திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டாகி விட்டது. "நூறாண்டு நிலைக்கும் ஓராண்டுச் சாதனை", "திராவிட மாடல் ஆட்சி, திசையெட்டும் மகிழ்ச்சி"! இது போன்றும் இன்னும் பல கவர்ச்சி முழக்கங்களும் கொண்டாட்டமும் தமிழ்நாட்டை திக்குமுக்காடச் செய்கின்றன!

ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் பாசிச மோடி ஆட்சி, மாநிலத்தில் 10 ஆண்டுகால அலங்கோல அதிமுக ஆட்சி, இந்த இரண்டு ஆட்சிகளையும் எதிர்த்த அதிமுக எதிர்ப்பு &-மதவெறி பாஜக&-கார்ப்பரேட் எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள், கொடூரமான கொரோனா முடக்கம் எனும் பின்னணியில், ஓராண்டுக்குமுன் ஒரு மாற்று ஆட்சியை எதிர்பார்த்து மக்கள், திமுகவுக்கு வாக்களித்திருந்தனர். திமுக தேர்தல் அறிக்கை யில் உறுதியளிக்கப்பட்டிருந்த 505 வாக்குறுதிகள், மேற்கூறிய பின்புலத்தை திமுகவும் நன்கு உணர்ந்திருந்ததைக் காட்டின.

ஓராண்டு முடிந்து, "திராவிட மாடல் வளர்ச்சி, திசையெட்டும் மகிழ்ச்சி"! என திமுக மார்தட்டிக் கொள்வது பொருத்தமானதுதானாதிராவிட மாடல் வளர்ச்சி என்ற சொல்லாடல், திமுகவின் தேர்தல் அறிக்கையிலோ தேர்தல் பரப்புரையிலோ எவரும் பயன்படுத்தாத சொல்லாடல். திரு.கலையரசன், திரு. விஜய பாஸ்கர் எழுதி, தேர்தல் முடிந்து வெளிவந்த புத்தகத்தின் தலைப்புதான் இந்த சொல்லாடல். முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.. ஸ்டாலின், தன்னை ஒரு " திராவிட இருப்பு" என்று அறிமுகப்படுத்திக் கொண்டதைத் தொடர்ந்து தனது அரசு திராவிட மாடல் அரசு என்று கூறிக்கொள்ள முற்பட்டார். "சுயமரி& யாதை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமை ஆகியவை திராவிட மாடல் அரசின் உள்ளடக்கம்என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்.

நல்லது. கடந்த எட்டாண்டு கால மோடி ஆட்சியில் மேலே சொன்ன அனைத்து மதிப்பீடு களும் நொறுக்கப்பட்டுஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி, ஒரே ஆட்சிஎன்ற இந்து ராஜ்யக் கொள்கை ஆட்சி பீடத்திலிருக்கும் போது, ஸ்டாலின் கூறும் திராவிட மாடல் அரசின் உள்ளடக்கமாக கூறப்படுகிறவை கவனத்துக் குரியவைதான். இவற்றை, மோடி மாடல் பாசிச ஆட்சிக்கு எதிரான மாடலாக நிறுத்த முற்படுவதும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பின்னணியி லிருந்து பார்க்கும் போது வரவேற்புக்குரியதுதான்.

திராவிட மாடலுக்கு ஸ்டாலின் கூறும்உள்ளடக்கம்நல்ல பிரகடனங்கள்தான். ஆனால், இவற்றை செயல்படுத்திக் காட்டுவது தான் உண்மையான சவால்.

கடந்த ஓராண்டில், திமுக ஆட்சி, சில திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியிருப்பது கவனத்திற்குரியது. சில வரவேற்புக்குரியவை. பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு நகரப் (சாதாரண) பேருந்துகளில் இலவசப் பயணம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியது, தமிழில் அர்ச்சனை, தாழ்த்தப்பட்டோர்-&பழங்குடியின ருக்கான மாநில ஆணையம் போன்றவற்றை இந்த வகையில் குறிப்பிடலாம். ஆனால், ஆட்சியாளர்கள்திசையெட்டும் மகிழ்ச்சிபொங்குவதாக கொண்டாடுவதைக் கூர்ந்து பார்த்தால் பல கேள்விகளே மிஞ்சுகின்றன.

தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவது திமுக அரசின் முதன்மையான இலக்கு. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவதுதான் இதற்கான அடித்தளம் என்று முதலமைச்சர் பலமுறை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, தமிழ்நாட்டைமுதலீட்டின் முதல் முகவரியாக மாற்றுவது ஆகியவை அரசின் செயல்திட்டமாக இருக்கிறது. உழைப்பும் உழைப்பாளரும் இல்லாமல், ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் சாத்தியமா? மூலதனமும் முதலாளிகள் மட்டுமே ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தைக் கொண்டு வந்துவிட முடியுமா? எந்த முதலீட்டாளரும் மலிவான உழைப்புச்செலவும் உச்சபட்ச லாபமும் இல்லாமல் தொழில் தொடங்க வருவார்களா? அப்படி ஒரு நிலமையை ஏற்படுத்தித் தருவதுதான்முதலீட்டார்களின் முதல் முகவரிஎன்ற திமுக அரசின் பிரகடனம்.

இத்தகைய நோக்கத்துடன்தான் மோடி 4 சட்டத்தொகுப்புகளை கொண்டு வந்திருக்கிறார். உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் சாம் ராஜ்யத்தில் தொழிலாளர் வர்க்கத்தைக் கொத்தடிமையாக்கி விடும் திட்டம் கொண்டது. அதனால்தான், இந்திய தொழிலாளர் வர்க்கம், இந்த சட்டத் தொகுப்புகளை மோடி ஆட்சி திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் உள்ளிட்ட பிற உழைக்கும் வர்க்கத் துணையோடு அகில இந்திய வேலைநிறுத்தத்தை வெற்றி கரமாக நடத்திக் காட்டியது. போக்கு வரத்து தொழிலாளர் உள்ளிட்ட தமிழ்நாட்டு தொழி லாளர் வர்க்கம் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெற வைத்தது.

தொழிலாளர் வர்க்கத்தின் நீண்ட நெடிய போராட்டங்கள் டாக்டர் அம்பேத்கரின் கடின முயற்சிகளின் விளைவாக, கொண்டுவரப்பட்ட தொழிலாளர் ஆதரவு சட்டங்களை ஒழித்துக் கட்ட மோடி-&ஷா ஆட்சி கொண்டு வந்துள்ளதே மேலே சொன்ன 4 சட்டத் தொகுப்புகள். நியாயமாகப் பார்த்தால், வேளாண் சட்டங்க ளுக்கு எதிராக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக அரசு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியதைப் போல, தொழிலாளர் சட்டத்தொகுப்புக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். திமுகவின் தலைமையில் இயங்கும் தொமுசவை இந்த சட்டத்தொகுப்புகளுக்கு எதிராக போராட களமிறக்கியிருக்க வேண்டும்.

மேலும், தொழிலாளரது உரிமைகளைப் பறிப்பதைப் போலவே, இந்த சட்டத்தொகுப்பு மாநில அதிகாரத்தையும் பறிக்கிறது. கல்வி மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று துணைவேந்தர் மாநாட்டில் முதலமைச்சர் மிகச் சரியாகவே குறிப்பிட்டதைப் போல, தொழிலாளர் சட்டங்களும் மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டுமென்று கூறி ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி”, “அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்என்ற கொள்கையுடைய  'திராவிட மாடல் அரசு' மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டு மென்றே தொழிலாளர் வர்க்கம் எதிர்பார்க்கிறது. அந்த அடிப்படையில்தான் ஏஅய்சிசிடியூ, மோடி அரசின் 4 சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியது. அந்த சட்டத் தொகுப்புகளுக்கான விதிமுறைகள் உருவாக்குவதை நிறுத்தி வைக்க வேண்டு மென்றும் கோரியது. ஆனால், திமுக அரசு, மோடி அரசின் 4 தொழிலாளர் சட்டத்தொகுப்பை ஏற்று, விதிகளை உருவாக்கியுள்ளது. இவ்வாறு, திமுக அரசு தொழிலாளர் உரிமைகளையும் கைவிட் டுள்ளது; மாநில சுயாட்சி கொள்கையையும் தவற விட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வ தானால் ஒன்றிய மோடி அரசின் ஒற்றை அதிகாரத்தை ஏற்றுக் கொண்டுவிட்டது! திராவிட மாடல் அரசின் உள்ளடக்கம் இதுவல்ல என்பது சொல்லாமலே எவருக்கும் விளங்கும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவருவோமென்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்வரும் ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், நிதி நிலமையைக் காரணம் காட்டி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியா தென்று சட்டப்பேரவையிலேயே நிதியமைச்சர் அறிவித்து விட்டார்.  "எல்லார்க்கும் எல்லாமும்" என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை என்று அறிவித்துள்ள ஆட்சி, மிக முக்கியமான இந்த பழைய ஓய்வூதியக் கோரிக்கையை இல்லை என்று சொல்லிவிட்டது! பழைய ஓய்வூதிய திட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்பது நவதாராளவாத சீர்திருத்தங்களுள் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.

மொத்தத்தில் முற்போக்கான சமூகக் கொள் கைகளை பேசுகிற திமுக அரசு, பிற்போக்கான கார்ப்பரேட் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு விட்டதாகவே தெரிகிறது. இது மிகப்பெரிய முரண்பாடு. பிற்போக்கு கார்ப்பரேட்&-நிலப்பிரபுத்துவ கொள்கைகளை மூடிநிற்கிற முற்போக்கான சமூகக் கொள்கை எதுவும் நீடித்து நிற்பதில்லை.

அனைத்து சாதியினரும் அரச்சகராவதை திமுக அரசு, ஆட்சியின் துவக்கத்திலேயே செயல் படுத்திக் காட்டியது. இது ஒரு முற்போக்கான சாதனை. ஆனால், ஓராண்டு முடிவில் ஆதினங் களுக்கு அடங்கிப் போய் விட்டது. இதைத்தான்நூறாண்டு நிலைக்கும் ஓராண்டு சாதனையாக சொல்லிக் கொள்வார்களோ? தருமபுரம் ஆதினம் விஷயத்தில் பின்வாங்கிய திமுக அரசை, திருவாரூர் தெருவுக்கு கருணாநிதி பெயர் வைக்கக் கூடாது என்று கூட்டத்தைக்கூட்டி இன்னொரு முறை அரசை பின்வாங்க வைத்திருக் கிறார் அண்ணாமலை! ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சங்கிகள் சத்தம் போட்டவுடன் திருவிழா வையே தள்ளிப் போட்டுவிட்டது திராவிட மாடல் அரசு. உழைப்பவர்களுக்கு நிலம் வழங்கும் நிலச் சீர்திருத்தம், குத்தகை சீர்திருத்தம், உழைப்பாளர்களுக்கு வாழ்வாதாரம் பற்றி பேசாத,”வேளாண் தனி நிதிநிலை அறிக்கையை வரலாற்றுச் சாதனையாகப் பேசிக் கொள்கிறது திமுக அரசு. ஆனால், சேகர் பாபு தலைமையில் ரூ.2566 கோடி மதிப்புள்ள் கோவில் நிலங்களை மீட்டு விட்டதையும் ஓராண்டு சாதனையாகப் பேசுகிறார்கள். கோவில், மடம் நிலங்களை மீட்டு ஆதீனங்களின் கோரிக்கையை ஏற்று பின்வாங்கியுள்ள திமுக அரசை ஆன்மீக அரசு என்று ஆதீனங்கள் கொண்டாடுவதையும் சாதனையாகக் காட்டுகிறது.

ஜெய்பீம்திரைப்படம் தூங்காத இரவை ஏற்படுத்திவிட்டதாகவும் மிசா காலத்து சித்தரவதைகளை நினைவுபடுத்திவிட்டதாகவும் கசிந்துருகிய முதலமைச்சர் ஸ்டாலின், விக்னேஷின் காவல் கொலை, திருவண்ணா மலையில் மற்றொரு காவல் கொலை பற்றி சட்டப் பேரவையில் கூறிய பதில்கள், சாத்தான் குளம் காவல் கொலைகள் பற்றி எடப்பாடி பேசியதை நினைவுபடுத்துவதாகவே இருக்கிற மானுட உரிமை ஆதரவு சக்திகளின் அழுத்தம் காரணமாகவே விக்னேஷ் காவல் கொலையில் காவல்துறையினர் சிலரை கைது செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்களை அடுக்கினார் முதலமைச்சர். எத்தனை குற்ற வாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற விவரங்களை சொல்லவில்லை அந்த அறிக்கை. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி குற்றங்கள் தொடங்கி, திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே வெளிச்சத்துக்கு வந்த எஸ்பிஏஓ பள்ளி, சிவசங்கர் பாபா பள்ளி குற்றங்களின் குற்றவாளிகள் வரை எவரும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் மக்கள் மறந்து விடவில்லை.

சிறப்பு வேளாண்மண்டல உயர்நிலைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், இந்த சட்டம் அதிமுக ஆட்சிகாலத்தில் கொண்டுவரப் பட்டிருந்தாலும் அதை செயல்படுத்துவோம் என்றுகூறி தனது அரசுக்குள்ளஜனநாயக அக்கறையைகாட்டிக் கொண்டார். அதே அதிமுக ஆட்சிகாலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 8 வழிச்சாலைத் திட்டத்தை வேறுபெயரில் செயல்படுத்தக் கூடாது என்ற விவசாயிகளின் ஜனநாயக குரலுக்கும் செவிசாய்க்க வேண்டு மென்றே விவசாயிகள் விரும்புகின்றனர்.

திராவிட மாடல் அரசுக்கான இலக்கணத்தை வரையறுத்துக்கூறிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மக்கள் விரோத கார்ப்பரேட் பாதையிலிருந்து திரும்பி வருவாரா? ஆதினங்கள்,-அண்ணாமலைகளின் அழுத்தங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு முறியடிப்பாரா? மேலும் இறங்கிப் போவாரா? வரும் நாட்கள் திமுக அரசுக்கு ஒரு சோதனைக் காலம், ஸ்டாலினை சோதிக்கும் காலம்.

எது எப்படியாயினும் கார்ப்பரேட் எதிர்ப்பு&-ஒன்றிய மோடி எதிர்ப்பு போராட்ட மரபு கொண்ட தமிழக மக்கள், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போராட்ட மரபு கொண்ட முற்போக்கு, ஜனநாயக சக்திகள், இடது இயக்கங்கள், திமுக அரசை அதன் செயல்பாட்டின் அடிப்படையில் எடை போடுவார்கள். எதிர்க்க வேண்டியதை எதிர்ப்பார்கள். ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கத் தயங்கமாட்டார்கள்.