இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்

 

பகுதி - 1

கட்சித் திட்டம் குறித்து

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் என்பது அடிப்படையில் போர்த் தந்திரம், செயல் தந்திரம் குறித்தது, புரட்சியின் பாதை குறித்தது ஆகும். இந்திய சமூகம் பற்றிய பகுப்பாய்வு, இந்திய அரசு - அதன் தன்மை குறித்த மதிப்பீடு, சமூகத் தில் உள்ள வர்க்க, சமூக சக்திகள், அதன் சமன்நிலை, முதன்மையான முரண்பாடு - இவை அனைத்தையும் குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கான பாதை - போர்த்தந்திரம், செயல் தந்திரம் - வகுக்கப் படுகிறது.

நிலப்பிரபுத்துவத்தை கட்டிக் காக்கிறது முதலாளித்துவம்

நாம் இந்திய சமூகத்தை அரை காலனி,- அரை நிலப்பிரபுத்துவ சமுதாயம் என வரையறை செய்ததை மாற்றி, ”விவசாயம் மேலோங்கிய, பின் தங்கிய முதலாளித்துவ சமுதாயம்என வரையறுக்கிறோம். ஆனால், அதே நேரத்தில், மிக வலுவான நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்கள் நிலவுகிறது என்கிறோம். இது முதலாளித்துவ வளர்ச்சி இயக்கப் போக்கில், நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்கள் தானே அழிந்து போகும் என எந்த விதத்திலும் அர்த்தமாகாது. மாறாக, மேலை நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களைக் கட்டிக் காக்கிற, அவற்றுக்கு வலு சேர்க்கிற பணியையும் அவற்றை நிர்மூலமாக்க வேண்டிய, முற்போக்கு பாத்திரம் ஆற்ற வேண்டிய முதலாளித்துவம் தான் செய்கிறது. இதுதான், இந்தியாவின் குறிப்பான தன்மை ஆகும். எனவே, நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களை துடைத்தெறிய வேண்டிய பணியை நிறைவேற்றத்தக்க ஆற்றல் படைத்த முற்போக்கு வர்க்கம், விவசாயத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய பாட்டாளி வர்க்கமாகவே இருக்கிறது. இந்திய சமுதாயத்தை, அரசியல் கட்டமைப்புகளை ஜனநாயகப்படுத்தும் ஆற்றலை இந்திய முதலாளித்துவ வர்க்கம் இழந்து விட்டது என்பது மட்டுமல்ல, அது நிலவுகிற பின் தங்கிய, நிலப்பிரபுத்துவ அம்சங்களைக் கட்டிக் காக்கும் பிற்போக்கு வர்க்கமாக சீரழிந்து போய் விட்டது.

இந்திய முதலாளித்துவ வர்க்கம், ஏகாதிபத்திய சக்திகளோடு கரம் கோர்த்துக் கொண்டு, நிலப்பிரபுத்துவ அம்சங்களை கட்டிக்காப்பது, அவற்றுக்கு வலு சேர்ப்பது என்பதன் மூலம், இந்திய அரசு கட்டமைப்புக்கு தலைமை தாங்குகிறது. தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொள்ளும் வர்க்க சமரசத்தின் காரணமாக, அது இந்திய சமுதாய வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளுகிறது, உருக்குலையச் செய்கிறது. அதுதான் இந்திய முதலாளித்துவத்தின் உருக்குலைந்த வளர்ச்சிக்கு, அதன் வெளிப்பாடான வலுவான சாதீய பிரச்சனைகளுக்கு, மோதல்களுக்கு, பெண்ண டிமைத் தனத்தைக் காப்பதற்கு, தேசிய இனங் களின் சிறைச்சாலை ஆவதற்கு காரணமாக அமைகிறது. அதன் மூலம், தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. நவ தாராளவாத கால கட்டத்தின் பின்னணியில், இந்திய ஆளும் வர்க்கம், தன்னை பாதுகாத்து கொள்வதற்காக பழைய முறையில் ஆள முடியாது என்பதால், பெயரளவிற்கான ஜனநாயக முகமூடிகளையும் கூட தூக்கி எறிந்து விட்டு, தனது உண்மை முகமான பாசிச சர்வாதிகாரத்தை முழுமூச்சாக நடத்திட எத்தனிக்கிறது. அதுதான் மோடி தலைமையிலான பிஜேபி - ஆர்எஸ்எஸ் ஒன்றிய அரசாக இன்று உருவெடுத்து இருக்கிறது.

போர்த் தந்திரம்

நாம் ஏன் மத்தியில் ஆட்சிக்கு வருவது, அதைக் கைப்பற்றுவது குறித்து சொல்லவில்லை என சில தோழர்கள் கவலை தெரிவித்தனர். அந்த பிரச்சனையை ஆட்சிக்கு வருவது மாநில அளவிலா அல்லது ஒன்றிய அளவிலா என காண்பதை விட ஒரு புரட்சிகர இயக்கப்போக்கு எப்படி இருக்கலாம் என காண்பது அதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

அனுபவங்களை இறக்குமதி செய்ய முடியாது

புரட்சி குறித்த இரண்டு முக்கிய அனுபவங்கள் உலக அளவில் நம் முன்னால் வந்திருக்கின்றன. ஒன்று, ரஷ்ய சோசலிச புரட்சி அனுபவம். மற்றொன்று சீனத்தின் புதிய ஜனநாயகப் புரட்சி அனுபவம். ரஷ்யாவில் நடந்த புரட்சி ஒரு பின் தங்கிய முதலாளித்துவ நாட்டில் நடந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி. தொழிலாளர் வர்க்கம் அந்தப் புரட்சியின் தலைமையாக, உந்துசக்தியாக இருந்தது. தொழிலாளர் பேரெழுச்சி என்பது அந்தப் புரட்சியின் பாதையாக இருந்தது. சோவியத்துக்கள், அன்றைய ரஷ்ய முதலாளித்துவ அரசுக்கு எதிரான, இணை அதிகார மையங்களாக உதித்தன. மக்கள் அதிகாரத்தின் மையங்களாக, ஜார் ஆட்சிக்கு எதிரான, இணை அதிகார மையங்களாக இருந்த சோவியத்துக்கள் எல்லாம் சேர்ந்துதான் புரட்சிக்குப் பிந்தைய, மாற்று அரசு அதிகாரத்தின் அஸ்திவாரங்களாக அமைந்தன.

சீனம் ஒரு அரைக் காலனி - அரை நிலப் பிரபுத்துவ நாடாக இருந்தது. அங்கு ரஷ்யா போன்ற சோசலிச புரட்சி பாதையை பின்பற்ற முடியாது. மாறாக, சீனத்திற்கான புதியதோர் பாதையாக புதிய ஜனநாயகப் புரட்சி எனும் பாதையை மாவோ முன்வைத்தார். கிராமங்களில் தளப் பிரதேசங்களை உருவாக்குவது, நகரங்களை சுற்றி வளைப்பது என்பது போன்ற தந்திரங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. தொழிலாளர் வர்க்கத் தலைமையிலான, விவசாய, குட்டி முதலாளித்துவ வர்க்கங் களையும் உள்ளடக்கிய புரட்சிகர வர்க்கங்களின் ஆட்சியை நிறுவுவது என்பது அவர்களின் குறியாக இருந்தது.

இது தவிர, கியூபா, வியட்நாம் போன்ற வேறுபட்ட அனுபவங்களும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்து வரும் போராட்டங்களும் நம் முன்னால் இருக்கின்றன. கருத்தியல் மேலாதிக்கம், தொழிற்சாலை கவுன்சில்கள் போன்ற கருத்துக் கோப்புகள் கிராம்சியின் பங்களிப்பாக இருக்கிறது. இந்தியாவின் இன்றைய பாசிச வளர்ச்சி பின்னணியில், நாம் கிராம்சியின் கருத்துக்களை மறுவாசிப்பு மேற்கொண்டிட அவசியம் இருக்கிறது. ஆனால், அத்தகைய அனுபவங்கள் எவற்றையும் அப்படியே இறக்குமதி செய்ய முயற்சிப்பது இயக்க மறுப்பியல் பார்வை ஆகும்.

இந்தியாவில் நாம் ரஷ்யப் பாதையையோ, சீனப் பாதையையோ மட்டுமே பின்பற்றுவது என்பது யதார்த்த நிலைமைகளுக்குப் புறம்பானதாக இருக்கும். இந்தியாவின் குறிப்பான நிலைமைகளில் நாம் இந்த அனைத்து அனுபவங்களையும், கருதுகோள்களையும், கருத்துக் கோப்புகளையும் கிரகித்துக் கொண்டு, இந்திய மண்ணுக்கான ஒரு புதிய பாதையை உருவாக்குவதுதான் பொருத்தமானதாக இருக்கும். அதற்கான ஒரு முயற்சிதான் நமது கட்சித் திட்டம்.

நம்முடைய நிலைமைகளுக்கும் புரட்சிக்கு முந்தைய சீனத்தின் நிலைமைகளுக்கும் கூடுதல் நெருக்கம், ஒத்த தன்மைகள் காணப்பட்டாலும், நம் நாட்டில் அதிகரித்து வரும் முதலாளித்துவ வளர்ச்சி, கிராமப் புறங்களையும், விவசாயத் தையும் அதிகரித்த அளவில் ஊடுருவும் அந்த வளர்ச்சி, தொழிலாளர் பேரெழுச்சியின் பங்கு கூடுதலான அம்சமாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அதே போல, கிராமப் புறங்களில் மக்கள் அதிகாரத்தை நிறுவக் கூடிய கிராமக் கமிட்டிகள் போன்ற வடிவங்களை உருவாக்குவதும் கூட அதிக கவனத்தைக் கோருகிறது. மேலும், மிக நீண்ட காலமாக நிறுவனமயமாகி இருக்கும் ஒரு பாராளுமன்ற ஜனநாயக முறை, அதிகாரங்கள் மையப் படுத்தப்பட்ட ஒன்றிய அரசு முறை, நிலையான ராணுவம், பல கட்சி ஜனநாயக முறை மூலம் நடைமுறைப் படுத்தப்படும் முதலாளித்துவ (சர்வாதிகார) ஆட்சி, அதையே பாசிச ஆட்சி முறையாகவும் தற்போதைய ஆட்சியாளர்களால் பயன்படுத்த முடிகிறது என்கிற யதார்த்தங்கள் இந்தியப் புரட்சியின் பாதை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

மாநில அரசு - சில விவாதங்கள்

பாராளுமன்ற ஜனநாயக முறைக்குள், அதன் அனைத்து விதமான எல்லைகளோடு கூடவே, செயல்பட வாய்ப்பு இருக்கக் கூடிய இன்றைய நிலைமைகளில், ஏதாவது ஒரு மாநிலத்தில், மாநில அளவில் ஆட்சிக்கு வருவது கம்யூனிஸ்டுகளுக்கு முடியலாம் என்கிற சாத்தியப்பாட்டை நாம் மறுத்து விட முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு மாநில அரசு எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதே கேள்வி.

இது இந்திய கம்யூனிச இயக்கத்தில் நீண்ட விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் ஒரு கேள்வி. ’50களில் கேரள மாநிலத்தில் ஆட்சி பீடமேறிய கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு, மைய அதிகாரத்திற்கு எதிராக செயல்பட்ட போது, மக்கள் சார்பான, நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ அரசுக்கு எதிரான சட்டங்களை இயற்றிய போது, ஒன்றிய அரசால் கலைக்கப்பட்டது. பிற்காலத்தில், மீண்டும் ஆட்சிக்கு வருகிற போது, அந்த கட்சிகள், ஆட்சி கலைக்கப் படாமல் தொடர்கிற விதத்தில், கட்சி திட்டம் திருத்தப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டியது. சிபிஎம்மின் 1964 திட்டத்தின் பாரா 112 பற்றிய விவாதம் மிகவும் பிரபலமானது. 1. அத்தகைய அரசுகள் மக்களின் உடனடி சீர்திருத்தங்களுக்கான அரசாக இருக்கும் என்பது. 2. மைய அரசில் பங்கேற்கலாம் என்கிற திருத்தம். 3. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாநில அரசு என்பது ஒரு மாறிச்செல்லும் கட்டத்திற்கான அரசு, அது மக்களின் புரட்சிகர போராட்டத்திற்கான மையமாக திகழும் அரசு என்ற கருத்துக்கோப்பை நீர்த்துப் போகச் செய்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் சரிவை புரிந்து கொள்வதற்கான திறவுகோலாக அந்த பாரா 112ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை காணலாம்.

நாம் அத்தகைய தவறுகளை செய்திடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஒரு வேளை ஏதாவது மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் சூழல் எழுமானால், அந்த மாநில அரசு, மக்களின் புரட்சிகர போராட்டங்களின் மையமாக திகழும். அதுவே, அதன் தலையாய செயல்பாடாக இருக்கும். முதலாளித்துவ அரசுகளின் சீர்திருத்தங்களுக்கு நேர்மாறாக, மக்கள் சார் சீர்திருத்த பணிகளை மேற்கொள்ளும் அரசாக அது இருக்கும். அப்படி இருக்கிற பட்சத்தில், அந்த மாநில அரசு கேரள அனுபவத்தை சந்திப்பது தவிர்க்க முடியாததாக இருக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. அதுவே, மக்கள் போராட்ட மையமாக இருக்கும் போது, இந்திய ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாவது தவிர்க்கப்பட முடியாதது. அப்படி வரும்போது, அது ஒரு நாடு தழுவிய புரட்சிகர மக்கள் போராட்டத் திற்கான, புரட்சிகர ஜனநாயகத் துக்கான சூழலை உருவாக்கிடும் ஆற்றல் படைத்ததாக இருக்கும். அதைத்தான், இந்திய சூழலில் ஒரு வேறுபட்ட சூழலாக நாம் காண்கிறோம்.

ஆனால், இறுதி வெற்றிக்கான, ஒரு தீவிர சமூக மாற்றத்திற்கான சூழல் என்பது எப்படி இருக்கும் என்பதை கட்சித் திட்டம் மிக அழுத்தமாக விளக்கி இருக்கிறது. அத்தகைய ஒரு சூழல் மிக நீண்ட தூரம் என்றாலும் மிகவும் வேறுபட்ட ஒரு சூழல் என்றாலும், இன்றைக்கு நிலவும் சூழல் அல்ல என்றாலும், கண்டிப்பாக அதனை நம்மால் சித்திரப்படுத்த முடியும். அதனால் தான், கட்சி, அய்க்கிய முன்னணி, மக்கள் படை ஆகிய மூன்றும் ஒரு புரட்சிகர சமூக மாற்றத்திற்கான முன்நிபந்தனை என சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்க ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நமது கட்சித் திட்டமும் அதை அங்கீகரிக்கிறது. ஆனால், நாம் இன்று சந்திக்கும் காலக்கட்டம் நீண்ட கால ஆயுதப் போராட்டத்திற்கான காலக்கட்டம் அல்ல, மாறாக அது ஒரு நீண்ட கால அரசியல் போராட்டத் திற்கான காலக்கட்டம் ஆகும்.

அமைதி வழி என்பது பாராளுமன்ற வழி அல்ல

மிகவும் விதிவிலக்கான சூழலில், இன்றைய தினம் நாம் கற்பனை கூட செய்ய முடியாத ஒரு சூழலில் அமைதி வழியில் மாற்றம் ஏற்படலாம் என்பது தத்துவரீதியாக அத்தகைய ஒரு சாத்தியப்பாட்டை காணத் தவறக் கூடாது என்பதற்காக மட்டுமே சொல்லப்படுகிறது. அமைதி வழியில் மாற்றம் என்பது பாராளுமன்ற வழியில் மாற்றம் என பொருள் அல்ல. இந்தியாவில் மிக நீண்ட மக்கள் போராட்டம், போர்க்குண மிக்க போராட்டங்கள் நடந்த பிறகுதான் அதன் காரணமாகத்தான் சுதந்தரம் பறித்தெடுக்கப் பட்டது. அதுவே தீர்மான கரமானது. ஆனால், அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது, அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தகர்ந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பழைய நிலைமையில், பழைய விதத்தில் ஆள முடியாது என்கிற நிலைமைக்கு வந்திருந்தது. தீவிர மக்கள் போராட்டம் ஒருபுறம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சரிவு மறுபுறம் என்கிற பின்னணியில்தான் ஒப்பீட்டளவில் அமைதி வழியில் (ஒரு ஆயுதப் போராட்டம், படை, வன்முறை, போர் ஆகியன முதன்மை பாதையாக இல்லாமலே) இந்தியா சுதந்தரம் பெற்றது. அது போரின் மூலம் பெற்ற சுதந்தரம் அல்ல, மாறாக, மக்கள் எழுச்சியின் அடிப்படையில், போர்க்குணமிக்க போராட் டத்தின் அடிப்படையில், ஆனால், ஒரு ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற சுதந்தரம் ஆகும்இது மிகவும் குறிப்பிடத் தக்க ஓர் விதிவிலக்கான அனுபவம் ஆகும். இதைத் தான் நாம் அர்த்தப் படுத்துகிறோம் என நாம் சொல்லமுடியாது. இது போன்றதொரு சூழலை, ஆனால் முற்றிலும் வேறுபட்டதொரு சூழலை நாம் அர்த்தப் படுத்துகிறோம்.

சில வரையறைகளும் மறுவரையறைகளும்

அய்க்கிய முன்னணி என்பது அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல, தேர்தல் கூட்டணிகள் அல்ல, ஒத்த கருத்துள்ளவர்களோடு இணைந்த மேடைகள் அல்ல, அது வர்க்கங்களின் கூட்டணி ஆகும்.

சக்திகளின் சமநிலை என்பது அரசியல் கட்சிகளோடு காணப்படும் உடன்பாடோ, தேர்தலில் மேற்கொள்ளப்படும் தொகுதி உடன்பாடோ அல்ல, அது தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் வர்க்கம், நகர்ப்புற - கிராமப்புற கீழ் நடுத்தர வர்க்கங்களின் கூட்டணியோடு, அந்த வர்க்கங்களின் ஒற்றுமையோடு, அதற்கு சாதகமாக, இதர ஊசலாடும் வர்க்கங்களை எவ்வளவு தூரம் வென்றெடுப்பது என்பது குறித்ததும் அதையொட்டி வர்க்க சமன்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தது ஆகும்.

வர்க்கப் போராட்டம் என்பது தொழிற்சாலைகளில் நடக்கும் பொருளாதாரப் போராட்டம் அல்ல. ஒரு முதலாளிக்கு எதிரான போராட்டம் அல்ல, மாறாக, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்துக்கே, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கங்களுக்கே எதிரான போராட்டம் ஆகும். அரசுக்கு, ஆளும் வர்க்கங்களுக்கு, அதிகாரத்திற்கு, உள்ளூர் ஆதிக்கங்களுக்கு சவால் விடும் அனைத்துமே வர்க்கப் போராட்டங்கள் தான். சில சமயங்களில் அது சாதி ஆதிக்கத்திற்கு எதிரானதாக வெளிப்படலாம். சில சமயங்களில், அது ஆணாதிக்கத்திற்கு எதிரானதாக வெளிப் படலாம். வேறு சில சமயங்களில் அது மதவெறிக்கு எதிரானதாக, வெறுப்பு அரசியலுக்கு எதிரானதாக, கார்ப்பரேட் ஆதரவு அரசியலுக்கு எதிரானதாக வெளிப்படலாம். எனவே, இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில், பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில், சிக்கலான பல பிரச்சனைகள் நிலவி வரும் நாட்டில், வர்க்கப் போராட்டமும் பல தரப்பட்ட பரிமாணங்களையும், பல தரப்பட்ட முகங்களையும், பல தரப்பட்ட வடிவங்களையும் கொண்டதாக, துடிப்பு மிக்கதாக, புறநிலைமை களுக்கு ஏற்ப மாறக் கூடியதாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனை வெறும் பொருளாதார வகையினமாக சுருக்கிவிடக் கூடாது.

சாதி ஒழிப்பு என்பதை புதிய ஜனநாயகப் புரட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக நமது கட்சித் திட்டம் முன்வைத்திருக்கிறது. பார்ப்பனீயம் அல்லது பிராமனீயம் என்பது ஒரு கருத்தியல். அது பார்ப்பனர்கள் அல்லது பிராமணர்களை மட்டுமே குறிப்பது அல்ல. சாதீயப் படிநிலையை, தர வரிசையை, சாதீய ஏற்றத்தாழ்வை, சாதி அடிப்படையில் மனிதனை மனிதன் சுரண்டுவதை, சாதீய ஆதிக்கத்தை, பிறப்பால் ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துகிற அனைத்துமே பார்ப்பனீய கருத்தியல் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஒரு நிலப்பிரபுத்துவ அம்சமே. இத்தகைய கருத்தியலை யார் வெளிப்படுத்தினாலும் அது எதிர்க்கப்பட வேண்டியது ஆகும். இதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது.

அதே போல, பெண்களின் சமத்துவம், பெண்கள் விடுதலையும் கூட புதிய/ மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மற்றுமொரு முக்கிய இலக்கு ஆகும். இது இன்று நிலவும் ஆணாதிக்க சமுதாயத்தை புரட்டிப் போடுவதன் மூலம் மட்டுமே, ஒரு புதிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும். பெண்ணடிமைத் தனத்தை ஒழிப்பது, பெண்கள் விடுதலை என்பது புரட்சியின் மிக முக்கிய கடமை ஆகும்.

நாட்டின் ஒற்றுமை என்பது நாட்டிலுள்ள அனைத்து தேசிய இனங்களுக்குமான சம உரிமை என பொருள்படும். சம உரிமை எனபது தேசிய இடங்களின் சுயநிர்ணய உரிமை ஆகும். தேசிய இனங்கள் தமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, தமது மொழியை காத்துக் கொள்வதற்கான உரிமை ஆகும். தமது நிலைப்பாட்டை தாமே நிர்ணயித்துக் கொள்ள உரிமை இருக்கும் போதுதான் ஒற்றுமை என்பது உண்மையான நாட்டு ஒற்றுமையாக இருக்க முடியும். துப்பாக்கி முனையில், ராணுவ அடக்குமுறையின் மூலம் நாட்டு ஒற்றுமையை சாதித்துவிட முடியாது. அதனை மேலிருந்து கட்டிவிட முடியாது. நாட்டு ஒற்றுமை என்பது, தேசிய இனங்களின் ஒற்றுமை என்பது கீழிருந்து கட்டப்பட வேண்டும். தேசிய இனங்களின் முழுமையான சுய நிர்ணய உரிமையையும், சுதந்தரத்தையும் அங்கீகரிக்கிற ஜனநாயகம் நிலவும் போதுதான் நாட்டு ஒற்றுமை என்பது வலுவானதாக திகழும். அப்போதுதான், பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட ஒரு நாடு உருவாக முடியும். தேசிய இனங்களின் உரிமைகளை அங்கீகரிப்பது என்பது பிரிவினையை தூண்டுவது ஆகாது, மாறாக, நாட்டின் உண்மையான ஒற்றுமையை, வலுவான ஒற்றுமையை கட்டி எழுப்புவது ஆகும். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதும் கூட புதிய ஜனநாயகப் புரட்சியின் மற்றுமொரு முக்கிய கடமை ஆகும்.

இவையெல்லாம் கூட நமது கட்சித் திட்டத்தின் மிக முக்கிய அங்கங்கள் ஆகும். இவற்றை வேறு கட்சிகளின் திட்டங்களில் காண்பது அரிதாக இருக்கிறது என்பது கவனிக்க வேண்டியது.

செயல் தந்திரம்

நீண்ட கால அரசியல் போராட்டம்

நீண்ட கால அரசியல் போராட்டம் என்பது சக்திகளின் அல்லது வர்க்கங்களின் சமன் நிலையில் மாற்றம் கொண்டு வருவதை, அத்தகைய சமன்நிலையை புரட்சி நடத்தும் கடமைக்கு சாதகமாக திருப்புவதை நோக்கமாகக் கொண்டதாகும். அது வெறும் தேர்தல் கூட்டணி தொடர்புடையது அல்ல, போராட்ட முன்னணி கள் அல்ல. மாறாக, அத்தகைய, குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் அமையும் போராட்ட முன்னணிகள், சில சமயங்களில், எதிர்கால அய்க்கிய முன்னணிக்கான சில ஆரம்ப கட்ட கூறுகளைக் கொண்டதாக இருக்கலாம். எனவே, ஒரு நீண்ட கால அடிப்படையிலான ஒரு அய்க்கிய முன்னணி  அமைகிற வரையிலும், இடைப்பட்ட மாறிச் செல்லும் காலக்கட்டத்தில், அந்தத் திசையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் பரிசோதனைகளே. அது காலத்தின் தேவை, சூழல், சக்திகளின் நிலை என பலவற்றையும் உள்ளடக்கியதாக, அதற்கு ஏற்றாற்போல, இருக்கும்.

கூட்டணிகள் - நமது அணுகுமுறை

பொதுவாக, தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே நமது அடையாளம், நமக்கும் இதர இடதுசாரி கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடு என சிலர் கருதுகின்றனர். அது சரி யல்ல. இதர வர்க்க சக்திகள், அவர்களின் பிரதிநிதியான அரசியல் சக்திகளோடு உறவாடுவது என்பதிலிருந்து நாம் தனித்து நிற்பது, விலகி நிற்பது என்பது நமது நீண்ட கால புரட்சிகர நோக்கான சக்திகளின் சமன்நிலையில் மாற்றம் கொண்டு வருவது என்பதற்கு எதிரானது ஆகும். இதர கட்சிகளுக்கும் நமக்கும் இருக்கும் வேறுபாடு என்பது புரட்சிகர அணுகுமுறைக்கும் சந்தர்ப் பவாத மற்றும் அராஜகவாத அணுகுமுறைக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். அதனை வெறுமனே கூட்டணி குறித்ததாக குறுக்கிவிடக் கூடாது.

அத்தகைய உறவாடல் வெற்றிகரமானதாக இருக்க வேண்டுமானால், நமது சொந்த பலம் வலுவானதாகவும் நமது அரசியல் நிலைப் பாடுகள் சுதந்தரமானதாகவும் அத்தகைய முன்னணிகளுக்கு தலைமை தாங்கும் அளவுக்கு வலுப்பெறுவதும் முன்நிபந்தனை ஆகும். முன்னணிகளின் வெற்றியும் நமது பலமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதால், ஒன்று முடிந்த பிறகே மற்றொன்று என இருக்க முடியாது. நாம் பலம் பெறுவதன் மூலம் முன்னணி அமைவதாகவும் இருக்கலாம், பெரும்பாலான சமயங்களில் அதுவே சாத்தியம். சில சமயங்களில், முன்னணியின் மூலமாக பலம் பெறுவதாகவும் இருக்கலாம். அது ஒவ்வொரு சூழலோடு தொடர்புடையதாக இருக்கும்.

சீனத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, தேசிய முதலாளி யான சியாங்-கே-ஷேக்குடன் அய்க்கிய முன்னணி அமைத்தது. தளப் பிரதேசங்கள், மக்கள் படை எல்லாம் கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி வலுவானதாக இருந்த போதும், இறுதி வெற்றிக்கு காலமும் தூரமும் இன்னமும் செல்ல வேண்டியிருந்ததால், பொது எதிரியான ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சியாங்-கே-ஷேக்குடன் கூட்டணி அமைத்தது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் பிறகு, சியாங்-கே-ஷேக்கைத் தூக்கியெறிந்து விட்டு ஆட்சியை தானே கைப்பற்றியது.

இந்தியாவின் இன்றைய காலக் கட்டத்தில், பாசிசத்திற்கு எதிரான போராட்டம் முதன்மை யானதாக முன்வந்திருக்கிறது. இந்திய பாசிசம் என்பதை மேற்கத்திய பாசிச அளவுகோலிலிருந்து மட்டும் பார்க்க முடியாது. இந்திய பாசிசம் அதற்கே உரித்தான தன்னியல்புகளைக் கொண் டிருக்கிறது.

பாசிசத்திற்கு இரண்டு முக்கிய முகங்கள், அடிப்படைகள் இருக்கின்றன. பொருளாதார மட்டத்தில், நிதி மூலதனம், நிதி மூலதன ஏற்றுமதி என்பது அதன் ஒரு முக்கிய முகமாகும். கலாச்சார மட்டத்தில் ஒற்றைத்தன்மையை வலியுறுத்துவது, மாற்று கருத்துகளை விமர்சனங்களை ஒடுக்குவது, வெறுப்பை விதைப்பது, அந்த வெறுப்பின் அடிப்படையில் வளர்வது என்பன போன்றவை ஆகும். அதற்காக, நம் நாட்டு மக்களையே எதிரிகளாக வரித்துக் கொள்கிறது. இங்கே, முஸ்லீம்களும் அதற்குப் பிறகு கிறித்துவர்களும் எதிரிகளாக வரித்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். பின்னர், தலித்துக்கள், தொழிலாளர்கள், முற்போக்கு அறிவாளிகள் என அந்தப் பட்டியல் மிக நீண்டது. மற்றொரு முக்கிய அம்சம் அது பரந்த மக்கள் மத்தியில் நிலவும் பின்தங்கிய கருத்துக்களை, பிற்போக்கு கருத்துக்களை சார்ந்தே, அதனைத் தூபம் போட்டு வளர்த்தே மக்கள் செல்வாக்கு கொண்டதாக, பிரபல மானதாக ஆகிறது. பரந்த மக்கள் செல்வாக்கு (பிரபலத் தன்மை) என்பது மற்றுமொரு மிக முக்கிய அடிப்படை ஆகும்.

சுயேச்சாதிகாரமும் பாசிசமும் ஒன்றல்ல

இந்திரா காந்தி ஆட்சியிலிருந்த போது இருந்த அவசர நிலை பிரகடன காலக் கட்டத்துக்கும் இன்றைய மோடி &- ஆர்எஸ்எஸ் பாசிசத்துக்கும் பல ஒத்த தன்மைகள் இருக் கின்றன. ஆனால், இரண்டும் ஒன்றல்ல. இந்திரா காந்தியின் ஆட்சி யதேச்சாதிகாரம் என்றும் சுயேச்சாதிகாரம் என்றும் வர்ணிக்கப்பட்டது. அது அரச ஒடுக்குமுறையோடு, காவல் துறை, நிர்வாகத் துறை நடத்தும் ஒடுக்குமுறையோடு சம்பந்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மக்கள் போராட்டங்கள் காரணமாக அவசர நிலை காலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. செயல்படாமல் முடக்கப்பட்ட சட்டங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. ஆனால், பாசிசம் என்பது தற்காலிகமானது அல்ல. அது ஒரு புறம், அரசு நிர்வாகம் சார்ந்த ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. நாட்டின் சட்டங்கள் செயல்படுவதை நிறுத்தி வைக்கிறது. இன்னொரு புறம், சட்டத்தின் துணையோடு ஏவ முடியாத ஒடுக்குமுறையை வெறுப்பு அரசியல் மூலமும் தனது குண்டர் படை மூலமும் செய்து முடிக்கிறது. வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் விதைத்து, அந்த வெறுப்பு அரசியலையே பொதுப் புத்தி என அழைத்து, அதன் மூலம் ஒரு பரந்த, அரச நிர்வாகம் சாராத, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. இதற்காகவே, பஜ்ரங் தள், ஸ்ரீராம் சேனா, அபினவ் சேனா போன்ற பல அவதாரங்களை உருவாக்கி வளர்க்கிறது. இந்த அமைப்புகள் வன்முறையை தூண்டு வதற்காகவே, வன்முறை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கான பயிற்சியும் அளிக்கப்படுவது எல்லோருக்கும் தெரிந்ததே. இது பாசிசத்தின் மிகக் குறிப்பானதோர் குணாம்சம் ஆகும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாசிச எதிர்ப்புப் போராட்டம்

இந்தக் குறிப்பான பின்னணியில், பாசிச எதிர்ப்புப் போராட்டம் தலையாயதாக மாறு கிறது. பாசிசத்தை எதிர்கொள்ளும் விதத்தில் நமது செயல்தந்திரத்தை வடிவமைக்கக் கோருகிறது. ஆகவே தான், பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில், அனைத்து, பல தரப்பட்ட, பாசிச எதிர்ப்பு சக்திகளோடும், நமது விருப்பு -வெறுப்பு, மதிப்பீடு, விமர்சனங்களோடு கூடவே இணைந்து செயல்பட வேண்டிய ஒரு அரசியல் அவசியம் ஏற்படுகிறது. இதை அறிந்துதான், பிஜேபி - அதன் கூட்டாளிகள் அல்லாத அனைத்து சக்திகளோடும் முழுமை யாகவோ, அரைகுறையாகவோ, போராட்ட அணியிலோ - தேர்தல் அணியிலோ இணைந்து செயல்பட நாம் தயாராக வேண்டும் என 10வது அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுத்தது.

அப்படிப்பட்ட அணிசேர்க்கைகள் உருவாவ தால், நமது அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எந்தவொரு சூழலிலும் கம்யூனிஸ்ட் கட்சி தனது அரசியல் சுதந்தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. எந்தவொரு அரசியல் கட்சி / சக்தி குறித்தும் தீண்டத்தகாத கொள்கை என்பது அரசியல் புத்திசாலித் தனம் இல்லாததாகும். மாறாக, எந்தவொரு அரசியல் கூட்டணியிலும் நமது அரசியல் சுதந்தரத்தை உயர்த்திப் பிடிப்பது என்பது தான், சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக புரட்சிகர நிலைப்பாட்டை உயர்த்திப் பிடிப்பது என்பதுதான் சரியான கம்யூனிஸ்ட் செயல் தந்திரம் ஆகும்.

பீகார் அனுபவம்

மேற்கண்ட தகவு நோக்கிலிருந்துதான் 2020ல் பீகார் சட்டமன்றத் தேர்தலில் நாம் ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி வைத்து, பாசிசத்திற்கு எதிரான தேர்தல் போராட்டத்தைக் கூர்மைப் படுத்த முயற்சி செய்தோம். நம்மைத் தவிர, இதர இடதுசாரிகள் உட்பட, அனைத்து எதிர்க் கட்சிகளும் கூட்டணி அமைத்து விட்டன. நமது சுதந்தரத்தை விட்டுக்கொடுத்து ஆர்ஜேடியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று நாம் வேட்பாளர்களை அறிவித்து விட்டோம். அதற்குப் பிறகுதான் ஆர்ஜேடி நமது முன்வைப்புகளை ஒப்புக் கொண்டது. காரணம் பீகாரில் இகக(மாலெ) கட்சி என்பது ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சி. அவர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் ஒரு போராட்ட இயக்கம். இகக(மாலெ) அல்லாத ஒரு எதிர்க் கட்சிக் கூட்டணி என்பது பீகாரின் குறிப்பிட்ட சூழலில் பாசிச எதிர்ப்பு போராட்டத்தின் முனை மழுங்கடிக்கப்பட்டதாக ஆகிவிடும். அதனால் தான் நாம் கூட்டணியில் இடம் பெற்றோம், 12 தொகுதிகளில் வெற்றியும் பெற்றோம். இன்றைய சூழலில், இடதுசாரிகள் ஆளும் கேரளா, ஆண்ட திரிபுராவை கழித்து விட்டால், ஒரே மாநிலத்தில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரே இடதுசாரி கட்சி நாம் மட்டும்தான். கூட்ட ணியின் காரணமாகத்தான் வென்றோம் என நினைத்தால் அது முழுமையானதாக இருக்காது. கூட்டணியின் மூலம் ஆர்ஜேடிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் லாபம். நமக்கும் லாபம். எந்த கூட்டணியும் இல்லாமலே சுதந்தரமாக தனித்துப் போட்டியிட்டு 8 தொகுதிகள் வரையிலும் கூட நாம் வென்றிருக்கிறோம். பரஸ்பரம் அரசியல் ஆதாயம் இல்லாமல் எந்த கூட்டணியும் கிடையாது. அதே போல, பொதுவான அரசியல் கடமையை துறந்து விட்டு எந்தக் கூட்டணியும் இருக்க முடியாது. கூட்டணி என்பதே பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் கடமையை நிறைவேற்றத் தானே தவிர, கூட்டணிக்காக கூட்டணி என்பதாக இருக்க முடியாது.

மேற்கு வங்க அனுபவம்

பீகாரில் சிபிஐ(எம்எல்), சிபிஐ(எம்), சிபிஐ இணைந்து ஆர்ஜேடி&காங்கிரசோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டோம். அதே போன்ற ஒரு அணி அடுத்து நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலிலும் உருவாகும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அங்கு அது சாத்தியம் இல்லாமல் போய் விட்டது. ஏனென்றால், சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகள் தேர்தலில் பிஜேபியையும் திரிணாமூலையும் சமமாக எதிர்ப்பதாக கூறினார்கள். அத்தகைய ஒரு நிலைப்பாடு பிஜேபிக்கு ஆதரவாக போய் விடும் என நாம் எச்சரித்தோம். ஆனால், நம்மால் அவர்களை இணங்க வைக்க முடியவில்லை. பீகாரில் தேர்தல் சமயத்தில் நடத்திய பாசிச எதிர்ப்புப் போரை மேற்கு வங்கத்தில் தொடர வேண்டுமானால், பிஜேபியை தோற்கடிப்பதே மையமான கடமையாக இருக்கும் என முடிவெடுத்தோம். “பிஜேபியை தோற்கடியுங்கள்என்று மேற்கு வங்க மக்களுக்கு அறைகூவல் விடுத்தோம். திரிணாமூல் காங்கிரஸ், தமது அணியில் நம்மை சேர்த்துக் கொள்ள விழைந்து, நமக்கு தூது அனுப்பினார்கள். அதை ஏற்றுக் கொண்டிருந்தால் மேற்கு வங்கத்திலும் கூட நாம் சில தொகுதிகளில் வெற்றியடைந்து சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கலாம். அது உறுதிதான். ஆனால், நாம் ஓட்டுக்காகவும் சீட்டுக்காகவும் அலையாதவர்கள் என்பதால், பாசிச எதிர்ப்புப் போராட்டம் எனும் அரசியல் கடமையை உயர்த்திப் பிடிப்பவர்கள் என்பதால், என்ன விலை கொடுத்தேனும் பாசிச எதிர்ப்பு அரசியல் கடமையை நிறைவேற்றுபவர்கள், சமரசம் செய்யாதவர்கள் என்பதால், கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சுதந்தரத்தை எக்காரணம் கொண்டும் காவு கொடுக்காதவர்கள் என்பதால், அதை நிராகரித்தோம்.

கூட்டணி செயல் தந்திரம்

அது மட்டுமல்ல. பீகாரில் லாலு முதல்வராக இருந்தபோது நமது கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ள நமது கட்சியின் பீகார் மாநில அலுவலகத்துக்கே வந்து பேசினார். நாம் நிராகரித்தோம். ஆட்சியில் இருக்கும் கட்சியை யும் எதிர்க்கட்சியையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் கூட, குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை ஆதரிக்கும் அதே சமயம், அடிப்படையில் நாம் எதிர்க் கட்சியாகவே செயல்படுகிறோம்.

காங்கிரஸ் கட்சி இப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இல்லை. சிதைந்து கொண்டிருக்கிறது. தனது மக்கள் செல்வாக்கை, அடித்தளத்தை இழந்து கொண்டிருக்கிறது. திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணி யிலும், பாசிச சக்திகளின் வளர்ச்சி பின்னணி யிலும் நாம் நமது அணுகுமுறையை பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஆம் ஆத்மியின் அவதாரங்கள்

ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது. அது பஞ்சாபில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஓராண்டு கால விவசாயிகள் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி பெரிதாக ஏதும் செய்திடவில்லை. ஆனால், அதன் முழுமையான அறுவடையை மட்டும் பெற்றுவிட்டது. விவசாயிகள் சங்கங்கள் எல்லாம் சேர்ந்து புதிதாக உருவாக்கிய கட்சி, குறிப்பி டத்தக்க வாக்குகளையும் கூட பெற முடிய வில்லை. அங்கு அம்பேத்கரையும் பகத் சிங்கை யும் திறமையாக பயன்படுத்திக் கொண்டதாலும் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவரை முதல் அமைச்சராக முன்நிறுத்தியதாலும் வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. அதை விட முக்கியமாக, பஞ்சாப் மக்கள் மத்தியில் பேரலை யாக எழுந்த அரசியல் மாற்றத்திற்கான வேட்கையின் காரணமாக வெற்றி பெற்றிருக் கிறார்கள். அதனால் தான் அகாலி தளம் போன்ற பாரம்பரிய பஞ்சாப் கட்சிகள், தாமதமாக வேனும், தம்மை மாற்றிக் கொள்வதற்காக, பிஜேபியோடு உறவைத் துண்டிப்பது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது என பல முயற்சிகள் எடுத்தாலும் மாற்றாக உதிக்க முடியவில்லை. பிஜேபியின் முயற்சியும் பலிக்கவில்லை. காங்கிரஸ் தலித் முதல்வரை முன்நிறுத்தியும் வெல்ல முடியவில்லை.

கர்நாடகத்தில் பிரபலமான விவசாயிகள் சங்கத் தலைவரான கோடிஹள்ளி சந்திர சேகருடன் இணைந்து கட்சியை பலப்படுத்த ஆம் ஆத்மி முயற்சிக்கிறது. சமீபத்தில், எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கிற விதத்தில் ஒரு பெரிய நிகழ்ச்சியையும் கூட கட்டமைத்தது. ஆனால், அதன் முக்கிய இலக்கு பிஜேபி அல்ல, காங்கிரஸ்தான் என பலரும் கூறுகின்றனர். ஆம் ஆத்மியும் கூட மதச் சார்பின்மைக்கு வேறு ஒரு விளக்கம் கொடுக்கிறது. அரசுக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இருக்க கூடாது என்பதல்ல, “எம்மதமும் சம்மதம்என்கிறது. அந்த அடிப்படையில், டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசாங்கம், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்த வர்கள் என ஒவ்வொரு மதத்தவரும் ஒரு புனித யாத்திரை சென்றுவர, மக்களை மதரீதியாக திரட்டியது எல்லோருக்கும் தெரியும். நாடு தழுவிய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் உதித்த ஆம் ஆத்மி கட்சி, இப்போது கேஜிரிவால் மாடல் அரசாங்கம் என சொல்லிக் கொண்டு, காங்கிரசின் இடத்தைப் பிடித்திட முயல்கிறது, அதனை அரசியலில் இருந்து அகற்றும் பணியை முன்னெடுக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த கட்சி காலப்போக்கில் எப்படி உருப்பெறப் போகிறது, என்ன அரசியல் அவதாரம் எடுக்கப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒரு அம்சமாக இருக்கும்.

பாசிச எதிர்ப்பின் முகங்கள்

பாசிச வளர்ச்சி என்பது மூர்க்கத்தனமாகவும் தீவிரமாகவும் நடந்து வருவதால் நாம் நம் செயல்தந்திரத்தில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி நேர்ந்தது. தோழர் டிமிட்ரோவ் உள்ளிட்ட மார்க்சீய ஆசான்களும் கம்யூனிஸ்ட் அகிலமும் அய்க்கிய முன்னணி குறித்து முன்வைத்த பல ஆய்வுரைகளும் வழிகாட்டுதல் களும் நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. அந்தப் பின்னணியில், தேர்தல் உடன்பாடுகள், கூட்டணி உட்பட, பல விசயங்களை நாம் மாற்றியமைத்திருக்கிறோம்.

இந்து ராஜ்யத்திற்கு, மனு ஸ்மிருதிக்கு எதிராக...

நமது இறுதி லட்சியம் என்பது முதலாளித்துவ சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு, உழைக்கும் வர்க்க ஆட்சியை நிறுவக் கூடிய முற்றிலும் புதிய சட்டங்களை உருவாக்குவது என்பதாகும். ஆனால், பாசிச எதிர்ப்புப் பின்னணியில், நாம் இன்றைய முதலாளித்துவ ஜனநாயக சட்டங்களையும் கூட பாதுகாக்கிற கடமையை நிறைவேற்ற வேண்டி யவர்களாகி இருக்கிறோம். அதுவும் குறிப்பாக, ஆர்எஸ்எஸ்&மோடி தலைமையிலான பாசிச ஆட்சியாளர்கள், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, மனு ஸ்மிருதியை அரசியல் அமைப்பு சட்டமாக கொண்டஇந்து ராஜ்யம்அமைத்திட மூர்க்கத்தனமாக முயற்சித்திடும் போது, அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். பாசிச சக்திகள் கொலைகார கோட்சேக்களை தெய்வமாக புகழும்போது, அவனுக்கு கோவில் கள் கட்டும் போது, கோட்சேவால் கொல்லப் பட்ட காந்தியை நாம் நினைவுகூர வேண்டியவர் களாகி இருக்கிறோம்.

எனவே, செயல்தந்திரம் என்பது மிகவும் துடிப்பானது, மீண்டும் மீண்டும் மாறக் கூடியது, சூழ்நிலைக்குத் தக்க அவதாரம் எடுப்பது, முதன்மை அரசியல் கடமையை நிறை வேற்றுவதை நோக்கமாக கொண்டது, அத்தகைய அரசியல் கடமையை நிறைவேற்றுவதற்காக எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இருப்பது என்பதாக நாம் புரிந்து கொண்டாக வேண்டும். என்றும் மாறாமல், ஒரே நிலைப்பாட்டை மேற்கொள்வோமேயானால், நாம் இயங்கியல் அறிவியலுக்கு எதிரானவர்களாக, இயக்க மறுப்பியல்வாதிகளாகி விடுவோம் என்பதை மறந்துவிடக் கூடாது.( தொடரும்... )