தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள்
கிளாஸ்டன்
காளியப்பன்
* வினிதா
* ரஞ்சித்குமார் தமிழரசன்
செல்வசேகர்
அந்தோணி மணிராஜ்
ஸ்னோயின் கந்தையா ar கார்த்திக்
ஜெயராமன்
சண்முகம்
கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை ஊடகம் மூலம் வெளியாகி உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கிளர்ச்சி ஏற்படாமலே, அதற்கான தேவை
இல்லாமலே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிக்குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடியுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர்.
தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது. போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர். ஒரு அடியாள் போல செயல்பட்டு 4 இடங்களுக்குச் சென்று, 17 ரவுண்ட் சுட்டுள்ள போலீஸ்காரர் சுடலைக் கண்ணு, அப்போது அவருடன் இருந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மகேந்திரன், அருண்சக்திகுமார், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்ட 17 காவல்துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே மிக அலட்சியமாக அணுகியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன். அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார்;வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார். எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.
"துணை வட்டாட்சியர்கள் சேகர், சந்திரன், கலால் அலுவலர் கண்ணன் ஆகியோரிடம் போலீசார் விருப்பம்போல உத்தரவு பெற்றுள்ளனர்" எனவே துணை வட்டாட்சியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆணையத்தின் பரிந்துரைக்கு கூடுதலாக இகக(மாலெ) முன்வைக்கும் கருத்துக்கள்:
அப்போதைய தென்மண்டல ஐ.ஜி, நெல்லை சரக டி.ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட 17 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
செய்துள்ளது. இது மட்டும் போதாது, அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். அவர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.
*"மிக அலட்சியமாக செயல்பட்டார், அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேசன்” என விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும். ஆட்சியர் மட்டுமல்ல, அப்போதைய ஆட்சியாளர் எடப்பாடி பழனிசாமியும் அலட்சியம் காட்டினார். இரண்டு பேரும் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆட்சியாளர்கள், காவல்துறை அதிகாரிகளை கையாட்கள் போல் பயன்படுத்திய வேதாந்தா பெருமுதலாளி அனில் அகர்வால் மீதும் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ஆணையம் குற்றம் சுமத்திய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் மீதும் கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
*கொல்லப்பட்ட குடும்பம் ஒவ்வொன்றுக்கும் இழப்பீடாக, வேதாந்தா நிறுவனத்திடமிருந்தும் குற்றம் சாட்டப்பட்ட ஆட்சியரிடமிருந்தும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமிருந்தும் வசூலித்து தலா ரூபாய் ஒரு கோடி வழங்கிட வேண்டும். காயமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
மாநில அரசு நிரந்தர நிதியத்தை ஏற்படுத்தி உயிரிழந்த, காயமடைந்த குடும்பத்திற்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிட வேண்டும். இந்தக் குடும்பத்தினரது குழந்தைகளின் கல்வி,மருத்துவச் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கொல்லப்பட்டவர்கள் நினைவாக மாநில அரசு ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பிட வேண்டும். இவர்களது நினைவாக ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு பாடுபடுவோருக்கு விருது வழங்கிட வேண்டும்.
அனைத்துக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதுடன் சொத்துக்களை முடக்கி அரசு கையகப்படுத்திய வேண்டும். சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் ஆலைகள் எதற்கும் அனுமதி அளிக்கக்கூடாது.
போராட்டக்காரர்கள் மீது வழக்குப் போடப்பட்டு நீதி மன்றங்களில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் அரசு தாமதமின்றி திரும்பப் பெற வேண்டும். ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு நீதி வேண்டும்!