அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம்
முதல் அனைத்திந்திய மாநாடு
அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தின் முதல் அனைத்திந்திய மாநாடு 2022 மே 28-29 தேதிகளில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் ஜி.ரமேஷ், திவாகர்,கிளிஃப்டன் டி ரோசாரியோ, மைத்ரேயி கிருஷ்ணன், சூர்ய பிரகாஷ், முகமது அஃபீப் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழு மாநாட்டை வழிநடத்தியது. மே 28 காலை 10.30 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் வழக்கறிஞர் குணால் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் ஜி.ரமேஷ், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் தலைவர்களான அம்பேத்கார், சிங்காரவேலர், மோகன்தாஸ் காந்தி, வ.உ.சிதம்பரம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் கடந்த காலத்தில் குறிப்பாக கொரோனா காலத்தில் உயிரிழந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், சட்ட மாணவர்கள், இந்துத்துவ மதவெறி பாசிச சங்கிகளால் படுகொலைக்குள்ளாக்கப்பட்டவர்கள் ஆகியோர்களுக்கு அஞ்சலித் தீர்மானத்தை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கிளிஃப்டன் கடந்தகால வேலை அறிக்கையை முன்வைத்தார். வழக்கறிஞர் அஃபிப் மாநாடு ஆவண நகலை முன்வைத்தார். அதன் பின்னர் 11 மாநிலங்களில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் தங்கள் மாநில வேலை அறிக்கையை முன் வைத்தார்கள். மே 28 அன்று மாலை பொது மாநாடு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞர் மிகிர் தேசாய், பாசிசத்தை எதிர்கொள்ளுதலில் வழக்கறிஞர்கள் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சங்கர், கவிதா கிருஷ்ணன் பொது மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மே 2 அன்று மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஆவணத்தின் மீது தங்கள் கருத்துக் களை முன்வைத்து செழுமைப்படுத்தப்பட்டு ஆவணம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து 27 கொண்ட மத்தியக்குழு தேர்வு செய்யப்பட்டது. பின்னர் மத்தியக்குழு கூடி 7பேர் கொண்ட அகில இந்திய நிர்வாகிகளைத் தேர்வு செய்தனர். அகில இந்திய தலைவராக வழ.மைத்ரிரேயி கிருஷ்ணன், துணைத் தலைவர்களாக வழக்கறிஞர்கள் ஜி.ரமேஷ், திவாகர்.மஞ்சு சர்மா, பொதுச் செயலாளராக வழ.கிளிஃப்டன் டி ரோசரியோ, செயலாளராக (அலுவலகப் பொறுப்பு) வழ. சூர்யபிரகாஷ், பொருளாளராக வழ.முகமது அஃபிப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மத்தியக்குழுவில் தமிழ்நாட்டில் இருந்து வழ. ஜோதிபாசு, வழ.அதியமான் இடம் பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் இருந்து பிரதிநிதிகளாக வழக்கறிஞர்கள் ஜி.ரமேஷ், ஜோதிபாசு, அதியமான், கென்னடி, ராஜ்குமார், அப்துல் நிஜாம், தினேஷ், ஜெயசீலன், அப்புனு, மதுலிகா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் தற்போது நிலவுகிற பாசிச தாக்குதல்களை முறியடிக்க சட்டத்துறையில் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தை ஒரு வெகுஜன அமைப்பாகக் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது. நீதித்துறையில் உள்ள ஆணாதிக்கம், சாதியாதிக்கம், மதவாதம் ஆகியவற்றிற்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் போராட தீர்மானிக்கப்பட்டது.