ஜூலை 13, தமிழ்நாட்டிற்கு மற்றுமொரு துயரமான நாள். சின்ன சேலத்துக்கு அருகிலுள்ள கனியாமூரிலுள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இது தற்கொலையென்று பள்ளி நிர்வாகம் சாதிக்கிறது. பொது சமூகம் இது ஒரு பச்சைப் படுகொலை என்று நம்புகிறது. பள்ளி நிர்வாகம் சொல்வது உண்மையா? பொது சமூகம் நம்புவது உண்மையா? எது உண்மை என்பதை அரசின் காவல் துறையும் நீதிமன்றமும் நிரூபித்தாக வேண்டும். தனியார் மேட்டுக்குடி கல்வி நிறுவனங்கள் குற்ற நிறுவனங்களாக மாறிவருகின்றன. சென்ற ஆண்டு மே மாதம் முதல் பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடந்துள்ள கொடூர குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த கொடூர குற்றங்கள் அனைத்தும் பெண் குழந்தைகளுக்கு, பெண்க ளுக்கு எதிரானவை.

தமிழ்நாட்டில் கல்வியை தனியார் முதலாளி கள் கட்டுப்படுத்துகின்றனர். அதனால் கல்விக் கூடங்கள் குற்றக் கூடங்களாக மாறியுள்ளன; வன்முறைக் கிடங்குகளாக மாறி உள்ளன. கல்விக் கட்டணம், பாடத் திட்டம், பயிற்று முறை, தேர்வுமுறை அனைத்துமே கடும் வன்முறை கொண்டதாக மாற்றப்பட்டு விட்டன. பணபலம், சமூகம் என்று பேசப்படும் சாதி பலம், அரசியல் பலம் ஆகிய மூன்றும் உருண்டு திரண்டு கல்வியை ஆட்டிப்படைக்கின்றன. கல்வி நிறுவனங்கள் நடத்தாத அரசியல்வாதிகள் (அதிமுக, திமுக தலைவர்கள்) அரசியல்வாதி களே அல்ல என்ற புதிய இலக்கணம் உருவாக்கப் படுள்ளது. இந்த கொடுங்குற்றச் சூழல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என முழுச் சமூகத்தையும் கொன்று தின்று வருகின்றன. இந்த நிலமையின் ஆகக் கொடிய சம்பவம் தான் கனியாமூர் பள்ளிச் சம்பவம்!

பலகாலமாக புரையோடிப் போன இந்தச் சூழல்தான் இளைய தலைமுறையை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது, ஆவேசமாக அணி திரள வைத்திருக்கிறது. ஆட்சியாளர், அதிகார வர்க்கத்தினர், நீதிமன்றங்கள், ஊடகங்கள் 17 வயது மாணவியின் துயர மரணத்தை விட ஜூலை 17ம் தேதி சம்பவத்தை மிகத்தீவிரமாக

எடுத்துக் கொண்டுள்ளன. எனவேதான் 17ம்தேதி சம்பவத்தை விசாரிக்க நீதிமன்றம், யாரும் கேட்காமலேயே தானாகவே முன்வந்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டி ருக்கிறது.

ஆனால், மொத்த சமூகத்துக்கும் தீவிர அக்கறையுள்ள விஷயம், உண்மை வெளி வரவேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, குற்றக் கும்பல்களிடமிருந்து கல்வி விடுவிக்கப்பட வேண்டும். இதைத்தான் முழுச் சமுதாயமும் எதிர்பார்க்கிறது.

இந்த நோக்கத்தினடிப்படையில்தான், கடந்த ஒரு மாதமாக பொதுச்சமூகம் இதுபற்றி விவாதித்து வருகிறது. பொதுச் சமூகத்தின் பிரதிநிதிகளாக தொலைக்காட்சி, சமூக ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால், கொலையா? தற்கொலையா? என்று வழக்கை விசாரித்து வரும் சிபிசிஅய்டி பிரிவு ஒரு வேண்டுகோளை அச்சு ஊடகங்கள் மூலம் வெளியிட்டுள்ளது. வழக்கை விசாரித்து வரும் சிபிசிஅய்டி பிரிவு வழக்கை நியாயமாக விசாரித்து வருவதாகவும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல ஊடகங்கள் "ஒரு இணையான விசாரணையை நடத்தி வருவதால் அது காவல்துறை புலனாய்வை பாதிக்கும் என்று கூறி அத்தகைய விசாரணையை யாரும் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறது. அப்படி ஈடுபடும் அமைப்புகள், ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கணக்குகள் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கிறது. இந்த எச்சரிக்கை அனைத்து செய்தித்தாள்களிலும்(6.8.2022) வெளிவந்துள்ளன. காவல்துறையின் இந்த அறிவிப்பு பல கேள்விகளை எழுப்புகின்றன. அனைத்து அதிகாரங்களும் நுண்ணறிவு கருவிகளும் விரிவான அமைப்பு வலைப்பின்னலும் கொண்ட

காவல் துறையின் விசாரணையை எவ்வாறு பாதிக்கப்படும் என்பதுபற்றி அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாவட்ட காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் செய்த தவறுகளே 17ம் தேதி வெடிப்புக்கு காரணமாக இருந்தன என்பதை
எளிய அறிவைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். கை புண்ணுக்கு கண்ணாடி தேவை யில்லை. எனவே காவல்துறை விசாரணை சரியான திசையில் செல்கிறது என்றால், ஊடகங்களின் "இணை விசாரணை" எப்படி காவல் துறையின் விசாரணையை பாதிக்கும்? 13ம் தேதியே அனைத்து ஆதாரங் களையும் காவல் துறையிடம் ஒப்படைத்து விட்டதாக பள்ளி நிர்வாகம் கூறி வருகிறது. அப்படியென்றால் முன்னுக்குப் பின் முரணாக பல வீடியோ துணுக்குகள் உலா வருவது எப்படி? காவல்துறையே தன்னிடமுள்ள ஆதாரங்களை ஊடகங்களுக்கு கசியவிட்டிருக்கிறதா? பள்ளி நிர்வாகம் தன்னிடம் ஒரு பிரதியை வைத்துக் கொண்டு விசாரணையை திசை திருப்புவதற்காக அவ்வாறு வெளியிடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. எடுத்த எடுப்பிலேயே, பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு ஏதுமில்லை என்று காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு கூறியது விசாரணையை பாதிக்காதா? தான் சொன்னது பொய்யாகக் கூடாது என்பதற்காக தனக்கு கீழ் செயல்படும் விசாரணை அமைப்பை வளைக்க மாட்டாரா? தனக்கு உத்தரவு இடும் தலைவரது கருத்துக்கு ஏற்ப சிபிசிஅய்டி புலனாய்வு அமைப்பு செயல்பட்டால் நேர்மையான விசாரணையின் நிலமை என்ன? காவல்துறை புலனாய்வு கோணத்தில் செய்ய வேண்டிய பலவற்றை செய்யவில்லை. தொடக்கத்திலிருந்தே மாவட்ட காவல்துறை பள்ளி நிர்வாகத்துக்கு உதவிடும் வகையில் பல தவறுகளை செய்திருக்கிறது. அதனால் இழந்த ஆதாரங் களையும் தடயங்களையும் புலனாய்வு அமைப்பு திரட்டி விட்டதா? மூடப்பட்டிருக்க வேண்டிய பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் (தற்)கொலை யுண்ட மாணவியுடன் படித்த மாணவிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகமாட்டார்களா? பள்ளி தாளாளர் மகன்கள் இன்னும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படவில்லையே ஏன்? அது விசாரணையை, வலுவிழக்கச் செய்யாதா? மொத்தத்தில், புலனாய்வு அமைப்பு, உண்மை அறியும் குழுக்கள் உள்ளிட்ட "இணை விசாரணை" மீது பழியை போட்டுவிட்டு தான்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறது!


   இந்தியாவெங்கிலும் அரசு-காவல்துறை கூட்டில் மறைக்கப்பட்ட குற்றங்கள் பல வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கோப்ரா போஸ்ட் அம்பலப் படுத்தல்களை கூறமுடியும். தமிழ்நாட்டிலும் பிற
மாநிலங்களிலும் ஏராளமான உதாரணங்களைக் காட்ட முடியும். காவல்துறை புலனாய்வு ஏன் இணை விசாரணையைக் கண்டு அஞ்ச வேண்டும்? புலனாய்வு அமைப்பு முன்வைக்கப் போகிற முடிவுக்கு பொருந்திப்போகிறவாறு ஊடகங்களின் "இணை விசாரணை" முடிவுகளும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல் தெரிகிறது! "உலை வாயை மூடி னாலும் ஊர் வாயை மூட முடியாது" என்பது தமிழ் சொல் வழக்கு. ஊர் வாயை, உண்மையின் வாயை மூட விரும்புகிறது தமிழக காவல்துறை.நியாயமான, விரிவான விசாரணை நடத்து வதற்காகத்தான் இதுபோன்ற ஒத்துழைப்பைக் நாடுவதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் உண்மை அதுவல்லவென்பது பின்வரும் ஆதாரங்களைக் கொண்டு வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம். ஜூலை 25 அன்று தி இந்து ஆங்கில நாளேடு முதல் பக்க செய்தி ஒன்றை வெளி யிட்டுள்ளது. காவல்துறையின் உளவுப் பிரிவினரது தகவல்களை ஆதாரமாகக் கொண்டு மூத்த செய்தியாளர் திரு.விஜயகுமார் எழுதி யுள்ளார். 17ம் தேதி சம்பவத்துக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து (அதாவது சிபிசிஅய்டி விசாரணையை துவங்கிய பிறகு) எழுதப்பட்ட அந்த செய்திக் கட்டுரை, "கள்ளக்குரிச்சியில் சாதிப்பதட்டம் உருவாகுமென காவல்துறை எச்சரிக்கிறது" எனத் தலைப்பிட்டு எழுதப் பட்டுள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவருக்குச் (ரவிக்குமார்) சொந்தமான சக்தி இன்டர்நேஷனல் பள்ளியை ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அடித்து நொறுக்கி யுள்ளனர்; பேருந்துகளை தீக்கிரையாக்கியுள்ளனர் என்று கொங்கு வேளாளர் சமூகத்தினர் கூறுவதாக காவல்துறையின் உளவுப்பிரிவு மூத்த காவல் அதிகாரிகளுக்கு துப்பு கொடுத்து இருப்பதாக அந்த கட்டுரை கூறுகிறது. மேலும், கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சிலர், ஆதிதிராவிடர் சமூகத்து சில இளைஞர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத் துள்ளதையும் அந்த கட்டுரை தெரிவிக்கிறது. கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் மாணவியின் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த வர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் களும் கொங்கு வேளாளர் சமூகத்திற்கு எதிராக ஒன்று சேர்வார்களாம்; அதனால் கொங்கு வேளாளர் சமூகத்தினர் வன்னியர் சமூகத்தினரது ஆதரவை நாடுவார்களாம். இவ்வாறு, நான்கு சமூகங்கள் எதிரெதிர் துருவங்களாக அணிதிரளும்; அதனால் சாதிப் பதட்டம் உருவாகும் என்று அந்த செய்திக் கட்டுரையில் சொல்லப் படுகிறது. சொல்லப்படும் இந்த செய்தி, தொடர் குற்றங்களை நடத்தியுள்ள அந்தப் பள்ளியின் விருப்பமென்பதை புரிந்துகொள்ள அதிக ஆராய்ச்சி தேவையில்லை. இப்படி ஒன்று நடந்தால் குற்றங்களின் இருப்பிடமான அந்தப் பள்ளி மீதிருக்கும் கோபம் மடைமாற்றப் பட்டுவிடும் என்பதுதான் அவர்களது எதிர் பார்ப்பு. சாதிப் பதட்டம் தான் சக்தி பள்ளியின் கொடும் குற்றங்களை மறைக்கும் 'சக்தி' என்பதை புரிந்து வைத்துள்ளனர். பள்ளியும் வாகனங்களும் எரிந்து விட்டதாக அலறுகிற இவர்கள், தங்களுக்காக பல சமூகத்தையே எரிக்கவும் தயங் காதவர்கள் என்பதை புலனாய்வு இல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

பேரதிர்ச்சி என்னவென்றால், கொடூர நோக்கங்கொண்ட சக்தி பள்ளிக்கு வேண்டிய வர்கள் எழுதிய திரைக்கதைக்கு நமது காவல்துறை உயிருள்ள தமது நடிப்பால் ஒரு 'கொடூர காவியத்தையே எழுதியிருக்கிறது. அந்த காவியத்தின் சில பக்கங்களை அதே ஆங்கில நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் திரு பிரசாத் வெகு துல்லியமாக படம் பிடித்துக் காட்டி யிருக்கிறார். 08.08.2022 நாளிட்ட அந்த முதல்பக்க செய்திக் கட்டுரை, குடியரசு (26), வசந்த் (25) ஆகிய இரண்டு தலித் இளைஞர்களது "எதிர்காலத்தை இருட்டாக்கி, கனவுகளை நொறுக்கி விட்டதை"யும் இவர்களது பெற்றோர்களின் ஆறாத்துயரத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். தலைவாசல் பகுதியைச் சேர்ந்த தலித், கேசவன் மகன் சிவனுடைய வாழ்க்கை சின்னா பின்னமாக்கப்பட்டிருப்பதையும் அந்த கட்டுரை அம்பலப் படுத்தி இருக்கிறது. நியாயமான, விரிவான விசாரணையை நடத்துவதுதான் எங்கள் நோக்கம் என்று சிபிசிஅய்டி சொல்கிறது. ஆனால், தடம் க புரண்டு போயிருக்கிறது என்பதை விளக்குவதற்கு ய வேறு சான்று தேவை இல்லை. காவல் துறையின் அச்சுறுத்தல் அறிவிப்பு, ஜனநாயக ப் விரோதமானது, கருத்துரிமை, எழுத்துரிமைக்கு ர் எதிரானது. எனவேதான் அனைத்திந்திய நீதிக்கான வழக்குரைஞர் சங்கம் அதற்கெதிரான போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது.
சில வாரம் கழித்து, பலியான மாணவியின் பெற்றோர் செல்வி, ராமலிங்கத்தை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி,"குற்றம் செய்தவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது" என்ற அவரது மொழி பொய்யாமொழியாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பம். கொரானாவால் பாதிக்கப்பட்ட நமது முதலமைச்சர், வல்லூறுகள் சிதைத்த வளரிளம் பெண்ணின் பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். நல்லது. அந்தக் குடும்பம் நீதிபெறுவதை உறுதி செய்திட வேண்டும். அந்தக் குழந்தையின் பிறந்தநாளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியைக் கூட காவல்துறை மறுத்துவிட்டது. காவல்துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர், மீண்டும் ஒரு கூடங் குளம் வருவதை, மீண்டும் ஒரு ஸ்டெர்லைட் வருவதை, மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலை, மீத்தேன் திட்டங்கள், மீண்டும் ஒரு கனியாமூர் வருவதை அனுமதித்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் பெரியார் பாசறை வகுப்புகள் அவசியம். ஆனால், ஆர்எஸ்எஸ் பண்புப் பயிற்சியளிக்க பள்ளிகள் அவசியமா? தமிழ் நாட்டிற்கென்று தனித்த கல்விக் கொள்கை எவ்வளவு அவசியமோ அதுபோல தனியார் கல்வி மாபியாக்களிடமிருந்து கல்வி விடுதலை செய்யப்பட வேண்டியதும் மிக மிக அவசியம்.
ஆம் கல்விக்கும் விடுதலை வேண்டும்.