மோடி ஆட்சியின் அடக்குமுறைகளும், மோசடிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக சங்கிகளின் ஆட்சி, மோடி என்கிற தனிநபரின் ஆட்சி என்பதாக இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரமாக, பாசிசமாக மாறி வருகிறது. சர்வாதிகாரம், யதேச்சாதிகாரம் என்பன அடிப்படையில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். பாசிசம் என்பது அரசு எந்திரத்தோடு கூடவே, தனியார் படைகளை, அரசு சாராத படைகளை, அரசு சாராத கும்பல்களைப் பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். இதுவும் கூட பாசிசத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும். நமது நாட்டில் சங்கிப் படைகளும், அதன் பல்வேறு அவதாரங்களான 'சேனைகளும்' மக்கள் மீது ஒடுக்கு முறையை ஏவிடப் பயன்படுத்தப் படுவதைக் காண்கிறோம்.”இந்து ராஷ்ட்ரா'” என்கிற பெயரில் காவி ஆட்சியை, மதவெறி ஆட்சியை, கார்ப்பரேட் முதலாளிகளின் ஆட்சியை அமைத்திடுவது எனும் நோக்கத்துடன் செயல்படுகிறது மோடி அரசு. அந்த நோக்கத்தை செயல்படுத்துவதற்காக, பிற்போக்கு மனு ஸ்மிருதியை [மனு(அ)நீதியை] அரசியல் அமைப்புச் சட்டமாக்கிட வேண்டுமென துடிக்கிறது. பல்லாண்டுகள் நடந்த போராட் டத்தின் மூலம், பல்லாயிரக்கணக்கானோர் செய்த தியாகத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்டது இந்திய சுதந்தரம். அந்தப் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, டாக்டர் அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் விரோத மனு ஸ்மிருதியை சட்டமாக்கிட வேண்டுமென துடிக்கிறது மோடி அரசு.
இந்தப் பின்னணியில், இந்திய அரசியல மைப்புச் சட்டத்தைக் காப்பதும், அதற்காக, மோடியை, சங்கிகளை, பிஜேபியை ஆட்சியி லிருந்து வெளியேற்றுவதும் நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக உணர்வாளர்களின் கடமை ஆகிறது. எனவேதான், “மோடியே, ஆட்சியை விட்டு வெளியேறு" என முழங்குகிறோம்.
சாதி, பெண்ணடிமை, மேலோர் கீழோர் முறையை பாதுகாக்கும் சனாதனத்தை முறியடிப்போம்;
அனைத்திலும் பகுத்தறிவு, அறிவியல் கொள்கைகளுக்காகப் போராடுவோம்!
பார்ப்பனியத்தால் உருவாக்கப்பட்ட சனாதனம் என்பது மனு ஸ்மிருதியின் அடிப்ப டையில் அமைந்தது ஆகும். அது மனித நாகரீகத்துக்கு முந்தைய கால, அநாகரீக கால கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடித்திடும் ஒரு பிற்போக்கு கருத்தியல் ஆகும். அது பிறப்பா லேயே ஒருவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என கற்பிக்கிறது. வருணாசிரம தர்மத்தை போதிக் கிறது. கீழ் சாதியினர் மேல் சாதியினருக்கு சேவகம் செய்வதற்காகவே பிறந்தவர்கள் என வாதிடுகிறது. சாதிப் படிநிலையை உயர்த்திப் பிடிக்கிறது. அது மிகக் கொடூரமான, மனித குலத்திற்கு எதிரான, ஒரு தத்துவம் ஆகும். அப்படி அவர்கள், கீழ் சாதியினர், சேவகம் செய்ய மறுப்பார்களேயானால் அவர்களுக்கு மிக அசிங்கமான, மிகக் கொடூரமான தண்டனை வழங்குவது நியாயம், வழங்கியே தீர வேண்டும் எனவும் வாதிடுகிறது. தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கீழ் சாதியினராக, சூத்திரர் களாக வைக்கப்பட்டுள்ளனர் எனபதை நாம் மறந்துவிடக் கூடாது.
பெண்களை வெறும் மறுஉற்பத்தி எந்திரங்களாக, குழந்தை பெறும் எந்திரங்களாக மட்டுமே
காண்கிறது சனாதனம். அவர்களை வெறும்
பாலியல் உறவுக்கானவர்கள் என்பது போல
சித்தரிக்கிறது மனு ஸ்மிருதியும் சனாதனமும்.

எல்லாப் பருவத்திலும் ஆணுக்கு அடிமை


யாகவே வாழப் பிறந்தவர்கள் என்கிறது. கணவன் இறந்த பின் அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என சொல்லி, உடன்கட்டை ஏற வேண்டும் என்றும், விதவை மறுமணம் கூடாது என்றும் சொல்கிறது. பெண் அடிமைத்தனத்தை நியாயப் படுத்துகிறது.
சனாதனம் என்பது பழமைவாதம். நவீனத்து வத்துக்கு எதிரானது. அது அறிவியலுக்கு எதிரானது. சரி தவறு குறித்து கேள்வி கேட்பதற்கு எதிரானது. பகுத்தறிவிற்கு எதிரானது. பிற்போக்குத் தனத்தை, அறிவிலித் தனத்தைப் போதிப்பது. மூடப் பழக்க வழக்கங்களை கடை பிடிக்க வலியுறுத்துவது. அதனால்தான், சனாதனத்தை முறியடித்திட வேண்டும் என்கிறோம்.மோடி அரசின், ஒற்றையாட்சி முறைக்கு எதிராக, கூட்டாட்சி முறைக்காக, மாநிலங்கள் உரிமைக்காகப் போராடுவோம் !
இந்து, இந்தி, இந்துஸ்தான் என்பதே மோடி அரசின் நோக்கம். ஒரே மொழி (இந்தி), ஒரே பண்பாடு (சனாதனம் நிலவுடைமைப் பண்பாடு, மூடப் பழக்க வழக்கங்கள்), ஒரே நாடு, ஒரே ஆட்சி, ஒற்றையாட்சி என்பதே அதன் இலக்கு. இந்தியைத் திணிப்பது மட்டுமல்ல, செத்துப்போன மொழி சமஸ்கிருதத்துக்கு உயிர் கொடுத்து அதனையே இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பதே அதன் கனவு. தேசிய இன உரிமைகளுக்கு, இந்திய நாட்டின் பன்முகப்பட்ட தன்மைக்கு, பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் கொண்டதோர் இந்தியாவுக்கு முற்றிலும் எதிரானது. அனைத்திலும் ஒற்றைத் தன்மையை நிறுவிட முயற்சிப்பது.

சட்டத்தை மாற்றிடாமலே, மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் உரிமைகளை பறித்திட அனைத்து விதங்களிலும் முயற்சித்து வருகிறது. அது காஷ்மீரைத் துண்டாடுவதன் மூலம், ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியதன் மூலம் துவங்கியது. அதன் மூலம், புவியியல் ரீதியிலும், நிதிப் பங்கீட்டு ரீதியிலும் கூட்டாட்சி மறுக்கப்பட்டது. மாநிலங்களின் மீது இந்தி/ சமஸ்கிருதத்தைத் திணிப்பதன் மூலம், பழம்பெரும் மொழி, இலக்கியச் செறிவும் வளமும் மிக்க தமிழ் மொழியை, உருது மொழியை, இன்னபிற செம்மையான மொழி களையும் புறக்கணிப்பதன் மூலம் மொழி ரீதியான கூட்டாட்சி மறுக்கப்படுகிறது.தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் ரத்துசெய்துவிட்டு, முதலாளிகளுக்கு ஆதரவான சட்டத் தொகுப்புகள் நான்கை உருவாக்குகிறது. புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தின் மீது திணிக்கிறது. அய்ஏஎஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து அதிகாரிகளையும் மாநிலத்தில் நியமிக்கும் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொள்ள எத்தனிக்கிறது. நிர்வாகத் துறையை சங்கிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் அரசியல் கூட்டாட்சி முறையும் கூட, மறைமுகமாக, படிப்படியாக ஒழித்துக் கட்டப் பட்டு வருகிறது. அதனால்தான் மோடியின் ஒற்றையாட்சி முறைக்கு எதிராக, கூட்டாட்சித் தத்துவத்திற்காக போராட வேண்டிய அவசியம் இருக்கிறது.கார்ப்பரேட்பிற்போக்கு கல்விக்கொள்கைக்கு எதிராக,முற்போக்கு, பன்மைத்துவ, சமச்சீர் கல்விக் கொள்கைக்காகப் போராடுவோம்!

மோடியின் புதிய கல்விக் கொள்கை என்பது பிரிட்டிஷ் கால “மெக்காலே கல்வி' முறையைப் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு அடிமைக் கல்விக் கொள்கை ஆகும். இப்போது, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக, கார்ப்பரேட் அடிமைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. ராஜாஜி காலத்தில் பெரியாராலும், காமராஜராலும் அடித்து விரட்டப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை, புறக்கடை வழியாக மீண்டும் கொண்டு வரும் சதித் திட்டமாகவே அது திகழ்கிறது. தொடர்பு மொழியாக இந்தி ஏன் இருக்கக் கூடாது என கேட்டு, அமித் ஷா தனது இந்தி திணிப்பு நோக்கத்தை வெளிப்படையாகவே முன்வைத்து இருக்கிறார். பல்லாண்டு காலம் போராடி, உயிர்த் தியாகங்கள் பல செய்து தமிழகத்தில் இயற்றப் பட்ட இரு மொழிக் கொள்கையை குழி தோண்டிப் புதைத்திட, மும்மொழிக் கொள் கையை அது முன்வைத்திருக்கிறது.
கல்வி தனியார்மயத்தை ஒரு விதியாக்குவதன் மூலம், அரசு கல்வி நிறுவனங்களை மூடுவதன் மூலம், கல்வியை ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாக்குகிறது. அதுமட்டுமல்ல, கல்வி முறைக்குள் ஒரு புதியசாதீயப் பிரிவினையை உருவாக்குகிறது.
மாணவர்கள் படித்து முடித்த பிறகு, வியர்வை
சிந்தி உழைத்தால் மட்டும் போதும், சிந்திக்க வேண்டியதில்லை என்கிறது. சிந்திக்கிற பணியை செய்வதற்கு உன்னத உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் செல்வச் சீமான்களின் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறது. கல்வி என்பது அனைத்தும் தழுவிய விதத்திலான அறிவு வளர்ச்சிக்கானதல்ல, எந்திரத்தில் எழுதி இருக்கும் கட்டளைகளை படித்துப் புரிந்து கொண்டு அடிமை சேவகம் செய்வதற்காக மட்டும்தான் என்கிறார்கள். கல்வியிலும் ஏற்றத்தாழ்வு புகுத்தப்படுகிறது.
அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. யானை தலையும், தும்பிக்கையும் உடைய பிள்ளையாரே அதற்கு உதாரணம் என, அறிவியலுக்கு எதிரான விளக்கங்கள் சங்கிகளால் வழங்கப்படுகின்றன. சமீபத்தில், கர்நாடக அரசு சமர்ப்பித்த அறிக்கையில், பித்தகோரசின் முக்கோண தத்துவத்தையும் நியூட்டனின் புவியீர்ப்பு விசை தத்துவதையும் பொய்ப் பிரச்சாரம் என பிதற்றி இருக்கிறார்கள். மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் புகுத்தப்பட வேண்டும், மனு ஸ்மிருதி பாடத்திட்டமாக அறிமுகப் படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். இதுவே மோடியின் புதிய கல்விக் கொள்கையின் லட்சணம்.
தமிழகத்திற்கென ஒரு தமிழக தொழிலாளர் சட்டம், கொள்கை உருவாக்கப் படவில்லை. ஆனாலும் கூட, ஒரு தமிழக கல்விக் கொள் கையை உருவாக்கிடவாவது தமிழகத்தில் ஒரு கமிட்டி அமைக்கப் பட்டிருப்பது வரவேற்கத் தகுந்ததே. ஆனால், அது மோடியின் தனியார் மயப் பாதையில் செல்லுமா, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக, தமிழர் அடிமைக் கல்விக் கொள்கையாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.மடங்கள், ஆதீனங்கள் ஆதிக்கத்திற்கு எதிராக,உழுபவர்களின் உரிமைக்காக, நிலத்திற்காகப் போராடுவோம்!
பொதுவாக, தமிழகத்தில் சிறுவீத விவசாயம் பெருமளவு அதிகரித்து இருக்கிறது என்பது உண்மைதான். பல்லாயிரக் கணக்கான ஏக்கர்
நிலங்களுக்கு அதிபதியான பண்ணையார்கள்
ஆட்சி குலைந்து கொண்டிருக்கிறது என்பது
உண்மைதான். நிலவுடைமை முறையில் பல
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதும் உணமைதான்.
ஆனாலும், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு அதிபதியாக பல கோவில்களும், மடங்களும்,ஆதீனங்களும், கார்ப்பரேட் முதலாளிகளும் புதியவகை ஆதிக்க சக்திகளாக உருவெடுத்துள்ளனர் என்பதும் கூட உண்மைதான் என்பதை மறுத்துவிட முடியாது. தமிழகத்தில் தற்போதும் குத்தகை விவசாயிகள் பரந்து கிடப்பதை காண்கிறோம். அவர்கள் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை உடைமையாக கொண்டுள்ள கோவில்கள், மடங்கள், ஆதீனங்களின் ஆதிக்கத்தின் கீழ், சுரண்டலின் கீழ் உழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது குரல்வளை நெறிக்கப்படுகிறது. உரிமைக் குரல்கள், போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் சத்தமின்றி நிலங்களி லிருந்து வெளியேற்றப் படுகிறார்கள். அவர்கள் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், அத்தகைய கோவில்கள், மடங்கள் ஆதீனங்களின், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அகற்றிடுவது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும். கோவில், மட, ஆதீன நிலங்களை அதனை உழுது பயிரிடும் உழவர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என கோருகிறோம். கோவில், மட ஆதீன நிலங்களை, சொத்துக்களை அரசுக்கு சொந்தமான தாக அறிவித்திட வேண்டும் என கோருகிறோம்.
நிலம் என்பது, இன்றும் கூட ஏழை எளிய மக்களின், குத்தகை விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் விடுதலையோடு தொடர்பு டைய ஒரு கோரிக்கைதான். பஞ்சமி நிலம் இன்று வரையிலும் மீட்கப்படவில்லை. உழுபவர்களுக்கு நிலம் கிடையாது. நிலச் சீர்திருத்த சட்டங்களின் முற்போக்கு அம்சங்கள் பிற்போக்கு திசையில் திருத்தப் படுகின்றன. இதனை தலைகீழாக மாற்றிட வேண்டும். புதிய நிலைமைகளுக்கு ஏற்ற, மற்றுமொரு தீவிர நிலச் சீர்திருத்த சட்டத்திற்கான தேவை முன்னெழுந்து வந்திருக்கிறது. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நிலத்திற்கான போராட்டம் மீண்டும் ஒருமுறை எழுவது தவிர்க்கப்பட முடியாதது. அது வீட்டு மனை கோருவதாகவோ, உழுகின்ற நிலத்தை சொந்தமாக்க கோருவதா கவோ அல்லது நிலம் குறித்த வேறு ஏதாவது கோரிக்கையாகவோ கூட அது இருக்கலாம். ஆனால், நிலம் என்பது ஒரு அரசியல்  கோரிக்கையாக எழுந்து வருகிறது.
தொழிலாளரை அடிமையாக்கும் கார்ப்பரேட் ஆதரவு சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக,தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு, உரிமைகளைக் கொண்ட ஜனநாயக தொழிலாளர் கொள்கைக்காகப் போராடுவோம்!ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான நான்கு சட்டத் தொகுப்புகளை, தமிழகத்தில் நிறை வேற்றிட தேவையான மாநில விதிகளை உருவாக்குவதில் தமிழக அரசு மும்முரமாக இருக்கிறது. மோடி ஆட்சிக்கு எதிராக இருப்பதாக கூறிக் கொள்ளும், தமிழக அரசு மும்முரமாக இருக்கிறது என்பது இதில் குறிப்பிடத் தக்கது. வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசின் விதிகளை அடிபிறழாமல் அப்படியே நகல் எடுத்து மாநில விதிகள் என்ற பெயரில் சுற்றுக்கு விட்டிருக்கிறது, தமிழக அரசு. மோடி அரசின் ஒற்றையாட்சி முறைக்கு எதிராக, கூட்டாட்சிக்காக போராடுவதானால், மோடி அரசின் சட்டத் தொகுப்புகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். மாறாக, அதனை அமுல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது தமிழக அரசு. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறார்கள். ஆனால், இன்று வரையிலும் (எதிர்ப்பைத் தெரிவிக்க ஜூலை 15 கடைசி நாள்) தமிழக தொழிலாளர்களுக்கு அது தமிழில் வழங்கப்படவில்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போலவே தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக அரசு கிடப்பில் தூக்கிப் போட்டுவிட்டது.தொழிலாளர் விரோத புதிய பென்சன் திட்டத்தை ஒழித்து, பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவருவதாக வழங்கப்பட்ட உறுதி மொழியும் காற்றில் பறக்க விடப்பட்டாகி விட்டது. ஸ்டெர்லைட் விவகாரம் கூடங்குளம் அணு உலை விவகாரம் முதல் நியூட்ரினோ ஹைட்ரோகார்பன் திட்டங்கள் வரை புகைந்து கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் பிரச்சனைகள் எதுவும் இன்னும் தீர்க்கப்படவில்லை.மாறாக, ஒரு டிரில்லியன் பொருளாதாரம்,முதலாளிகளுக்கு சலுகைகள் என, எல்லாம் முதலாளிகள் ஆதரவு நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. மோடியின் பிஜேபியாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி, திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சி எதிர்க் கட்சி என அனைவர் மத்தியிலும் ஒரு ஒத்த கருத்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான ஒத்த கருத்து நிலவுகிறது. தொழிலாளர் உரிமைகள், நலன்கள் மறுக்கப்படுகின்றன. மோடி அரசு, தொழிலாளர் மத்தியில் இந்திய அடிமைகளை உருவாக்க எத்தனிக்கிறது என்றால் தொழிலாளர்களை கார்ப்பரேட்டுகளின் தமிழக அடிமைகளாக உருவாக்கிட தமிழக அரசு எத்தனிக்கிறது என்றே சொல்ல முடியும். இல்லையென்றால், மோடியின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை தமிழக அரசு நிராகரித்து இருக்க வேண்டும்.இது தமிழக தொழிலாளர்களின் உரிமையை
மறுப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் கூட்டாட்சி தத்துவத்தை, பெரிதாக கொண்டாடப் படும் சமூக நீதி கொள்கையை நிராகரிப்பதும் ஆகும். தமிழ்நாட்டின், சாதிஒழிப்பு, பகுத்தறிவு, முற்போக்கு மரபுக்கு எதிரான, பார்ப்பனிய, பாஜக கும்பலை முறியடிப்போம்!
தமிழகத்தில் காலூன்றிட பிஜேபி கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. வட இந்தியா போல 'ராமர் அரசியல்' இங்கு எடுபடாது என தெரிந்து கொண்டதால், மக்களின் 'தமிழ்க் கடவுள்' முருகனை பிஜேபி கடவுளாக்கிட வெற்றிவேல், வீரவேல் யாத்திரையை தொடங் கியது. கந்த சஷ்டி கவசத்தில் உள்ள ஆபாசங்களை அகற்றிடாமல், அதைச் சுட்டிக்காட்டிய வீடியோவை உருவாக்கிய “கருப்பர் கூட்டத்தவரை” சிறையில் அடைக்கச் செய்தது. தமிழகத்தின் முற்போக்கு மாண்புகளை, நவீனத்துவத்தை சீர்குலைத்திட பெரியாரை இழிவுபடுத்தியது.மடங்கள், ஆதீனங்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு இந்துக் கோவில் சொத்துக்கள் மீட்பு இயக்கம் என துவங்கி இருக்கிறது. கோவில் நிர்வாகங்களைக் கைப்பற்றி, இதர பிஜேபி ஆளும் மாநிலங்கள் போல, கோவில்களை பிஜேபி அரசியல் பரப்புரை மையங்களாக மாற்றிட எத்தனிக்கிறது. தமிழக அரசும் கூட, தான் இந்துக்களின் நண்பனே என காட்டிக் கொள்வதற்காக 'கோவில் நில

ஆக்கிரமிப்பு அகற்றல்' என்கிற பெயரில், ஏழை எளிய மக்கள் பல்லாண்டுகளாக வசித்து வரும் நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி வருகிறது. அதிமுக போன்ற கட்சிகளும், அவர்களுக்குள் இருக்கும் கோஷ்டி சண்டைகள் காரணமாக, டெல்லிக்கு காவடி தூக்குவதும், தமிழகத்தின் மூலைமுடுக்கு எல்லாம் 'பிஜேபி காவடி' தூக்குவதுமாக இருக்கிறார்கள். மற்றொரு புறம், சங்கிகளின், பிஜேபியின் சனாதன கருத்துக்களை தமிழக ஆளுநர் ரவி வெளிப்ப டையாக பரப்பி வருகிறார். மேலும் அவர், மாநில உரிமைகளை, மாநில அதிகாரங்களை அப்பட்டமாக மீறி வருகிறார். கல்வி நிலையங்களில் நேரடியாக தலையீடு செய்து, இந்துத்துவ வலதுசாரி கருத்துக்களை புகுத்த முயற்சிக்கிறார்.இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்தி லிருந்து பிஜேபியை ஓடஓட விரட்டி அடித்திட வேண்டுமென தமிழக மக்களுக்கு சிபிஅய்எம்எல் அறைகூவல் விடுக்கிறது.

மார்க்சியர்கள், அம்பேத்கரியர்கள், பெரியார் உணர்வாளர்கள் ஒன்றிணைவோம்!

கல்வி, வேலைவாய்ப்பு, நிலம், கூட்டாட்சி, சமூகநீதி, சமத்துவத்துக்காகப் போராடுவோம்!

தமிழகம் பெரியாரின் பகுத்தறிவு பாடம் புகட்டப்பட்ட மண் தான். ஆனால், அதில் பல மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் பகுத்தறிவு பாரம்பரியத்தை, முற்போக்கு விழுமியங்களை சிதைத்திட பிஜேபி சங்கிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் உணர்வாளர்களும், அம்பேத்கர்வாதிகளும் மார்க்சியர்களும் தனித்தனியாக செயல்படுவது தேவைதான். ஆனால், காவி பாசிசத்தை வீழ்த்திட வேண்டுமானால், பிஜேபியை விரட்டிட வேண்டுமானால், மென்மையான மதவாதத்தை கடைபிடிப்பதன் மூலம் அதனைசெய்துவிட முடியாது. இந்துத்வா மத வெறி சக்திகளின் அரங்கிற்குள், அவர்களது கடவுள் நம்பிக்கை அரங்கிற்குள் நுழைந்து நாம் போட்டி போட முடியாது. அப்படி போட்டியிட்டு வென்று விடலாம் என்பது வெறும் பகல் கனவேயன்றி வேறல்ல. அது மட்டுமல்ல, அது முற்போக்கு விழுமியங்களுக்கு, இடதுசாரி கொள்கைகளுக்கு செய்யும் துரோகமாக மாறிவிடக் கூடும். காவி லட்சியங்கள் குறித்த மாயையை நாமே தூபம் போட்டு வளர்ப்ப தாகவும் மாறிவிடக் கூடும். நாத்திகம் மட்டும் பேசினாலும் முடியாது. மாறாக, மார்க்சீயர்களும் அம்பேத்கர்வாதிகளும் பெரியார் உணர்வாளர் களும் கரம் கோர்த்து, தமிழகத்தின் முற்போக்கு விழுமியங்களை, முற்போக்கு மாண்புகளை சிதைத்திட எத்தனிக்கும் காவி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு முயற்சியையும் வீழ்த்திட தீவிரமாக செயல்பட்டாக வேண்டும்.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு,நிலம், கூட்டாட்சி, சமூகநீதி, சமத்துவத்துக்காகப் போராடிட வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல்பூர்வமான கருத்துக்களை, பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பிட கரம் கோர்த்திட வேண்டும். அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒழித்து, மனு ஸ்மிருதியை சட்டமாக்கிடும் முயற்சியை முறியடித்திட வேண்டும். பகத் சிங்கின் வாரிசுகள், அம்பேத்கரின் வாரிசுகள், பெரியாரின் வாரிசுகள் நாமே உரக்க முழங்கிட என வேண்டும்.

கரம் கோர்ப்போம்!
காவி பாசிசத்தை வீழ்த்திடுவோம் ! சுரண்டலற்ற, ஏற்றத்தாழ்வற்ற, மதச் சார்பற்ற,

புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!