இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை

ஊழியர்கள் பயிற்சிமுகாம், கொடைக்கானல்

இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி

பகுதி 3

தமிழகத்தில் பாசிசத்தின் கோர தாண்டவம்

  தமிழகத்தில் நுழைவதற்காக பிஜேபி தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. பெரியார் பிறந்த மண்ணில் பாசிசம் தலைகாட்ட முடியாது என கருதினால் அது சுயதிருப்தி மனப்பான்மையாகவே இருக்கும். ஏனென்றால், நேற்றுவரை பிஜேபி தமிழகத்தில் அதிமுக, பாமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளின் மீது சவாரி செய்து கொண்டிருந்தது. ஆனால், இப்போது கோவில் திருவிழாக்களை, மக்களின் மூட நம்பிக்கைகளை முழுமையாக பயன்படுத்த எத்தனிக்கிறது. நிர்வாகத் துறையில் சில அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளை தனது ஏஜெண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. கோவையில், நாகர்கோவிலில் காவல்துறை நிறுவனமே காவிமயமாகி இருப்பதைக் காண்கிறோம். காந்தி நினைவு தினத்தன்று காந்தியைக் கொன்றது கோட்சே என கூறிய காரணத்திற்காக இடதுசாரி முற்போக்கு செயல்வீரர்களை கோவை போலீஸ் கைது செய்ததையும், பிஜேபியை எதிர்ப்பதாக கூறும் திமுக அரசு மௌனம் காத்ததையும் நாம் இன்னும் மறந்துவிட வில்லை. சில சமயங்களில், தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, மதவெறிக்கு எதிராக, மாநில உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும், திமுக ஆட்சிதானா என்கிற சந்தேகமும் வந்துவிடுகிறது.

   ஆம்பூரில் மாட்டுக்கறி பிரியாணி திருவிழா என மாவட்ட ஆட்சியாளர் அறிவித்தார். ஒரு நாளுக்கு 10,000 கிலோவுக்கு மேல் மாட்டுக்கறி விற்பனையாகும். ஆம்பூரில் மாட்டுக்கறி இல்லாத பிரியாணி என்றால் அது மதவெறுப்பு, சாதிவெறி திருவிழாவேயன்றி வேறென்னவாக இருக்க முடியும். மிகக் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, கடைசியில், திமுக ஆட்சியில் மாட்டுக் கறி அனுமதிக்கப்படவில்லை. மாறாக, அந்த பிரியாணி திருவிழாவே நிறுத்தப்பட்டது. தருமபுரி ஆதீனத்தை மனிதர்கள் தூக்கிச் செல்லும் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைக்கு எதிராக அதனை தடை செய்தது மாவட்ட நிர்வாகம்.

பயிற்சி முகாம்

ஆதீனங்கள் முதல்வர் 'ஸ்டாலினை' சந்தித்தார்கள். காட்டுமிராண்டித்தனம் அனுமதிக்கப்பட்டது. நடப்பது என்ன ஆட்சி என கேள்வி வருவதில் தவறென்ன இருக்கிறது? இதனை மதவாத சக்திகளின் முன்னால் மண்டியிடுவது (appeasement to Hindutva) என சொன்னால் தவறென்ன இருக்கிறது?

  திருவாரூரில் அண்ணாமலை பேச்சைக் கேட்க, பிஜேபி தலைவர் பேச்சைக் கேட்க பெரும்திரளாக மக்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. எப்படி நடந்தது? அந்த நிகழ்ச்சியை நடத்தியவர் திமுக, கம்யூனிஸ்ட் தலைவர்களின் இளவல்கள் என்கிறார்கள். அதுதான் காரணம் என்கிறார்கள்.
மதவாத சக்திகளின் முன்னால் மண்டியிடுவதா? தமிழகத்தில் பிஜேபியின் அபாயம் என்பது வீட்டுக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. குழம்பிப் போவது திமுககாரர்கள் மட்டுமல்ல, இடதுசாரிகளும்தான். திருவிழாக்களை பயன் படுத்துவது, கோயில் கமிட்டிகளில் பங்கேற்பது, மதவாத சின்னங்களை பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் பிஜேபியை எதிர்த்துப் போராட முடியும் என கருதுகிறார்கள். மதவாதத்தில் பிஜேபியோடு போட்டி போட முடியாது, அப்படி போட்டி போடுவது இடதுசாரி கொள்கைகளுக்கு எதிரானது என கருத வில்லை. பெரியார் போல மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவுவாதத்தை துணிச்சலாக முன்வைப்பதன் மூலமாக மட்டுமே அதை எதிர்த்து போராட முடியும் என்பதற்கு மாறாக, மதவாத சக்திகளின் முன்னால் மண்டியிடத் தயாராகி விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. கார்ப்பரேட் முதலாளிகள் முன்னால் கரைந்து போகும் மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி என்றார்கள். அது மிகப்பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. கூட்டமைப்புவாதம் (கூட்டாட்சி தத்துவம்) என்கிறார்கள். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். ஆகவே, மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவோம் என சொன்னார்கள். அதற்காக ஒரு கமிட்டியும் உருவாக்கி இருக்கிறார்கள், வரவேற்கிறோம். ஆனால், தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டம், கார்ப்பரேட் முதலாளி ஆதரவு சட்டம் என்றால் மவுனம் ஏன்? தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்குப்பாதி உழைப்பாளர்கள்தான். தமிழக மக்களில் பாதிப்பேரை பாதிக்கும் தொகுப்பு சட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என திமுக அரசு ஏன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை? அப்படி ஒரு நிலைப்பாடுதானே கூட்டமைப்புவாதத்துக்காக ((கூட்டாட்சி தத்துவத்துக்காக) போராடுவதாக இருக்கும்?

பிஜேபியை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் மாநில அரசுகள் பிஜேபியின் சட்டத்தொகுப்பை நிராகரிக்க வேண்டும், அதற்காக மாநில விதிகள் உருவாக்குவதைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் பிஜேபியை எதிர்ப்பதாக அகில பொருள்படும். திமுக அரசாக இருந்தாலும் சரி, இடதுசாரி அரசாக இருந்தாலும் சரி, அதையே தான் செய்ய வேண்டும். எப்பாடு பட்டாவது ஆட்சியைத் தக்கவைப்பது என்பதற்காக உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காவு கொடுப்பது தொழிலாளர்களுக்கு, மக்களுக்கு இழைக்கும் அநீதி ஆகும். கார்ப்பரேட் ஆதரவு கொள்கை ஆகும். விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசுகள், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட தயாராக இல்லை.

பிஜேபி வழியைப் பின்பற்றி, கேரளத்தின் புல்லட் ட்ரெய்ன் என அழைக்கப்படும் கே-ரயில் சில்வர்லைன் திட்டத்தை பினரயி விஜயன், சிபிஅய் (எம்) தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் கொண்டுவரும் போது அதை நாம் எதிர்க்கிறோம். அதே போல, ஒன்றிய அரசின்
தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை கேரளத்தில் அமுல் படுத்துவதற்காக கேரள மாநில விதிகள் உருவாக்குவதையும் எதிர்க்கிறோம்.
      கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை கடைபிடிப்பதில், நவதாராளவாத கொள்கைகளைக் கடைபிடிப்பதில், மோடி தலைமையிலான பிஜேபி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கடைபிடிப்பதில், பிஜேபி காங்கிரஸ் முதல் திரிணாமூல் திமுக வரை ஒரு ஒத்த கருத்து நிலவுகிறது. மம்தா முதல் ஸ்டாலின் வரை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலாளர்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கிறார்கள். இதற்கு கேரள இடதுசாரி அரசாங்கமும் விதிவிலக்கு இல்லை என்பதுதான் வருத்தத்திற்கு உரியது. சமூக நீதியின் பொருள் என்ன?
சமூக நீதி என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான நீதி என்றே பொருள்படும். சாதிரீதியாக, இனரீதியாக, மதரீதியாக, வர்க்கரீதியாக, பால்ரீதியாக என அனைத்துவகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக நீதி கிடைக்க வழி வகுப்பதே சமூக நீதி என பொருள்படும். அதனை வெறும் இட ஒதுக்கீடு சம்பந்தப் பட்டதாக குறுக்கிவிட கூடாது. சமூக நீதி கூட்டமைப்பு உருவாக்கி, அதன் மூலம் சமூக நீதியை ஒரு அகில இந்திய நிகழ்ச்சிநிரலாக ஆக்கிட முயலும் திமுக, அதன் மூலம் தனது இந்திய அரசியல் தலையீட்டை அதிகரித்திட நினைக்கும் திமுக, தமிழகத்தில் சமூக நீதி அனைவருக்கும் கிடைக்கிறதா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். தொழிலாளருக்கான சமூக நீதி என்பது மோடியின் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை நிராகரிப்பதாகும். அதனை நிராகரிக்காமல், அதனை அமுல்படுத்திட மாநில விதிகளை உருவாக்குவது என்பது உழைக்கும் வர்க்கத்துக்கு சமூக நீதியை மறுப்பதாகவே பொருள்படும். அதிகாரமற்ற மாநில அரசுகள்.

மோடி அரசாங்கம் நிர்வாக சட்ட விதிகளை [அய்ஏஎஸ் (கேடர்) விதிகள் (6) 1954] திருத்து வதன் மூலம் மாநில அரசு நிர்வாகங்களில் தலையிட முயற்சிக்கிறது. மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் முதல்வருக்கு (மம்தா பேனர்ஜி) நெருக்கமாக இருக்கிறார் என்பதால் அவரை மத்திய பணிக்கு வருமாறு நிர்ப்பந்தித்தது. டெல்லியில் ஆம் ஆத்மி கேஜிரிவால் அரசாங்கம் இருக்கும் போதே, டெல்லி மாநகர
நிர்வாகத்தை தன் கையில் எடுத்துக் கொண்டது. அப்படித்தான் டெல்லி மாநகர நிர்வாகம் ஜஹாங்கிர்பூரியில் முஸ்லீம் மக்கள் குடியிருப் பைப் புல்டோசர் கொண்டு தாக்கி அகற்றிட எத்தனித்தது. யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெ முடியாது. டுக்கப்பட்ட அரசாங்கங்கள் இருந்தாலும் அவை அதிகாரமற்ற அரசாங்கங்களாக இருக்கின்றன.

ஏற்கனவே கவர்னர்கள் பிஜேபி மற்றும் ஒன்றிய அரசு ஏஜெண்டுகள் போல பல மாநிலங்களிலும் செயலாற்றி வருகின்றனர். இப்போது அய் ஏ எஸ், அய் பி எஸ் அதிகாரிகளையும் மோடி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக மாநில அரசு இருக்கும், அதற்கு முதல்வர் இருப்பார். ஆனால், மாநில நிர்வாகம் பிஜேபியின், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடலாம். கடந்த காலத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் என்கிற பிரச்சனை, ஒரு தேசிய இன பிரச்சனையாக, அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது. ஆனால், தமிழக திமுக அரசு அதற்கு உரிய கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. மாநில அதிகாரம் குறித்த பிரச்சனையை, கூட்டமைப்புவாதம் குறித்த பிரச்சனையை மிகப் பெரும் அரசியல் பிரச்சனையாக எழுப்ப வேண்டிய தருணம் வந்து கொண்டிருக்கிறது.

 சமஸ்கிருத தாக்குதல் கலாச்சார கூட்டமைப்புவாத பிரச்சனையும் கூட மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக வரலாறு காணா போராட்டத்தை கண்ட தமிழகம், மீண்டும் சமஸ்கிருத திணிப்புக்கும் எதிராக பெரும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் வருகிறது. தமிழ் பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக் கழகங்கள் கேட்பாரற்று கிடக்கும் போது, போதுமான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் தவிக்கும் போது, பேசுகிற ஒருவர் கூட இல்லாத சமஸ்கிருத பல்கலைக் கழகங்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கைகளை கிடப்பில் போட்டு விட்டு, ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை தொடர்பு மொழியாக்க வேண்டும் என அமித்ஷா துடிக்கிறார். வடநாட்டுக்கும் தென்நாட்டுக்கும் ஒப்பிடுகையில், வளர்ச்சி குறியீடுகளில் தென்னாடு முன்னேறி இருப்பதற்கு ஆங்கிலம் கற்கும் வாய்ப்பு ஒரு முக்கிய விசயம் ஆகும். அதை தென்னாட்டவர்களிடமிருந்து பறித்து,

வடநாடு போல பின்தங்கியதாக மாற்றும் சதித் திட்டமும் அதனுள் பொதிந்து இருக்கிறது. எனவே, மொழிக் கொள்கையை வெறும் மொழி, கலாச்சாரம் தொடர்புடையதாக மட்டும் காண கூட்டமைப்புவாதம் என்பது பொருளாதார கூட்டமைப்புவாதம், நிதி (ஜிஎஸ்டி) கூட்ட மைப்பு வாதம், கலாச்சார கூட்டமைப்பு வாதம், அரசியல் கூட்டமைப்புவாதம் என பலப்பல அர்த்தங்கள் இருக்கின்றன. நிதி கூட்டமைப்பு வாதத்தை உயர்த்திப்பிடிக்கிறார்கள். வரவேற்கிறோம். அதே போல, இதர கூட்டமைப்பு வாதங்களை, குறிப்பாக பொருளாதார கூட்டமைப்பு வாதத்தை, அரசியல் கூட்டமைப்பு வாதத்தை வலுவாக உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியம், அந்த அடிப்படையில் மோடிக்கு எதிராக கலகக் கொடி உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அதற்கு தேவையான முக்கியத்துவத்தை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தருவதில்லை என்பது மட்டுமல்ல, பெரும்பாலான விசயங்களில் மத்திய அரசோடு சமரசமாக செல்வதே அதன் பாதையாக இருக்கிறது என்பது கவலை அளிக்கிறது.

மோடியின் புதிய திருத்தங்கள் இதர மாநில அரசாங்கங்களையும் கூட அதிகாரமற்ற அரசாங்கங்களாக மாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தொழிலாளர் சட்டங்கள் முதல் நிர்வாக விதிகள் வரை அனைத்தையும் திருத்தி இந்த நாட்டை பன்முகப்பட்ட தன்மைக்கு மாறாக ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்றிட பிஜேபி கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகிறது.

 பெரியார் பாதையில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் திமுக எந்த அளவுக்கு முன் நிற்கிறதோ அந்த அளவுக்கு நாம் ஆதரிப்போம். அனைத்து பரிமாணங் களையும் உள்ளடக்கிய கூட்டமைப்பு வாதம், மாநிலத்திற்கு அதிக அதிகாரம் போன்றவை பெரும் அரசியல் பிரச்சனையாக மோடி அரசுக்கு எதிராக எழுப்பப்பட வேண்டும். அதன் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாட்டை, ஒன்றிய அரசோடு மேற்கொள்ளும் சமரச நிலைப்பாட்டை நாம் உறுதியாக எதிர்ப்போம். சமூக நீதிக்கு, அதன் பொருளுக்கு பொதுப்புத்தியில் இருக்கும் குறுகிய பொருளை, குறுகலான பார்வையை மாற்றி அதன் உண்மையான அர்த்தத்தில் முன்கொண்டு வந்திட முயற்சிக்கப்பட வேண்டும்.
ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்முகப்பட்ட தன்மையை வலியுறுத்துவதை தொடர்வோம். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு வாதத்தை பரப்பிட வேண்டும். மதவெறி பாசிச சக்திகளின் முன்னால் மண்டியிடுவதன் மூலமாக அல்ல, அதற்கு எதிராக பெரியாரின் வழியில் போரிட வேண்டும். மத நம்பிக்கை என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது. அதனை பொது வெளியில் கொண்டுவரக் கூடாது. சாதி ஒழிப்பு, ஆண்பெண் சமத்துவம் ஆகியவற்றுக்காக போராட வேண்டும். இவை அனைத்தையும், இன உணர்வுக்கு தூபம் போடுவதன் மூலமாக, பின் தங்கிய உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலமாக அல்ல, உழைக்கும் வர்க்கப் போராட்டங்களை, ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை கட்டி எழுப்புவதன் அடிப்படையில் செய்திட வேண்டிய கடமை தமிழகத்தில் செயல்படும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிறது. அந்த கடமையை நிறை வேற்றிட நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

 பகுதி 4

 மறுசீரமைப்பு இயக்கம்

இந்தக் கடமைக்கு நம்மைத் தயார் செய்து கொள்வதற்காகத்தான் கட்சி வேலைகள் மறுசீரமைப்பு இயக்கத்தை துவங்கி இருக்கிறோம். வலுவான கட்சி, விரிவான மக்கள் அடித்தளம், உறுதியான ஊழியர் படை அதன் அடிப்படையாக இருக்கும். சில தொகுதிகளிலாவது சில பத்தாயிரம் வாக்குகள் பெறுவது, மாவட்டங்களில் பல்லாயிரம் மக்களைத் திரட்டுவது என்பது நமது நோக்கம், கனவு.

அதை அடைந்திட வேண்டுமானால், நமது வழக்கமான வேலைநடையை வழக்கங்களை மாற்றிட வேண்டும். ஒன்றிய மட்ட போராட்டங்களை, வேர்க்கால் மட்ட போராட்டங்களை தீவிரப்படுத்திட வேண்டும். போராட்டங்களுக்கு அணிதிரட்டல் ஒரு சில தலைவர்களின் முயற்சி என்பதாக அல்லாமல், ஒவ்வொரு கிளையும், உள்ளூர் கமிட்டிகளும் சில நூறு பேர்களை திரட்டி, போராட்டங்களில் பங்கு பெறும் நிலை கொண்டுவரப்பட வேண்டும். எனவே

செக்குமாட்டு வழக்கங்களைத் தூக்கி எறிந்திடுவோம்!

நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.புதியதோர் வேலைநடையை, கம்யூனிஸ்ட் வேலைநடையை வளர்த்திடுவோம்!

வலுவான கட்சியை, பரந்த வெகுமக்கள் அடித்தளம் கொண்ட கட்சியை கட்டி எழுப்பிடுவோம்!