மது ஒழிப்பின் அரசியல் !?
மது ஒழிப்பு மிகவும் அவசியமானது. இனியும் தட்டிக் கழிக்க முடியாது. தமிழகத்தையே நடுநடுங்கச் செய்த, கள்ளக்குறிச்சி, கருணாபுரம் நச்சுசாராய நிகழ்வு இதையே வற்புறுத்துகிறது. துயரநெருப்பில் வெந்துமடியும் கருணாபுரம் மக்களைச் சந்தித்த, இகக(மாலெ) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி தலைமையிலான குழுவிடம், “ஏழை, பாழைகளின் உயிரைப் பறிக்கும் ‘எமன்’ டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லுங்கள்..” என்று ஒரே குரலில் கதறி அழுதனர். கருணாபுரம் மக்களை கருணையின்றி கொன்றுகுவித்த அந்தத் துயர நிகழ்வுக்குப்பின், மது இல்லா தமிழகம், போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு எனும் கோரிக்கை முன்பைவிட பலமடங்கு வலுத்து வருகிறது.
இந்தப் பின்னணியில் விசிக அறிவித்துள்ள மதுஒழிப்பு-பெண்கள் மாநாடு வரவேற்கத்தக்கது.
ஆட்சியிலிருக்கும் திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் மதுஒழிப்பு மாநாடு திமுகவுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கும். விசிகவும் மிகக் கவனமாகவே, தேசிய அளவில் மது ஒழிப்பு கொள்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிய அரசை வலியுறுத்த அழைப்பு விடுத்திருந்தது. எனவே திமுகவும் அமைதியாகவே இருந்தது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்திருக்கிறோம் என்று விசிக அறிவித்த உடன் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. திமுக கூட்டணியில் விரிசல், அணிமாறுகிறதா விசிக? 2026ல் புதிய கூட்டணிகள் ஏற்படுமா? என்று ஊடகங்கள் உசுப்பிவிட்டன. அதிமுகவை அழைக்கும் போது பாமக, பாஜகவை ஏன் அழைக்கக் கூடாது? நாங்களும் மதுஒழிப்பு கொள்கை உள்ளவர்கள்தான் என்று (அணிமாற்ற கணக்கோடு) ராமதாஸ் கூறினார். மதவாத, சாதியவாத சக்திகளோடு கைகோர்க்கமாட்டோம் என்று திருமாவளவன் கூறிவிட்டார். இதற்கிடையில் அதிகாரத்தில் பங்கு என்ற விசிகவின் வீடியோ ஊடகங்களில் பரவியது. இந்த வீடியோ நீக்கப்பட்டது. மீண்டும் பதிவேற்றப்பட்டது. ‘அதிகாரத்தில் பங்கு’ அரசியல் களத்தை மீண்டும் ஒரு சுற்று சூடாக்கியது. ஏற்கனவே, காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, காமராஜர் ஆட்சி அமைக்கவேண்டும்; எத்தனை காலத்துக்கு மற்றவர் பின்னால் ஓடிக்கொண்டிருப்பது என்று பேசியிருந்தார். இதற்கு சுற்றிவளைத்து திமுக தலைவர்கள் கருத்துக் கூறினார்கள். 2026 தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளைப்பெற திமுக கடுமையாக பாடுபட வேண்டும் என்று திமுகவின் மூத்த அமைச்சர்களும் துணைமுதலமைச்சர் போல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் உதயநிதி பேசியதும் சூட்டை கூடுதலாக்கியது. மத்தியில் ‘கூட்டாட்சி’ காணும் திமுக, மாநிலத்தில் மட்டும் ஏன் ‘சுயாட்சி’ நடத்த வேண்டும் பத்திரிகையாளர் கார்த்திக் பாஜக கோணத்திலிருந்து நக்கலாக கேள்வி எழுப்பியிருந்தார்.
திமுக ஆட்சி மதுஒழிப்பை அறிவித்தால் 2026ல் திமுக வின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்று கூறி திமுக கூட்டணிமீதான தனது உறுதிப்பாட்டை திருமாவளவன் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், விசிக மாநாட்டில் கலந்துகொள்ள ‘முறைப்படி’ அழைப்பு வந்தால் பரிசீலித்து முடிவெடுப்போம் என்று தாமதமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கு விசிக தரப்பிலிருந்து பதிலில்லை. மதுஒழிப்பு மாநாடு, திமுக கூட்டணிக்குள் (இந்தியா கூட்டணி) உரசலை உருவாக்கியதை மறுக்க முடியாது. எனவேதான், கூட்டணிக்குள் “விரிசலும் இல்லை உரசலும் இல்லை” என்று மீண்டும் மீண்டும் அறிவித்தார். திருமா, தேர்தல் சமயத்தில்தான் விசிக அரசியல் கட்சி, மற்ற சமயத்தில் அது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி என்றும் வலியுறுத்தினார்.
முதலீட்டை ஈர்க்க ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில், நடந்த இந்த சூடான நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். திமுகவிலிருந்து ஆர்எஸ் பாரதியும் டிகேஎஸ் இளங்கோவனும் மதுஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்து ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனாலும் இந்த உரசலை சிபிஅய்(எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்விலும் கூட காணமுடிந்தது. யார் நினைத்தாலும் திமுக கூட்டணியை எதுவும் செய்யமுடியாது என்ற உரத்த குரலை கேட்க முடிந்தது. சில நாள் கழித்து, நான்காண்டு அனுபவம் கொண்ட உதயநிதி துணைமுதல்வராக ஆசைப்படும்போது நாற்பதாண்டு அனுபவமுள்ள திருமாவளவன் துணை முதல்வராக ஆசைப்படக் கூடாதா எனக் கேட்டு மீண்டும் பற்ற வைத்துள்ளார் விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன்! மதுஒழிப்பு மாநாடு அறிவித்ததில் இருந்து விசிக அரசியல் களத்தில் முதன்மை பேசுபொருளாக தன்னை நிறுத்திக் கொண்டது.
ஆனால் மதுஒழிப்பு பற்றிய பரப்புரையைவிட கூட்டணி தொடர்பான பரபரப்புரையே மேலோங்கி நின்றது. அனைத்தும் 2026 தேர்தல் நோக்கிய பரப்புரையாகவே இருந்தது. முக்கிய கட்சிகளுக்கு மதுஒழிப்பில் ஆர்வமோ அக்கறையோ இல்லை என்பதையும் இந்த விவாதக் களம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில், நீடித்த வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக நிதிஆயோக் அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டது. ஆனால், டாஸ்மாக் மூலம் ஆறாக ஓடும் சாராயம், அந்த வளர்ச்சிக் குறியீடுகளையெல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறது. 1983 ல் அதிமுக ஆட்சியில், 30 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட டாஸ்மாக்? ஈட்டியது. 2023-24 ல் ரூ 45,855 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் 130 மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது! தமிழ்நாட்டின் சொந்த வரிவருவாயில், 29% 5000 மதுக்கடைகள், 3000 பார்கள் உள்ள டாஸ்மாக்கிலிருந்தே வருகிறது.
சமூகநலத்திட்டங்கள் வாயிலாக அரசு கொடுக்கும் பணத்தை டாஸ்மாக் வழியாக திருப்பி எடுத்துவிடும் பொருளாதார வழிமுறையாகவே டாஸ்மாக் கடைகளை அதிமுக ஆட்சி நடத்தியது. அதே பாதையையே திமுக ஆட்சியும் பின்பற்றுகிறது.
நலத்திட்டங்களுக்காக அறியப்பட்ட தமிழ்நாடு, தனது நலத்திட்டங்களுக்காக டாஸ்மாக் வருவாயை எதிர்பார்த்து இருப்பது இழுக்கானது. இது அளவிடமுடியாத சமூகத் தீங்குகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பெண்கள் தொகையில் 10.7% விதவைகள் (38.51 லட்சம்). இவர்கள் விதவைகளாவதற்கு முதன்மை காரணம் டாஸ்மாக் சாராயக் கடைகள். ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தில் (மனித) உழைப்பு சக்தி முக்கியமானது என்று முதலமைச்சரும் பேசிவருகிறார். இந்த மனித மூலதனத்தை, நல்ல சாராயமும் நச்சுசாராயமும் போதைப்பொருளும் தள்ளாடும், தடுமாறும் சமுதாயமாக மாற்றிவிட்டது. தள்ளாடும் சமுதாயத்தால் எப்படி உற்பத்தி வளர்ச்சி அடையும்? தமிழ்நாட்டின் மனித வளர்ச்சிக் குறியீடுகள், சமூகநீதி பெருமைகள் பற்றி எழுதிக் குவிக்கும் ஆய்வாளர்களும் அறிஞர்களும் டாஸ்மாக் இழைக்கும் சமூக அநீதி பற்றி ஆய்வு செய்வதில்லை.
அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூடவேண்டுமென பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதிமுக ஆட்சி, இந்தப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியது. ஆகையால் பெண்கள் அணிதிரண்டு அதிமுகவை தோற்கடித்தனர். பெண்களின் கோபத்தை புரிந்துகொண்ட திமுக டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தேர்தல் வாக்குறுதியளித்து வெற்றியும் பெற்றது. விடியல் பயணம், காலை உணவு போன்ற நல்லதிட்டங்களை நடத்தி வருகிறது ‘சமூகநீதி’ திமுக ஆட்சி. ஆனால் பெண்கள் கைகளுக்குச் செல்லும் பணத்தின் பெரும்பகுதியை டாஸ்மாக் கடைகள் பிடுங்கிக் கொள் வது ஆட்சியாளர்களுக்கும் தெரியும். ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக உள்ள மது உற்பத்தியாளர்கள் கருணாபுரங்களை உற்பத்திசெய்கிறார்கள் என்பதையும் மறந்துவிட முடியாது. பெண்களது உண்மையான மகிழ்ச்சிக்கு, சமூகநீதிக்கு வழிவகுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை மூடுமா? விசிக மதுஒழிப்பு மாநாடு, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இட்டுச்செல்லுமா? எது எப்படியாயினும் இடது சக்திகளும் உழைக்கும் வர்க்கமும் பெண்களும் மது இல்லாத, போதை இல்லாத தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து போராடியாக வேண்டும். இந்த நோக்கத்துடன்தான், மா லெ கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புகளான அவிகிதொச, பெண்கள் கழகம், ஏஅய்சிசிடியு உள்ளிட்ட அமைப்புகள் அக்டோபர் 1 அன்று, ஒன்றியங்களில் நடத்தும் கிளர்ச்சிகளில் வீடு, வேலை, அடிப்படை வசதிகள், கல்வி, மருத்துவம் தொடர்பான கோரிக்கைகள் மட்டுமின்றி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டுமென்ற கோரிக்கையையும் வலியுறுத்துகிறது.
-அரசியல் பார்வையாளன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)