தமிழகத் தொழிலாளர் நியாயமான போராட்டங்களுக்கு
செவி மடுக்க மறுத்துவரும் திமுக அரசு!
சென்னை அருகே சுங்குவார்சத்திரத்தி லுள்ள, தென்கொரிய பன்னாட்டு நிறுவனமான சாம்சங் தொழிலாளர்களின் போராட்டமானது நாடு கடந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தமுள்ள 5000 தொழிலாளர்களில் சுமார் 1700 பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற நுகர்வுப் பொருட்கள் தயாரித்து வழங்கும் இந்நிறுவனம் முழுக்க முழுக்க இளம் தொழிலாளர்களைக் கொண்டு 16 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இப்போதுதான் முதல் முறையாக தொழிற்சங்கம் துவங்கப்பட்டிருக்கிறது. குறைவான ்கூலி, படுமோசமான ஓய்வற்ற பணி நிலைமைகள் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வேறு வழியின்றி சாம்சங் தொழிலாளர்கள் சங்கமாக அணி திரண்டனர். சாம்சங் போன்ற நிறுவனத்தின் அடாவடியை எதிர்கொள்ள வெளித் தலைமை தேவை என்பதை நன்கு உணர்ந்திருந்த தொழிலாளர்கள் தங்கள் சங்கத்தை சிஐடியு மையச் சங்கத்துடன் இணைத்துக் கொண்டனர்.
சங்கத்தைப் பதிவு செய்ய தொழிற்சங்கப் பதிவாளருக்கு அனைத்து ஆவணங்களுடனும் படிவம் சமர்ப்பித்தனர். தொழிற்சங்க சட்டப் ்படி பதிவு செய்ய வேண்டிய பதிவாளர் எவ்விதக் காரணமும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தது சாம்சங் நிர்வாகமோ 90%க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. மாறாக, சிஐடியு போன்ற மைய சங்கத்தை, வெளித் தலைமையை ஏற்க முடியாது என்றும் வேண்டுமானால் தொழிலாளர் தரப்பிலிருந்து தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பேச தயாராக இருப்பதாகவும் சொல்லி வருகிறது. இது அப்பட்டமான தொழிலாளர் உரிமைகளை,தொழிற்சங்க உரிமைகளை, கூட்டுப் பேர உரிமைகளை மறுக்கின்ற சட்டவிரோதச் செயலாகும். தொழிற்சங்க அங்கீகாரம்,பணி நிலைமைகளில் முன்னேற்றம், ஊதிய உயர்வு என்ற நியாயமான கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்துள்ளனர். சமரச பேச்சுவார்த்தைக்கான எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் தொழிலாளர் துறை பாராமுகமாக இருக்கும் போது, தமிழக காவல்துறையோ போராட்டத்தை ஒடுக்குகிற வேலையைச் செய்து வருகிறது.
தமிழக அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்ப தற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்திட தொழிற்சங்கம் திட்டமிட்டிருந்தது. பேரணிக்கு அனுமதி இல்லை என்று கூறி சாம்சங் ஊழியர்கள் சங்கத் தலைவரும் சிஐடியு மாநிலச் செயலாளருமான தோழர் முத்துக்குமார் தலைமையிலான சுமார் 100 தொழிலாளர்களை காவல்துறை கைது செய்ததோடு தோழர் முத்துக்குமார் உட்பட சில முன்னணிகளை சிறையிலடைத்தது. சாம்சங் பன்னாட்டு நிறுவனத்திற்காக நாட்டின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை தமிழக முதல்வர் கையிலுள்ள காவல்துறை காலில் போட்டு மிதிக்கிறது.
காவல்துறையின் ஜனநாயக விரோதச் செயலைக் கண்டித்து ஏஐசிசிடியு உள்ளிட்ட மைய சங்கங்கள் கூட்டாக அறிக்கை விட்டன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்திருந்தன. செப்டம்பர் 18 அன்று மைய தொழிற்சங்கத் தலைவர்கள் ஆர்ப்பாட்ட இடத்தில் கூடுவதற்கு முன்பாகவே அவசரமாக சிஐடியு மாநிலத் தலைவர் தோழர் அ.சௌந்தர்ராஜன் உள்ளிட்ட மைய சங்க மாநில நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து தனது பன்னாட்டு நிறுவன விசுவாசத்தை காட்டிக் கொண்டது.
மாநிலம் முழுவதும் சாம்சங் தொழி லாளர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் தலையிட வேண்டும் எனக் கோரி தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பிய போதும் தமிழக முதல்வர் அமைதி காத்து வருவது கண்டனத்திற்குரியது.
அந்நிய முதலீடுகளுக்காக சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழக முதல்வர் தமிழக தொழிலாளர்களின் உரிமைகளை அதன் அடியில் போட்டு நசுக்கி விடக்கூடாது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு, நம் நாடு ஏற்றுக்கொண்ட ஐஎல்ஓ பிரகடனங்களுக்கு சாம்சங் நிறுவனம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தமிழக முதல்வர் அதை உறுதி செய்ய வேண்டும்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்.
ஒவ்வொரு முறையும் உரிய காலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களால் ஊதிய உயர்வு பெற முடிவதில்லை. பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தம் எட்டப்படும் போது நடப்பு ஊதிய உயர்வு காலமே முடிந்து விடுகிறது. அது போல் அல்லாமல், இம்முறையாவது விரைவாக பேசி ஒப்பந்தம் முடிக்கப்பட வேண்டும் என்பது போக்குவரத்துத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
போனஸ் சட்டம் அதிகபட்ச போனசுக்கு உச்ச சவரம்பு விதித்துள்ள போது, தீபாவளிக்கு 25% போனஸ் என்பது போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. தமிழக அரசு போக்குவரத்து போன்ற சேவைத் ்துறையில் லாப-நஷ்ட கணக்கு பார்க்காமல், மகளிர் இலவச பயணம் உட்பட பல்வேறு கட்டண சலுகைகளை ஈடு செய்து தொழிலாளர்களின் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றி உடன்பாடு காண வேண்டும்.
போக்குவரத்துத் துறையில் ஓய்வூதிய தாரர்களுக்கு ஓய்வு பெறும் போது ஓய்வு காலப் பயன்கள் வழங்கப்படுவதில்லை.கிட்டத்தட்ட கடந்த 60 மாத காலமாக ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பஞ்சப்படி உயர்த்தி வழங்கப்படாமல் உள்ளது. அவர்களின் மருத்துவ காப்பீடு கோரிக்கையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த சமூகம் இயங்க கடும் வெயிலிலும் மழையிலும் பணியாற்றிய போக்குவரத்து ஓய்வூதியதாரர்களின் பண பயன்கள் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றம் செல்வதையும் தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதமாக வந்தபோதிலும் மேல்முறையீட்டுக்கு செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குப் பிறகும் கூட தீர்ப்புகளை அமல்படுத்தாமல் காலம் கடத்துவது பெரும் அநீதியாகும்.
உள்ளாட்சித் துறை தூய்மை பணியாளர்கள் போராட்டங்கள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறையில் தூய்மை பணியாளர்கள் தனியார்மயமாக்கத்திற்கு, அவுட்சோர்சிங்குக்கு, காண்ட்ராக்ட் கொள்ளைக்கு எதிராகவும் அரசு அறிவித்த அரசாணை எண்: 62 படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடக் கோரியும்,பாதுகாப்பான பணி நிலைமைகள், குடியிருப்பு வசதி, கொரோனா கால உதவித் தொகை ரூ. 15,000 ஆகிய கோரிக்கைகள் மீது தொடர் இயக்கம் நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழக உள்ளாட்சித் துறையானது அடுக்கிய மூட்டையில் அடி மூட்டையாய் இருக்கும் தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்க செவி மடுக்க மறுக்கிறது. தூய்மைப் பணியாளர் விசயத்திலும் அரசு, தான் அறிவித்த குறைந்தபட்சக் கூலி அரசாணைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது என்ற அவலமான நிலை நிலவுகிறது. தூய்மைப் பணியாளர்களை அமைப்பாக்கும் முன்னணி தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதும் நடந்து வருகிறது. தூய்மை பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆவேசத்திற்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புடன் கல்வி அமைச்சர் பேச்சு வார்த்தை.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு- டிட்டோ ஜாக், பழைய பென்ஷன் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்பாடுகளை களைதல், பதவி உயர்வின் போது ஊராட்சி ஒன்றிய மட்ட இடம் மாறுதல் என்பதற்குப் பதிலாக மாநில அளவில் இடமாற்றம் போன்ற ஆசிரியர் விரோத அரசாணைகளை திரும்பப் பெறுதல், எமிஸ் செயலி இயக்கத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிப்பு செய்தல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திட்டத்தில் உறுதியாக, கட்டுக்கோப்பாக, நன்கு அமைப்பாக்கப்பட்ட விதத்தில் இருந்த காரணத்தினால் வேறு வழியின்றி மாநில கல்வித்துறை அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையில் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுபோல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோர், டாஸ்மாக் விற்பனையாளர்கள் கோரிக்கைகளும் நீரு பூத்த நெருப்பாக உள்ளது.
திமுக அரசு விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் தொழி லாளர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட எச்சரிக்கையை தமிழக அரசு காணத் தவறினால் அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும். தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதி கடப்பாட்டிலிருந்து வழி தவறக்கூடாது. மதவெறி எதிர்ப்பு, கூட்டாட்சி, பன்மைத்துவ இந்தியாவுக்காக நிற்கிற தமிழக அரசு, கார்ப்பரேட் நலனிலிருந்து நவ தாரளவாத கொள்கைகளை அமுல்படுத்துவது சமூக நீதி, சமத்துவத்திற்கு எதிரானது என்பதையும் இந்தக் கொள்கைகளை அமுல்படுத்தியதால் மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டு வர முடியாமல் ஏற்பட்டுள்ள பின் விளைவுகளையும் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது.
ஒன்றுபட்ட நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு செயல்பாடும் போர்க்குணமிக்க போராட்டங்களும் தொழிலாளர் வர்க்க வெற்றிக்கு இன்றியமையாததாகும்.
- தேசிகன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)