இந்திய மக்களாகிய நமக்கு நமது சுதந்திரம், ஜனநாயகம், அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய இலட்சியப் பணி ஒன்றுள்ளது!

     நாட்டு விடுதலையின் 75 வது ஆண்டு விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஆகஸ்ட் 9, 2022 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 80 வது ஆண்டு நிறைவை இந்தியா நினைவுகூருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மும்பை அமர்விலிருந்து 'வெள்ளையனே வெளியேறு' அழைப்பு விடுக்கப்பட்ட உடனேயே காங்கிரஸ் தலைமை கைது செய்யப்பட்டது. ஆனாலும், இந்த அழைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் ஒரு மக்கள் எழுச்சியைத் தூண்டிவிட்டது. மேலும், நான்கு இணையான அரசாங்கங் களையும் தோற்றுவித்தது .பி.யின் பலியா, வங்காளத்தில் தம்லுக், ஒடிசாவில் தல்சர், மகாராஷ்டிராவின் சத்ரா ஆகிய இடங்களில் இத்தகைய அரசாங்கங்கள் உருவாயின. இதில், சத்ரா இணை அரசாங்கம், 1947 வரையிலும் நீடித்தது. மேலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கும் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியா ளர்களின் இறுதியான வெளியேற்றத்திற்கும் இடையிலான வரலாற்றுப் பாலமாகவும் இது மாறியது.இருப்பினும், வரலாறு இந்தியா மீது ஒரு கொடூரமான நகைச்சுவையை அரங்கேற்றி யுள்ளது. விடுதலை இயக்கத்திலிருந்து விலகி இருந்ததோடு மட்டுமின்றி, 1857இன் சுதந்திரப் போரில் இருந்து (சுதந்திரப் போராட்டத்தின்) பல்வேறு கட்டங்களில் காலனிய ஆட்சியாளர் களுடன் கூடிக் குலாவியவர்களை முன்னோர் களாகக் கொண்டிருக்கும் சக்திகளின் கைகளுக்கு அதிகாரம் சென்றுவிட்டது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற அறைகூவல் மூலம் நரேந்திர மோடி 2014 ல் ஆட்சிக்கு வந்தார். இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஜேபி இந்தியாவை அடுத்த அய்ம்பது ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் எனக் கொக்கரிக்கிறார். இந்தியாவில் பாஜக மட்டுமே தனியொரு கட்சியாக மாறுவது பற்றி பாஜக தலைவர் ஜேபி நட்டா பேசிவருகிறார்! எதிர்க்கட்சி ஆளும் அரசாங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சீர்குலைக்கப்பட்டு கவிழ்க்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அலுவலகங்கள் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டு சுற்றி வளைக்கப் படுகின்றன; எதிர்க்கட்சித் தலைவர்கள் அமலாக்கத் துறையினரால் இடைவிடாமல் துன்புறுத்தப்படுகிறார்கள்.அரசியலமைப்பும் தேசியக் கொடியும் ஏற்றுக் கொள்ளும் நடைமுறைகள் நடந்து கொண்டிருந்தபோது, ஆர்எஸ்எஸ் இரண்டை யுமே வெளிப்படையாக நிராகரித்தது. மேலும், மனுஸ்மிருதியை இந்தியாவின் அடிப்படை சட்டவிதிகளாகவும், காவிக் கொடியை இந்தியா வின் தேசியக் கொடியாகவும் அங்கீகரிக்க வேண்டுமென்றும் வற்புறுத்திக் கொண்டிருந்தது. சுதந்திரமான, நவீன இந்தியா என்னும் அரசியலமைப்பு திசைவழிக்கு ஆர்எஸ்எஸ்சின் எதிர்ப்பு என்பது வெறும் கருத்தியல் தாக்குதல்களோடு நின்றுவிட வில்லை. தவழ்ந்து கொண்டிருந்த குடியரசை சீர்குலைக்கவும், தடம்புரளச் செய்வதற்கும் அது தன்னாலான அனைத்தையும் செய்தது. காந்தியின் படுகொலை, இந்த பெரிய சதித்திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். ஜனவரி 26, 1950 அன்று அரசியல மைப்பு, முறைப்படி அமலாக்கப் படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, டிசம்பர் 22, 1949 அன்று இரவு அயோத்தியில் மற்றுமொரு சதிச் செயல் அரங்கேற்றப்பட்டது. அயோத்தி நகர நீதிபதி குருதத் சிங், மாவட்ட நீதிபதி கேகேகே. நாயர் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலை நிறுவப்பட்டது. பின்னர் இவர்கள் இருவரும் இன்றைய பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங் அமைப்பின் கீழ் தீவிர அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.காந்தியினுடைய படுகொலையைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்த இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் வார்த்தைகளை இங்கு நினைவு கூருவது பொருத்தமானதாக இருக்கும்.நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும், வெறுப்பு, வன்முறை சக்திகளை வேரறுக்க இந்தத் தடை அவசியம் என்பதை இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை தெளிவு படுத்தியது. ஆர்எஸ்எஸ்ஸால் பரப்பப்படும் மதவாத விஷத்தையும், காந்தி உள்ளிட்ட பல உயிர்களைக் காவு வாங்கிய அதன் பேரழிவுமிக்க விளைவுகளையும் பற்றி, சியாமா பிரசாத், கோல்வால்கர் இருவருக்கும் படேல் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருந்தார். அரசியலமைப் பையும் தேசியக் கொடியையும் ஏற்றுக் கொள்வதாக ஆர்எஸ்எஸ் எழுத்துபூர்வமாக உறுதிகொடுத்த பிறகு, ஜூலை 11, 1949 அன்று அந்தத் தடை நீக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் வாக்குறுதியளித்தபடி இரகசியத்தைத் தவிர்த்து, வன்முறையைக் விட்டொழித்து கலாச்சாரத் துறையில் ஒரு ஜனநாயக அமைப்பாக அது செயல்படும் எனத் தடையை நீக்கும் போது வெளியிடப்பட்ட அறிக்கை நம்பிக்கை ஏற்படுத்தியது. ஆனால், தடை நீக்கப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ் அதன் பழைய வழிமுறைகளுக்குத் திரும்பியது. அதற்காக, இந்தியா மாபெரும் விலை கொடுத்து வருகிறது.இன்று மோடி, 75வது சுதந்திரதின கொண்டாட்டத்தை பயன்படுத்திக்கொண்டு, வரலாற்றை திரிப்பதற்கும் இந்திய விடுதலை இயக்கத்தின் மாபெரும் தலைவர்களை தங்களுடையவர்களாக கடத்திக் கொள்வதற்கு மான ஒரு மாபெரும் வாய்ப்பாக்கிக் கொண்டு வருகிறது. பிரிட்டனின் பருத்தி ஆலைகளை ஊக்குவிப்பதற்காக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியால் துடைத்தெறியப்பட்ட, இந்தியாவில் ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த கைத்தறித் தொழிலின் தற்சார்புக்கான, அதன் மறுமலர்ச் சிக்கான போராட்டத்தின் அடையாளமாக நமது தேசியக்கொடி விளங்கியது. அந்த வரலாற்றில் இருந்து அதனை நீக்கி, கொடியை வணிகப் பொருளாக மாற்றவும் கொடிச் சட்டத்தில் மோடிஅரசாங்கம் திருத்தம் செய்துள்ளது. இது'சுதந்திரம்' என்ற சொல்லின் முக்கிய பொருளையும் களவாடிவிட்டது. நமது விடுதலை இயக்கத்தில் சுதந்திரம் என்பது காலனிய விடுதலையை மட்டும் குறிக்க வில்லை; எல்லாவிதமான சமூக அடிமைத் தளைகளிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்துமான விடுதலையைக் குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் பல்வேறு முடியரசுகளின் கீழ் கைகட்டிநிற்கும் மக்கள் என்ற நிலையில் இருந்து, இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம், இந்திய மக்களாகிய நாம் ஒரு சுதந்திர நாட்டின் சுதந்திர குடிமக்களாக மாறினோம். இன்று இந்திய மக்களின் இந்த சுதந்திரங்கள் அனைத்தும் ஆபத்தில் உள்ளன. உண்மையைச் சொல்வதற்காகவும் நீதியை வேண்டுவதற்காகவும் உரிமைகளைக் கோருவதற்காகவும் குடிமக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பிரிவினையின் வலிகளுக்கு மத்தியிலும், இந்திய முகப்பரப்பை வரையறுக்கும் சமூக பன்முகத்தன்மையையும் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தையும் மதித்து, ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக முன்னேற இந்தியா உறுதிபூண்டது. ஆனால் இன்று, அந்த உறுதிப்பாடு தலைகீழாக்கப்பட்டு வருகிறது.இறையாண்மைமிக்க - சோசலிச - மதச்சார் பற்ற ஜனநாயக இந்தியா எனும் அரசியலமைப்பு லட்சியம், ஒரு பாசிச இந்து ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு காலக் கனவால் அந்த லட்சியம் திறம்பட அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டை கொண்டாட 'இந்திய மக்களாகிய நாம்' என்ற தொடர் இயக்கத்தை நாம் நடத்திக் கொண்டி ருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக, நம்முடைய மாபெரும் தியாகிகளின் கனவு இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை புதுப்பித்துக் கொள்ள, ஆகஸ்ட் 9-15 வரையிலான ஒருவார கால சிறப்பு இயக்கத்தை நாம் மேற்கொண்டிருக்கிறோம். இந்திய மக்களாகிய நமக்கு ஓர் இலட்சியப் பணி உள்ளது. நமது சுதந்திரத்தை, ஜனநாயகத்தை, அரசியலமைப்பை பாதுகாத்தாக வேண்டும். எம்எல் அப்டேட்- தலையங்கம்10-16

ஆகஸ்ட் 2022 தமிழாக்கம் - செந்தில்