இன்று நாடு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போது தஞ்சாவூரில் நாம் கூடியிருக்கி றோம். மதவாத பாசிசம் என்பது ஒரு சிந்தனைப் போக்காக ஒரு சித்தாந்தமாக மாத்திரம் இப்போது இல்லை, அது இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் எதார்த்தமாக இன்றைக்கு நிலவுகிறது. மதவாத பாசிசம் ஆட்சி அதிகாரத்தை பிடித்திருப்பதன் மூலம் அது இந்தியாவை சீர்குலைக்கப் பார்க்கிறது. இந்திய வகை பாசிசம், அதனுடைய தன்மைகள், வளர்ச்சி, அதை எப்படி எதிர் கொள் வது? எதிர்த்து எப்படி போராடுவது? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
கம்யூனிச இயக்கத்துக்கு எப்படி நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது அதுபோல பாசிசத்திற்கும் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1848ல் எழுதப்பட்டது. 1917ல் ரஷ்ய புரட்சி நடந்தது. பாசிசமும் நூற்றாண்டு கால கொண்டது. 1919 முதல் உலக யுத்தத்தின் பின்னணியில் பாசிசமும் எழுந்து வந்தது. 1917ல் தோழர் லெனின் தலைமையில் நவம்பர் புரட்சி நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் பாசிசம் என்ற கருத்துக்கோப்பு வளர்ச்சி பெற்று வந்தது. அக்டோபர் 1922 முசோலினி ஆட்சியைப் பிடித்த காலமாகும். அதுதான் பாசிசம் ஆட்சிக்கு வந்த முதல் நிகழ்வு. முசோலினி துவங்கி மோடி வரை பாசிசத்தின் நூறாண்டு கால வரலாற்றை, அது வளர்ந்து வந்த பாதையை நாம் பார்த்து வருகிறோம். இந்தியாவில் 2014இல் பாசிசம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கலாம் ஆனால், பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தக் கூடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925இல் துவங்கப்பட்டது. பாசிசம் ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, இப்போது இந்தியா என்று வந்தடைந்திருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் உழைக்கும் மக்களுடைய போராட்டங்கள், வரலாறு ஆதிவாசிகளின் போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுடைய போராட்டங்கள், இளைஞர்கள், மாணவர்களுடைய போராட்டங்கள் மேலோங்கிய போக்காக இருந்த காரணத்தினால் பாசிசத்தால் வளர முடியவில்லை அல்லது போதுமான வலுப்பெற முடியவில்லை.
பாசிசத்தை பற்றிப் பேசும்போது ஹிட்லரை பற்றி பேசியாக வேண்டும். முசோலினியைப் பற்றி பேசியாக வேண்டும். மோடியை பற்றி பேசியாக வேண்டும். ஹிட்லரிசம் என்பதும் ஒரு சித்தாந்தம், இயக்கம். இந்த பாசிச சித்தாந்தம் அரசு அதிகாரத்தை கைப்பற்றும்போது அது அரசு நிறுவனங்கள் அனைத்தையும் அழித் தொழிக் கிறது அல்லது மறுக்கட்டுமானம் செய்கிறது. ஹிட்லரும் அப்படி செய்யத்தான் முயற்சி செய்தார். இந்தியாவிலும் இன்றைக்கு மோடி அரசாங்கம் அதுபோல் எல்லாவற்றையும் மாற்றி
அமைக்க முயற்சி செய்கிறது. அது, அரசு நிறுவனங்களை மாத்திரம் அல்ல, சமூகத்தையும் மாற்றியமைக்கிறது. இதுதான் இந்திய வகை பாசிசத்தின் மாறுபட்ட வகை மாதிரியாக இருக் கிறது. இந்திய வகை மாதிரி பாசிசம் என்பது அரசு சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல. அது சமூக இயக்கத்தோடும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
ஒரு பாசிச அரசாங்கம் என்பது அதிகாரத்தை குவித்து வைத்துக் கொள்கிற ஒரு அரசாங்கமாக எப்போதுமே இருந்து வருகிறது. எந்த ஜனநாயகத் திலும் அரசில் மூன்று நிறுவனங்கள் இருக்கும். 1) நீதித்துறை 2) நிர்வாகத் துறை 3) சட்டமன்றம் என்பதாக இருக்கும். இவை மூன்றுக்கும் இடையில் ஒரு சமநிலை பேணப்படும். ஆனால், பாசிச அரசு இந்த சமநிலையை மாற்றுகிறது. நிர்வாகத்துறையானது நீதித்துறைக்கு, சட்டமன் றத்திற்கு கட்டளை இடுவதாக நிலைமையை மாற்றி இருக்கிறது. இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தினுடைய செயல்பாடு என்னவாக இருக்கிறது? குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக தீஸ்தா செதல்வாத் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம்,தீஸ்தா செதல்வாத் மீது கைது நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது. அதை பயன்படுத்திக் கொண்டு பாசிச அரசாங்கம் இன்றைக்கு அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. ஆல்ட் நியூஸ் பத்திரிக்கை யாளர் ஜூபைர் உண்மையை வெளிப்படுத்திய தற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய பிணை மனு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மதியம் 2 மணி அளவில் காவல்துறை அதிகாரி அவருடைய பிணை நிராகரிக்கப்பட்டு விட்டது என்று வெளிப்படையாக தெரிவிக்கிறார். ஆனால் அன்று இரவு 7 மணிக்கு தான் நீதிமன்றம் விசாரணையை முடித்து அவருடைய பிணை மனுவை நிராகரிக்கிறது. இது அரசு நீதித்துறைக்கு கட்டளையிடுகிறது என்பதற்கான சிறந்த உதாரணமாகும். அதுபோல் 'நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் (unparlia mentary words)' என்று ஒரு பட்டியலை மோடி அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? பாசிசத்துக்கு எதிராக யாரும் எதுவும் பேசக்கூடாது. ஜனநாயகத்திற்காக படுத்தின. யாரும் எதுவும் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என்பதுதான் அதனுடைய உள்நோக்கமாக இருக்க முடியும். நம்முடைய அரசியலமைப்புச் சட்ட ஏற்பாட்டில் நீதித்துறை, நிர்வாக துறையையும் சட்டமன்றத் தையும் கண்காணிக்கும் அமைப்பாக செயல்பட வேண்டும். ஆனால் இப்போது நீதித்துறையை அரசு நிர்வாக அமைப்பு தன் கட்டுக்குள் எடுத்துக் கொண்டு விட்டது.
நீதித்துறை, நிர்வாகத் துறை, சட்டமன்றம் இவற்றுக்கு அடுத்து நான்காவது தூணாக விளங்குவது பத்திரிகைத் துறை. பொதுவாக பத்திரிகை துறையின் பணி என்பது உண்மையை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சொல்வதாக இருக்க வேண்டும். இருக்கும். ஊடகத்துறை மக்களுடைய வாழ்க்கையை, மக்கள் வாழ்க்கை யில் சந்திக்க கூடிய வலிகளை, சிக்கல்களை, பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாக இருக்க வேண்டும். அது தொலைக்காட்சியாக இருக்க லாம் அல்லது அச்சு ஊடகமாக இருக்கலாம். ஆனால், இன்று அது போன்ற மக்களின் பொருளாதார நெருக்கடிகளை மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சொல்வதாக ஊடகங்கள் இல்லை. அதற்கு பதிலாக, அவை கார்ப்பரேட்டுகளின் ஊது குழலாக, அரசு அமைப்பின் அறிவிப்புகளை வெளியிடும் நிறுவனங்களாக ஸ்டேனோகிராபர் மீடியா என்று சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டன. ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் நன்றாக விளையாடும் போது விளையாட்டு மைதானத்தில் உற்சாக நடனமாடும் குழுவினர் (cheer leaders) இருப்பார்கள். இன்றைக்கு ஊடகங்கள் மோடி அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு உற்சாக நடனமாடுபவர்களாக மாறிவிட்டனர். அரசாங்கத் துக்கு எதிராக போராட்டம் நடத்திய விமர்சனம் செய்த சிறுபான்மை மக்களின் வீடுகள் இடிக்கப்பட்ட போது, குறிப்பாக அலகாபாத்தில் ஜாவித் அகமது வீடு இடிக்கப்பட்ட போது அதை ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்னும் இது போன்ற நிறைய வீடுகள் இடிக்கப்பட வேண்டும் என்பது போன்ற செய்தியை அவை வெளிப்படுத்தின. அதேபோல் பயங்கரவாத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை கொண்டு இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அதே கொண்டாட்டத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தின
இந்திய வகை மாதிரி பாசிசத்தின் இன் னொரு முக்கிய அம்சம் வளர்ந்து வரும் மத்தியத்துவப்படுத்துதல் ஆகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு கூட்டாட்சி முறைக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.சில அதிகாரங்கள் மாநில அரசிடமும், வேறு சில வழியாக அதிகாரங்கள் மத்திய, மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியலிலும் இடம்பெற்றிருக் கின்றன. அதற்கென்று தனித்தனியாக பிரிவுகள் உள்ளன.
ஆனால் மாநிலத்தின் உரிமைகளை இப்போது மத்திய அரசாங்கம் களவாடிக் கொள்கிறது. ஆக்கிரமிப்பு செய்கிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான நீடித்த விவசாயிகளின் போராட்டத்தை நாம் கண்டோம். ஆனால் நமது அரசியல் சட்டப்படி விவசாயத் துறை மாநிலப் பட்டியலில் உள்ளது. மத்திய அரசு அது போன்ற சட்டத்தை இயற்றவே முடியாது. ஆனால், மாநில உரிமைகளை ஆக்கிரமிப்பு செய்து அது போன்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. இது வளர்ந்து வரும் மத்தியதுவப்படுத்தலின் வெளிப்பாட்டுக்கான சிறந்த உதாரணமாகும்.
இந்திய வகை பாசிசத்தின் இன்னொரு வகை மாதிரி என்னவென்று சொன்னால்,அது சமூக ஆதரவுடன் சமூகத்தையும் தன் பின்னே திரட்டிக் கொண்டு வருகிறது என்பதாகும்.இது சாதாரண சர்வாதிகாரம் மாத்திரம் அல்ல. சாதாரண சர்வாதிகாரத்திற்கும் பாசிசத்திற்கும் உள்ள வேற்றுமையை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். 1976-77 காலகட்டத்தில் அப்போதைய இந்திரா காந்தி அம்மையார் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அப்போது ஜனநாயகம் இடைக்காலமாக 19 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. எல்லா எதிர்க்கட்சியினரையும் சிறையில் அடைத்தார். அது அறிவிக்கப்பட்ட அவசர நிலையாக இருந்தது.அந்த அவசர நிலையில் சமூகம் அணி திரட்டப்படவில்லை என்பது முக்கியமான அம்சம். ஆனால், இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலை இருக்கிறது. ஆனால் சமூகமாக பாசிச ஆதரவு சக்திகள் அணிதிரட்டப்பட்டிருக்கின்றனர் என்பதை நாம் காணத் தவறக் கூடாது. இந்த சமூக அணி திரட்டல் என்பது பல வடிவங்களில் நடக்கிறது. தெருக்களில் கண்காணிப்பு குழுவாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் எதிரிகளை அடித்து கொலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது சமூக வலைத்தளங்களில் எதிர் கருத்து கொண்டவரை சீண்டி கேவலப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இப்படி தேசியவாதம் என்ற பெயரிலே சமூகத்தை பாசிசமாக அணி திரட்டி கொள்கிறார்கள். இது ஒரு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் பின் கதவு படை. பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள், வீதியில் சண்டையிடும் படைகள் அவர்களிடம் இருக்கின்றன. இப்படி, அரசு மற்றும் தெருக்கள் இரண்டிலும் பாசிசத்துக்காக அவர்கள் அணி திரட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
பலரும் 2014ஐ பாசிசத்தின் வருகையாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இகக(மாலெ) கட்சியைப் பொறுத்தவரை 1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளன்றே பாசிசத்தின் வருகை உத்திரவாதப்படுத்தப்பட்டது என்று சொல்கிறோம். அந்த நிகழ்வு வெளிப் படையாக பாசிசத்தின் வருகையை அறிவித்த நிகழ்வாகும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று உத்தரப்பிரதேசத்தில் ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. மத்தியில் இருந்த ஆட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றம் பாபர் மசூதியை பாதுகாக்க வேண்டும் என்று வழிகாட்டி இருந்தது.எல்லாம் இருந்த போதும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்படியானால் உச்சநீதிமன்றம் அதிகாரமற்றுப் போய்விட்டது என்று தான் அர்த்தம்.பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பெரும் கூட்டம் இருந்தது. அங்கே அத்வானி இருந்தார். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் தொண்டர்கள் இருந்தனர். அந்நிகழ்வு இந்தியாவின் அரசியல மைப்புச் சட்டத்திற்கு ஜனநாயகத்திற்கு விடப் பட்ட சவால். ஆகவே தான் நாம் சொல்கிறோம் அந்த நிகழ்வு இந்தியாவில் மதவாத பாசிசத்தின் வருகையை அறிவித்த நிகழ்வாகும்.
அதன் பின்பு 2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலை. ஆயிரக்கணக்கான சிறு பான்மை மக்கள் அங்கு படுகொலை செய்யப் பட்டனர். அந்தப் படுகொலை நடப்பதற்கு அங்கு ஆட்சியில் இருந்த மாநில அரசு உதவியாக இருந்தது. 1992-2002 காலகட்டம் மதவாத பாசிசம் வளர்ந்து வந்த காலகட்டமாகும். பலரும் இந்த காலகட்டத்தை மதவாதம் என்று அழைத்தனர் அல்லது அடிப்படைவாதம் என்று அழைத்தனர். இதக(மாலெ) கட்சிதான் அதில் பாசிசத்திற்கான அம்சம் இருக்கிறது என்று சொன்னது. இந்த மாநாட்டிலே தோழர் வாசுகி அவர்கள் டிமிட்ரோ பற்றியும் கம்யூனிஸ்ட் சர்வதேச அகிலம் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்கள். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதனாலயே இந்த அரசுகள் ஜனநாயக அரசுகள் என்று நாம் முடிவு செய்யமுடியாது என்று குறிப்பிட்டு சொன்னார்கள்.
அவர்கள் ஆட்சிக்கு வந்து அதிகாரத்தை குவித்துக் கொண்டு நீண்ட கால இயக்கப் போக்கில் தங்கள் வலுவை வளர்த்துக் கொள்கிறார்கள். நம்முடைய பலவீனங்களில் இருந்து அவர்கள் வளர்கிறார்கள் என்பதையும் நாம் சேர்த்து பார்க்க வேண்டும்.
3சி என்று சொல்லக்கூடிய மதவாதம், முதலாளித்துவம், சாதிய அமைப்பு முறை (3C- Communalism, Capitalism, Caste system) இவை மூன்றும் சேர்ந்து தான் பாசிசத்தை உந்தி தள்ளுகின்றன. 2002க்கு பிறகு 2004 இல் வாஜ்பாய் அரசாங்கம் வந்தது. அப்போது குஜராத் முதல்வரான மோடி, ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் செல்ல அந்நாடுகள் தடை விதித்தன. மோடி முகாம் தனிமைப்பட்டிருந்த சமயம் அது. அப்போது டாட்டா,அம்பானி, அதானி போன்ற முதலாளிகள் "துடிப்புமிக்க குஜராத்" என்று சொல்லி மிகவும் வலுவான மனிதர் என்று சொல்லி மோடியை மையத்துக்கு கொண்டு வந்தார்கள். இப்படித்தான் மதவாத பாசிசம் என்பது கார்ப்பரேட் பாசிசம் ஆகவும் உருப்பெற்றது.
இப்போது மூன்றாவது காட்சியை நாம் பார்க்க வேண்டும். அதாவது மதவாதம், முதலாளித்துவம் இவை இரண்டுக்கும் அடுத்து மூன்றாவதாக இந்தியாவில் உள்ள சாதிய முறை. டாக்டர் அம்பேத்கர் "இந்தியா ஒரு இந்து ராஜ்யமாக மாறும் என்றால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் பாசிசம் பற்றி நன்கு அறிந்திருந்த காரணத்தினால் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். சாதிய முறை என்பது ஒரு சமூக அடிமைத்தனமாக நீடித்து நிலைபெற்று இருக்கச் செய்ய உதவுகிறது. இந்த சாதிய முறை அதிகாரத்தில் இருப்பவர்களின் சித்தாந்தமாகவும் இருக்கிறது. அதனால் தான் இந்த அடிமை முறையை அம்பேத்கர் எதிர்த்தார். இந்து ராஜ்யம் பேரழிவு என்றும் குறிப்பிட்டார். அவர் சொன்ன அந்தப் பேரழிவு இப்போது நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. பாசிசம் என்பது மதவாதம், கார்ப்பரேட் மயம், சாதியம் இவற்றின் கலவையாக இன்று நிலவி வருகிறது. இந்திய வகை பாசிசம், இப்போது இந்தியாவை இடித்துத் தள்ளி வருகிறது. 2014இல் மெல்ல மெல்ல துவங்கிய இடித்துத் தள்ளும் பணி, 2019இல் வேகம் பிடித்திருக்கிறது. இப்போது நாம் இதை எப்படி எதிர்கொள்வது? என்பதைப் பார்ப்போம்.
முதலில் இது மக்கள் மீதான யுத்தம் ஆகும். ஜனநாயகத்தின் மீதான அனைத்தும் தழுவிய தாக்குதலாகும். அனைத்தும் தழுவிய தாக்குதலை ஒரு அனைத்தும் தழுவிய எதிர்ப்பை கட்டமைப்பதன் மூலம் தான் தடுத்து நிறுத்த முடியும். ஆர்எஸ்எஸ் பொய்யை நம்பி, ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இயக்கம் ஆகும். நாம் அதற்கு எதிராக உண்மையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அவர்கள் மக்களை பிளவுபடுத்துகிறார்கள் என்றால் நாம் மக்களை ஒன்று படுத்த வேண்டும். அவர்கள் பயங்கரவாத அச்சத்தை உருவாக்குகிறார்கள் என்றால் நாம் துணிவு என்ற சித்தாந்த ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும். வளர்க்க வேண்டும். இது தனி நபர்களுக்கும் பொருந்தும் அமைப்புக்கும் பொருந்தும். இந்தியாவில் தனி நபர்களும் அமைப்புகளும் அளப்பரிய துணிவை சமீப காலத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அருட்தந்தை ஸ்டேன் சுவாமி சிறையிலேயே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டார். அவர் உண்மையின் பக்கம் நின்றதற்காக அவருடைய உயிரை விலையாக கொடுக்க வேண்டியிருந்தது. ஸ்டேன் சாமி போன்ற உறுதி மிக்கவர்கள் இன்றைய காலக்கட்டத்தில் நிறைய பேர் தேவைப் படுகிறார்கள். அதேபோல் அவினாஷ் குமார் உண்மையை கூறியதற்காக நீதிமன்றம் அவர் மீது தண்டத் தொகை கட்டச் சொன்ன போது, எப்படி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தண்டத் தொகை கட்ட அன்றைய சுதந்திரப் போராட்டக்காரர்கள் மறுத்தார்களோ அதுபோல் அவரும் மறுத்து விட்டார். இன்றும் சிறைச்சாலையில் சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும் டே, வரவர ராவ், உமர் காலித் போன்றவர்கள் இருக்கிறார்கள். முகமது ஜூபைர் சிறைப்படுத்தப்பட்டார். மனித உரிமைப் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மக்கள் போராட்ட அமைப் பாளர்கள் என பலரும் சிறையில் வாடி வருகின்றனர். இத்தாலியில் முசோலினியின் பத்தாண்டு கால ஆட்சியில் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொதுச் செயலாளர் அந்தோணியா கிராம்ஸி சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அவர் பாசிசத்துக்கு எதிரான சித்தாந்த ரீதியான எதிர்ப்பைக் கட்டமைத்தார். இன்றைய காலக்கட்டத்தில் துணிவு என்பதற்கு வேறு மாற்று இல்லை. நாம் உண்மையின் பக்கம், சமூக நல்லிணக்கத்தின் பக்கம் நிற்போம்.
இரண்டாவது முக்கியமான விசயம் சித்தாந்த ரீதியான எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பது என்பதாகும். அவர்கள் ஒரு சித்தாந்தத்தோடு வரும்போது, நாம் ஒரு எதிர் சித்தாந்தத்தோடு அவர்களை எதிர்க்க வேண்டும். பாசிசத்தை எதிர்ப்பதற்கு மக்களின் சக்தியை சார்ந்து இருக்க வேண்டும். முதலாளித்துவத்தின் அதிகாரத்தை, பாசிசத்தின் அதிகாரத்தை மக்களின் அதிகாரம் கொண்டு, ஆற்றல் கொண்டு எதிர்த்திட வேண்டும். எப்போதெல்லாம் மக்கள் சக்தியின் ஆற்றல் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ, எப்போதெல்லாம் மக்கள் விழிப்படைந்த வர்களாக இருக்கிறார்களோ, எப்போதெல்லாம் மக்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்களோ, அப்போ தெல்லாம் மக்கள் விரோத ஆட்சிகள் விரட்டப் பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு ஸ்ரீலங்காவை எடுத்துக் கொள்வோம். அங்கே மக்கள் அந்த நாட்டு அதிபரின், பிரதம மந்திரியின் மாளிகையைக் கைப்பற்றினார்கள். கோத்தபய ராஜபக்சே ஆட்சியை விட்டு ஓடும்படி ஆனது. சாகின்பாக் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே நான்கு தலைமுறை முஸ்லிம் பெண்கள், 8 வயதிலிருந்து 80 வயது வரை உள்ள பெண்கள் போராட்ட களத்தில் இருந்தார்கள். அது ஒரு மிகப்பெரிய வெகுமக்கள் போராட்டமாக, குடியுரிமை சட்டத் திருத்தத் திற்கு எதிரான போராட்டமாக அமைந்தது. விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டமும் வெகுஜன பங்கெடுப்போடு நடந்தது. இப்போது குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஒரு கமிட்டி அமைத்து போராட்டக்கா ரர்களுக்கு துரோகம் இழைக்கிற வேலையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு இந்தக் கமிட்டியில் இடம்பெறப் போவதில்லை என அறிவித்திருக்கிறது. விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் விவசாயிகளின் ஆற்றலை வெளிப்படுத்தியது. அதேபோல் சமீபத்தில் அக்னி பாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்களின் போர்க்குணமிக்க போராட்டம் சுய கௌரவத்திற் கான, சுயமரியாதைக்கானதாக நடைபெற்றது. ஒரு இளைஞர் 21, 22 வயதில் அரசாங்க வேலையில் சேர்வதை எதிர்பார்க்கும் போது, இவர்கள் அந்த வயதில் பணி ஓய்வை கொடுக்கக்கூடிய அக்னிபாத் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இது ஆள் எடுப்பு சட்டம் அல்ல, பணி ஓய்வு திட்டம் என்று நாம் சொல்கிறோம். அந்தத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் இளைஞர் களின் கோபாவேசத்தை சந்தித்தது. ஆகவே இன்றைய தேவை ஒரு சக்தி வாய்ந்த மக்கள் இயக்கம் ஆகும். ஒரு பரந்த எதிர்கட்சிகள்/ இயக்கங்களின் ஒற்றுமை இன்றைய தேவையாக இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இந்த மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பச்சைத் தமிழகம் ஆகிய அமைப்புகளுடன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் கைகோர்த்து நிற்கிறது. இந்தத் தருணத்தில் அனைவரும் இணைந்து வேலை செய்வதற்கான ஒரு அரசியல் விருப்பம் ஆதாரமானதாக தேவைப்படுகிறது. சமீபத்தில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட துரதிஷ்டவசமாக சில எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வில்லை. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெளிநடப்பு செய்யப் போவதாக அறிவித்திருப்பது மிகவும் துரதிஷ்ட வசமானது. இன்றைக்கு பரந்த, சகல பிரிவினரின் ஒன்றுபட்ட ஒற்றுமை பாசிசத்தை எதிர்கொள் வதற்கு தேவையானதாக இருக்கிறது. இன்றைய தினம் ஜந்தர் மந்தரில் வங்கி தனியார் மயமாக் கத்திற்கு எதிராக வங்கி ஊழியர்களின் பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது போல் போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள், தொழிலா விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள்ளர்கள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. மதவாதம், கார்ப்பரேட் மயம், சாதியம் ஆகியவற்றின் கலவையாக இருக்கும் இந்திய வகைமாதிரி பாசிசத்தை 2024 தேர்தலில் நாம் எதிர்கொள்ள விருக்கிறோம். அதற்கு முன்னதாக போராடக் கூடிய அனைத்து சக்திகளையும் ஒருமுகப்படுத்துவது அவசர அவசியமான கடமையாக இருக்கிறது. 2024 "செய் அல்லது செத்துமடி" என்பதான போராட்டமாக இருக்கும்.
1942ல் ஆகஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றது. அந்த இயக்கம் நடைபெற்று 80 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். இப்போது நாம் உரக்கச் சொல்ல வேண்டியது பாசிசமே வெளியேறு!ஆர் எஸ் எஸ் ஸே வெளியேறு! மதவாத பாசிசமே வெளியேறு! கார்ப்பரேட்மயமே வெளியேறு! சாதியமே வெளியேறு! என்பதாக இருக்கும். அதை நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உரக்க சொல்லுவோம். புரட்சி ஓங்குக!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)