ஒரு பார்வை

சேத்துமான் -சேற்றில் உழலும் மனித மனங்கள்

செந்தில்

    மேற்கு தமிழ்நாட்டின் கிராமத்தில் நடக்கிறது இந்தக்கதை. மாட்டுக்கறி உண்ணும் ஆசையில் மாடுகளை கொன்று விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு தலித் கிராமம் சூறையாடப்படுகிறது. அந்தக் கலவரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகின்றன. கணவனும் மனைவியும் கொல்லப்பட்டு, சிறுவன் குமரேசன் தாத்தா பூச்சியப்பனின் அரவணைப்பில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறான். தன்னுடைய பேரன் படித்து பட்டம் பெற்று, சமூகத்தில் மிகப் பெரிய ஆளாக வரவேண்டும்; அதன் மூலம் தங்களின் இழிநிலை மாறவேண்டும் என்ற தீராத ஆசை தாத்தா பூச்சியிடம் வேர் கொண்டுள்ளது. எனவே, தான் ஒரு ஒடுக்கப்படும் சாதியை சேர்ந்தவராக இருப்பதால், இந்த சமூகம் தன்னை கட்டாயப் படுத்தி செய்யச் சொல்லும் வேலைகளில் தனது பேரனை ஈடுபடுத்தக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார். அவன் கல்வி கற்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார். ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்தவன் என்பதாலேயே சிறுவன் குமரேசன் கல்வி பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஊர் (பண்ணாடிகவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்) பண்ணையாரிடம் எடுபிடி வேலைகள் செய்து கொண்டே தனியாக மூங்கில் கூடை செய்து, விற்று பிழைப்பு நடத்துகிறார் பூச்சியப்பன். பண்ணாடி வெள்ளையனுக்கு பன்றிக்கறி சாப்பிடுவதில் மிகுந்த மோகம் உள்ளது. மனைவியின் எதிர்ப்பையும் அவமானப்படுத்தும் பேச்சுகளையும் மீறி, பன்றிக்கறியை பகிர்ந்துகொள்ள ஆள் சேர்க்கிறார். பூச்சியின் துணையுடன் அதனை சமைத்து சாப்பிடத் திட்டமிட்டு இறைச்சிக்காக பன்றியைத் தேடியலை கிறார். கறியைப் பகிர்ந்து கொள்ள வந்தவரில் அவருக்குத் தெரியாமலேயே அவருடைய பரம எதிரி சுப்பிரமணியும் ஒருவர். வறுத்த பன்றி இறைச்சியின் சுவையும் மதுவின் போதையும் மனதிற்குள் உள்ள விரோதத்தை அதிகரிக்கிறது. அதோடு மனைவியின் அவமானச் சொற்களும் சேர்கிறது. ஏளனப்பேச்சுகள் கைகலப்பாக மாறி, கொலைவெறித் தாக்குதலில் ஒரு உயிர் பலியாகிறது. அதில் சிறுவன் குமரேசனின் எதிர்காலம் சிதைகிறது.
மனித மலத்தைத் தின்று, சேற்றில் உருண்டு புரண்டு திரியும் பன்றிகள் அருவருக்கத்தக்க விலங்குகளாக பொதுச் சமூகத்தால் வரையறுக்கப் பட்டுள்ளன. சுவைக்காக அதன் இறைச்சியை உண்ண விரும்புபவர்கள் கூட, அதனைப் பன்றிகள் என சொல்வதற்கு கூச்சப்பட்டு, உருவகமாக சேத்துமான் என்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே அருவருக்கத்தக்கவை மனித மனங்களே. எதிர்பாராத தருணத்தில் தங்களின் செயலால் நிகழ்ந்த மரணத்தின் பின் விளைவுகளை எதிர்கொள்ள பயந்து, ஒரு சிறுவனை அநாதரவாக, நிர்கதியாக தவிக்க விட்டுவிட்டு ஓடிச்செல்லும் ஊரின் பெரும்புள்ளிகள்; பிறந்த சாதிகளின் அடிப்படையில் சக மனிதர்களைப் பிரித்துப் பார்த்து அடிமைபடுத்தி, ஒடுக்கி, அவமானப்படுத்தும் மனித மனங்களே அருவருக்கத்தக்கவை.
        இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படும் கொட்டடிகளில் இருந்து அதனை விரும்பி யுண்ணும் உணவாக மாற்றுவது வரையுள்ள பல்வேறு பரிமாணங்களை, நுட்பமாகவும் சுவைபடவும் விவரித்துள்ள கதையாசிரியரும் அதனை திரைப்படமாக மாற்றியுள்ள இயக்குனரும் மிகமிக பாராட்டுக்கு உரியவர்கள். மேற்கு தமிழ்நாட்டில் வாழும் மக்களின் கலாச்சார பண்பாட்டினை விவரிக்கும் இப்படியொரு சிறந்த கதையை திரைப்படமாக எடுத்த அறிமுக இயக்குனர் தமிழ், நீலம் தயாரிப்பாளர் 'இயக்குனர்' இரஞ்சித் ஆகியோரின் இம்முயற்சி துணிச்சலான ஒன்றுதான். சம்பவங்கள் நிகழும் இடங்களில் இயல்பாக கேட்கும் ஒலிகளை பின்னணி இசையாக பயன்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பிரதீப் காளிராசா. அது இத்திரைப்படத்திற்கு ஒரு யதார்த்த தன்மையை வழங்குகிறது. சிறுகதையின் காலத்திற்கும் திரைப்படத்தின் காலத்திற்கும் இடையே நிகழ்ந்த கால மாற்றத்தில், இடைநிலை சாதியினருக்கு பணிந்து போகும் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்ற நிலைமாறி அவ்வுறவு முட்டலும் மோதலுமான உறவாக மாறி உள்ளதை கவனத்தில் கொண்டு காட்சிப்படுத்தி உள்ளனர். குடும்ப அமைப்பில் பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்தும் வன்முறை பொதுவானது. ஆனால் அதேவேளையில், அவமானப்படுத்தும் வார்த்தைகளின் வழியாக ஆண்கள் மீது பெண்கள் நிகழ்த்தும் தாக்குதல் இப்படத்தின் காட்சிகளில் வெளிப்படுகிறது. இது குடும்ப அமைப்பிலுள்ள சமத்துவமற்ற, ஜனநாயகமற்ற தன்மையின் எதிர்வினையாகவே பெண்களின் எதிர்வினை இருக்கிறது என்னும் கோணத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள் அதிலும் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த மாணவர்கள் கல்வி பெறுவதில் எண்ணற்ற சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்து கல்வித் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிகளை மூடுதல் போன்ற பிரச்சினைகளால் அவர்கள் கல்வி பெறுவது பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை நகர்ப்புற, உயர்சாதி, வசதியுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி பெறும் நிலையை ஏற்படுத்தும். கிராமப்புற, ஒடுக்கப்பட்ட சாதி, வறுமையில் உள்ள மாணவர்களை கல்வி பெறுவதில் இருந்து வெளியேற்றும். இந்தப் பிரச்சினைகளையும் கதையின் போக்கினூடே இப்படம் காட்சி படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பல் இன, மொழி, கலாச்சார, பண்பாட்டு மக்கள், நீண்ட காலமாக வேற்றுமைகளை புரிந்து கொண்டு சகோதரத்துவ உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்துத்துவ மதவெறி, பாசிச சக்திகள் தற்போது இந்த வேற்றுமைகளை, முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராக, பல்வேறு மட்டங்களில் வெறுப்புணர்வை தூண்டுவதற்கு பயன்படுத்திக் கொண்டு தங்கள் அரசியலை முன்கொண்டு செல்லும் ஆயுதமாக்குகிறார்கள். மாட்டுக்கறி உண்ணுவதற்கு எதிராக நடக்கும் உணவு அரசியலும் அப்படியான ஒன்றுதான். இந்தச் சூழலில் சமூகத்தில் பொதுவாக பெரும்பான்மை மக்களால் வெறுக்கத்தக்க பன்றியின் இறைச்சியைக் குறித்த ஒரு திரைப்படம் வரவேற்கத்தக்க நல்ல முயற்சியே. மேலும், ஒரு எதிர்கருத்தின் விதையாகவும் இப்படத்தைக் காணலாம். இத்திரைப்படத்தை காணும் பலரும் பன்றி இறைச்சியை ஒருமுறையாவது இரகசியமாகவேணும் சுவைத்துப்பார்க்கும் ஆவலை தூண்டும் விதத்தில் இக்கதை திரைப்படமாக்கப் பட்டுள்ளது என்பதும் சாதகமான அம்சமாகும்.
      மேற்கு தமிழ்நாட்டின் இந்து மதவெறி சக்திகளும் இடைநிலை சாதிய சக்திகளும் ஒன்றிணைந்து 2014 இறுதியில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை சர்ச்சைக்குள்ளாக்கினார்கள். தமிழ்நாட்டின் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் எதிர்வினையின் பின்புலத்தில், சென்னை உயர் நீதிமன்றம் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்தப் பின்னணியில் அவருடைய சிறுகதைகளை திரைப்படமாக எடுத்தது பாராட்டத்தகுந்தது.

            அவருடைய, "மாப்பு கொடுக்கணும் சாமி", "வறுகரி" ஆகிய சிறுகதைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கதை திரைப்படத் திற்கான முன்கதையாக எடுத்துக்கொள்ளப்பட்டு அசைந்து நகரும் பிம்பக் காட்சிகளின் (அனிமேட்டெட் கிராஃபிக்ஸ்) வழியாக சொல்லப்படுகிறது. இரண்டாவது கதை முழுத் திரைப்படத்தின் கதையாக எடுத்தாளப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் சிறுகதைகளை திரைப்படமாக்கும் நிகழ்வு அரிதிலும் அரிதான ஒன்று. புதிய திரைப்பட இயக்குனர்கள் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவது தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
இன்னமும் கூட, பல கோடி ரூபாய்கள் செலவு செய்து, மிகப் பிருமாண்டாமாக எடுக்கப்படும் "ஹீரோயிச", மசாலாத் திரைப்படங்களே தமிழ்த் திரையுலகை ஆட்சி செய்கின்றன. சமீபத்தில் வெளியான "அண்ணாத்த", "வலிமை", "பீஸ்ட்" போன்ற வணிகக் குப்பைகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன. மறுபுறம், மக்கள் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கதைகளாகக் கொண்ட "ஜெய்பீம்", "ரைட்டர்", "சேத்துமான்" போன்ற திரைப்படங்கள் வேறொரு போக்கின் தொடர்ச்சியை காட்டுகின்றன. இப்படிப்பட்ட திரைப்படங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்த நிலை மாறி அது ஒரு நிலையான எதிர்ப்போக்காக மாறியுள்ளது கவனிக்கத்தக்கது; வரவேற்கப்பட வேண்டியது.