பெரியாரைக் கொண்டாடும் 'சமூகநீதி அரசு', அம்பேத்கரை போற்றும் 'சமத்துவ அரசு', ஆதீனங்கள், பிற்போக்கு சக்திகளின் அழுத்தத்துக்கு பணிந்து "ஆன்மீக அரசாகி"ப் போனது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது! "கலாச்சாரம், பாரம்பரியம்" என்ற பேரால் தமிழ்நாட்டின்  'மானுட உரிமை', 'பகுத்தறிவு' 'முற் போக்கு' மரபுக்கு திமுக அரசு பின்னடவை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவை பின்னுக்கு தள்ளுவது எனும் பேரால் திமுக அரசின் இந்த தற்காப்பு அணுகுமுறை பாஜக போன்ற வலதுசாரி சக்திகளுக்கு மேலும் துணிச்சல் அளிப்பதிலேயே போய் முடியுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-& லெனினிஸ்ட்) எச்சரிக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டு மென்ற உழைக்கும் வர்க்கத்தின் குரலுக்கும் சென்னையில் "ஆக்கிரமிப்பு" என்ற பேரால் ஏழை மக்களின் வீடுகளை இடிக்க கூடாது என்ற குரலுக்கும் செவிசாய்ப்பதைக் காட்டிலும் ஆதினங்களின் குரலுக்கு அரசு பணிந்திருப்பது திமுக அரசின் ஓராண்டு சாதனையாக மாறிவிடுவது கவலை அளிப்பதா கவே உள்ளது. பாஜகவை தமிழ்நாட்டில் தலை யெடுக்க விடாமல் செய்ய, அதை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் ஒரே பாதை என மாலெ கட்சி வலியுறுத்திக் கூறுகிறது. சாமான்ய மக்களின் ஆன்மீக நம்பிக்கையை வலதுசாரி சக்திகள் 'பல்லக்காக' பயன்படுத்திக் கொள்ள அரசு ஒருபோதும் இடமளித்துவிடக் கூடா தென்றும் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு, மானுட உரிமை, பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி சக்திகள், தமிழ்நாட்டில் தலையெடுக்கத் துடிக்கும் வலதுசாரி சக்திகளுக்கு எதிராகவும் அந்த சக்திகளின் அழுத்தத்திற்கு பணியும் அரசின் செயல்களுக்கு எதிராகவும் விழிப்புடன் இருந்து தொடர்ந்து குரலெழுப்ப முன்வர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.

என்.கே நடராசன்,

மாநிலச் செயலாளர், இகக(மாலெ)