மோடி அரசே! அக்னி பாத் திட்டத்தைத் திரும்பப் பெறு புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் கோரிக்கை; தோழர்களை கைது செய்ததற்கு கண்டனம்
புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகத்தின் தலைவர் தோழர் சாய் பாலாஜி உள்ளிட்ட தோழர்களையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். அக்னி பாதை என்ற பெயரில் இந்திய நாட்டில் இனி நிரந்த வேலை என்பதே இருக்காது என்கிற நிலையை கொண்டு வருகிற மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்பதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களான இரயில்வே, இன்சூரன்ஸ், விமானப் போக்குவரத்து, இருப்பு எஃகு ஆலைகள் என அனைத்தையும் தனியார் கையில் கொடுத்துவிட்ட மோடி அரசு இப்போது கவுரவமான, உத்தரவாதமான அரசாங்க வேலை என்று இருக்கும் ராணுவத்தில் உள்ள வேலையையும் ஒப்பந்த அடிப்படையில் மாற்றி, நாட்டில் இனி இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலை என்பது எங்கேயும் இருக்காது என்கிற நிலையை உருவாக்கியுள்ளது மோடி அரசு. மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ராணுவ வீரர்களின் கோரிக்கையான ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தை அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்துதான் ஆட்சியைப் பிடித்தது. எட்டு ஆண்டு ஆன பின்னரும் கூட அதை மோடி அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், போலித் தேசவெறியைத் தூண்டுவதற்கு ராணுவ வீரர்களை பலிகடாவாக்குவது பாஜக சங்கிகளின் அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் எடுபிடிகள் அல்ல ராணுவ வீரர்கள், அவர்கள் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள். அதற்காகத்தான் அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ராணுவத்தை ஒப்பந்த மயமாக்கும் தினக்கூலிமயமாக்கும் அக்னி பாதை திட்டத்தை உடனே மோடி அரசு கைவிட வேண்டும் என புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் கேட்டுக்கொள்கிறது.
சேலத்தில் கொடியேற்று விழா
சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஒன்றியத்தில் இகக(மாலெ) ஏஐசிசிடியு, புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக 15 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், மாநிலக்குழு உறுப்பினர் மோகன சுந்தரம், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் வேல்முருகன், ஏஐகேம் தலைவர்களில் ஒருவரான தோழர் ஐயந்துரை, புரட்சிகர இளைஞர் கழகத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.