிறுவனங்கள் லாபம் பார்க்கின்றன! விழாவில் பேசிய, முதலமைச்சர், பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலைசெய்யும் 41 ஆயிரம் தொழிலாளருள் 35 ஆயிரம் பேர் பெண் தொழிலாளர் என்பதைக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளருள் 42% பெண் தொழிலாளர் என்றும் இந்தியாவிலேயே இதுதான் அதிகம் என்றும் பெருமையுடன் பேசினார். “பெண் என்னும் பேராற்றல்” பற்றி பாராட்டிப் பேசியுள்ளார். முதலமைச்சரது கனவான ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைய பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ‘பெண் எனும் பேராற்றலும்’ (மிக மிக மலிவான உழைப்பும்) அரசின் சலுகைகளும்தான் பாக்ஸ்கானில் லாபத்தை மலை மலையாய் குவிக்கிறது. இப்படித்தான் தமிழ்நாட்டின் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் எனும் கனவு நிறைவேற்றப்பட வேண்டுமென முதலமைச்சர் விரும்புகிறார். இந்தக் கனவுத் திட்டத்துடன்தான் அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 27 அன்று அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதான் “எல்லார்க்கும் எல்லாம்”! இதுதான் “திராவிட மாடல்” அரசியல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)