அறுவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்
இந்திய உச்ச நீதிமன்றம் மிகச் சரியாக உச்சியில் அடி கொடுத்திருக்கிறது. அறியாத வயதில் பேட்டரி வாங்கிக் கொடுத்த ஒரே செயலுக்காக, எதற்காக தான் வாங்கிக் கொடுத்தோம் என்று கூட தெரியாமல் 15 வயதில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டு தூக்குத் தண்டனை பெற்று பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர், பல கட்ட சட்டப் போராட்டங்கள், மக்கள் போராட்டங்கள், அற்புதம்மாள் அவர்களின் விடாத தொடர் முயற்சி ஆகியவற்றால் இப்போது உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் பேரறிவாளன். உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு நிச்சயமாக வரலாற்றில் ஒரு மைல் கல். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது போல், காங்கிரஸ் ஆட்சி போய் பாஜக ஆட்சி வந்தபின்னரும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திரும்பத் திரும்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை நடைமுறைப்படுத்த தமிழ்நாட்டில் இருந்த ஆளுநர்களால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டு இழுத்தடிக்கப்பட்டது. இது சரியல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் சொன்னதற்குப் பின்னரும்கூட மோடியின் ஒன்றிய அரசு, பேரறிவாளனை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது. இப்போது உச்சநீதிமன்றம் தனக்கான அதிகாரத்தை தெளிவாகவே எடுத்துக் காட்டியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142ன் கீழ் விடுதலை செய்வதற்கான அதிகாரம் தனக்குள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. பாசிச பாஜக&ஆர்எஸ்எஸ் அரசு இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றம் முதல் ரிசர்வ் வங்கி வரை அனைத்து அரசுத் துறை அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தன் கட்டளைக்குக் கீழ்படிபவைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறது. இது நீதிமன்றத்தின் மேல் அரசியலமைப்புச் சட்டத்தின் மேல் மக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதேவேளை, கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பாசிச ஒன்றிய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் கொள்கைகளை, திட்டங்களை அமல்படுத்தி உழைக்கும் மக்களை, அடித்தட்டு மக்களை வாழ்வாதாரம் இன்றி நிர்கதியாக நிற்கச் செய்து கொண்டிருப்பதற்கு எதிராகவும் மனித உரிமைகள் மீறப்பட்டு சிறுபான்மை மக்கள் சித்தரவதைக்குள்ளாக்கப்படுவதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றம் உடன் தலையீடு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். பேரறிவாளனைத் தொடர்ந்து மற்ற 6 பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மீண்டும் ஒரு சட்டப் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும். அது மட்டுமின்றி, பல ஆண்டுகளாக விசாரணையேகூட இல்லாமல் சிறையில் வாடும் இஸ்லாமியயர், தலித், பழங்குடியினரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.