பீகார் நிகழ்வுகள்

பணவீக்கம், வேலையின்மை, பாசிசத்திற்கு எதிராக, பீகாரின் தெருக்களில் அணிதிரண்ட மக்கள்

பீகாரில் உள்ள மாபெரும் கூட்டணியின் கட்சிகள், ஆகஸ்ட் 7ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் நடத்த அழைப்பு விடுத்திருந்த கண்டனப் பேரணிகளில், சமூகத்தின் பல்வேறு பிரிவு மக்களும் பெருவாரி யாகக் கலந்துகொண்டனர். பணவீக்கம், வேலையின்மை, பாசிசம், புல்டோசர் ஆட்சி, முஸ்லிம்கள், பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும், பீகாரை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக் காகவும் இந்த கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. இனியும் இந்த இழிநிலைமையை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று பாஜக அரசை எச்சரிக்க, தலைநகர் பாட்னாவிலும் பிற மாவட்டங்களிலும் ஏராளமான பொதுமக்களும் சிபிஐஎம்எல் உள்ளிட்ட பிற மாபெரும் கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்களும், பீகாரின் தெருக்களில் அணி திரண்டனர்.சிபிஐஎம்எல் பீகார் மாநிலச் செயலாளர் குணால், பீகார் மக்களின் வரலாற்று சிறப்புமிக்க பங்கேற்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்ததோடு, பாசிச பாஜக அரசுக்கு எதிராக பீகார் எழுந்து நிற்கும் என்பதை மீண்டும் ஒருமுறை அது நிரூபித்துள்ளது என்றார். உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப் படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை என்று சிபிஐஎம்எல் தெரிவித்துள்ளது. ஏழைகளின் வீடுகள் இடிக்கப்படுகின்றன. முஸ்லிம்கள், பெண்கள் மீது இடைவிடாத தாக்குதல்கள் நடத்தப்படு கின்றன. சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜே.பி தலைமையில் பீகார் மண்ணில் இருந்துதான் புரட்சி தொடங்கியது. இப்போது நாடு மீண்டும் அறிவிக்கப்படாத அவசரநிலையை எதிர்கொண்டுள்ள வேளையில், மோடி-ஷாவின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து பீகார் மக்கள் தெருக்களில் இறங்கியுள்ளனர்.தலைநகர் பாட்னாவில் நடந்த கண்டனப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐஎம்எல் எம்எல்ஏக்கள் மஹ்பூப் ஆலம், சந்தீப் சவுரப், கோபால் ரவிதாஸ், அமர்ஜித் குஷ்வாஹா ஆகியோரும் திரேந்திர ஜா, மீனா திவாரி, ஷஷி யாதவ், ராஜாராம், அப் உதய் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். ஜே.பி.யின் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, அணிவகுப்பு டாக் பங்ளா சௌக்கிற்குச் சென்றது. அங்கு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆர்ஜேடி, சிபிஐஎம்எல், காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.அதிகரித்து வரும் எதேச்சதிகாரம், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் சதி, முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புக் கூச்சல்கள், புல்டோசர் ஆட்சி, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு தீர்க்கமான போரை நடத்த மாபெரும் கூட்டணியின் கட்சிகள் உறுதிபூண்டுள்ளதாக கூட்டத்தில் உரையாற்றிய சிபிஐஎம்எல் தலைவர்கள் தெரிவித்தனர். டெல்லியிலும் பாட்னாவிலும் உள்ள அரசாங்கங்களுக்கு எதிராக பீகார் மக்கள் கிளர்ந்து எழவேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.தனிநபர் வருமானம், கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற அனைத்து மனிதக் குறியீடுகளிலும் பாஜக-ஜேடியு அரசாங்கத்தின் கீழ் பீகாரின் மோசமான நிலையை ஜூன் 5 அன்று நாங்கள் வெளியிட்ட மதிப்பெண் அட்டை அடையாளம் கண்டுள்ளது என்று சிபிஐஎம்எல் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் மஹ்பூப் ஆலம் கூறினார். வறுமைக் குறியீட்டின்படி, பீகாரில் 51.9% மக்கள் ஏழைகளாக உள்ளனர். அதிகாரத்துவக் கொள்ளையும், நிறுவனமயப்பட்ட ஊழல்களும் தினமும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.கும்பல் படுகொலைகள், அதிகரித்து வரும் குற்றச்செயல்கள், தலித்துகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஏழைகளை வெளியேற்றுதல், விஷ மதுவால் நிகழும் படுகொலைகள், போதைப் பொருட்களால் நாசமாகும் இளைஞர்கள், அதிகரித்துவரும் வேலையின்மை, முதுகொடிக்கும் பணவீக்கம், புலம்பெயரும் தொழிலாளர்கள், அழிக்கப்படும் விவசாயம், சுற்றுச்சூழலை நாசமாக்குதல் இவைதான் இன்றைய பீகாரின் உண்மை நிலை. வறுமையும் கடன் சுமையும் வித்யாபதிநகர் (சமஸ்திபூர்), பதேபூர் (வைஷாலி) ஆகிய இடங்களில் முழு குடும்பங்களையும் தற்கொலைக்குத் தள்ளி யுள்ளது. இவை பீகாருக்கான எச்சரிக்கை மணிகளாகும். ஆனால், அரசாங்கம் எதையும் பார்ப்பதற்கோ கேட்பதற்கோ தயாராக இல்லை.மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் மாபெரும் கூட்டணி பதாகையின் கீழ் கண்டனப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அனைத்து எம்எல்ஏக்களும் அவரவர் மாவட்டங்களில் நடந்த பேரணியில் கலந்து கொண்டனர் .