அவிகிதொ சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம்

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக் குழுக்கூட்டம் 14.5.2022 அன்று அவிகிதொச கொடியேற்றத்துடன் கந்தர்வக் கோட்டையில் தொடங்கியது. சங்கக் கொடியை சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் ரேவதி, உற்சாகமிக்க முழக்கங்களுக்கிடையே ஏற்றிவைத்தார். சங்கத்தின் மாநிலத்தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம், அண்மையில் மறைந்த மாலெ கட்சித் தலைவர்களுக்கு, தோழர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாகவும் கொரோனா துயரத்தால் மறைந்த வெகுமக்கள், உக்ரைன் மீதான ருஷ்யா தொடுத்துள்ள போரில் பலியானவர் களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் 2 நிமிடம் அமைதி காத்தது. அவிகிதொச புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் வரவேற்புரை யாற்றிதைத் தொடர்ந்து இகக(மாலெ) புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத் தம்பி துவக்கி வைத்து உரையாற்றினார். புரட்சிகர நெடும் பயணத்தில் கிராமப்புறத் தொழிலாளருக்கு மிகச்சிறப்பான பங்குண்டு என்பதை விளக்கிக் கூறியவர் அவிகிதொச பாசிச எதிர்ப்பு சக்தியாக களமாட வேண்டியதன் தேவையை விவரித்துப் பேசினார்.சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.குணசேகரன், உறுப்பினர் சேர்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் தமிழ்நாடு மீது தேசிய செயற்குழுவிற்குள்ள எதிர்பார்ப்பு பற்றியும் பொதுக்குழுவுக்கு எடுத்துக் கூறினார். ஏறத்தாழ 10 மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தேசிய ஊரக வேலைத் திட்டத்திலுள்ள ஊழல், முறைகேடுகள் குறித்தும் தொழிலாளர் ஒற்றுமையை சிதைக்கும் நடை முறை குறித்தும் எடுத்துக் கூறினார்கள். புதிய வேலை அட்டை பெற, தண்ணீர் வரி, வீட்டு வரிகளை செலுத்துவதை நிபந்தனையாக்கிய உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு எதிராக போராடி வேலை அட்டையை இலவசமாக பெற்ற அனுபவத்தை கள்ளக்குரிச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தோழர்கள் பகிர்ந்துகொண்டனர். அசகளத்தூர் ஊராட்சியில் மட்டும் ரூ 10 லட்சத்துக்கு மேல் முறைகேடாக வசூலிப்பது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பணியிடத்தில் பெண்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க போராட்ட பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை திருச்சி மாவட்டம் மணப் பாறை தோழர் பகிர்ந்து கொண்டார். சக தொழிலாளியின் திடீர் இறப்புக்கு சென்ற தொழி லாளருக்கு சம்பளம் தர மறுத்த அதிகாரியோடு வாதாடி சம்பளம் பெற்ற மதுரை அனுபவத்தை வாடிப்பட்டி தோழர்கள் எடுத்துக் கூறினர். காலை 6 மணிக்கே போட்டோ வருகைப் பதிவேடு எடுத்து தொழிலாளரை இழிவுபடுத்தும் அடாவடி நடவடிக்கையை 500க்கு மேற்பட்ட ஒன்றிய அணிதிரட்டல் மூலம் காலை 9 மணி என்று மாற்றி அமைத்த கந்தர்வக்கோட்டை அனுப வத்தை புதுக்கோட்டை தோழர்கள் எடுத்துக் கூறினர். அவிகிதொச தேசிய அளவில் அறிவித்திருந்த ஏப்ரல் 7 கிளர்ச்சி நாளன்று, கடலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி களிலும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தை உடனே துவக்கிடவேண்டுமென்றும் என்எல்சி விரிவாக்கத்துக்கு விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க கூடாதென்றும் கிளர்ச்சி அணிதிரட்டல் நடந்ததை கூறினர்.  தென்காசி மாவட்டத்தில் அதிகம் உள்ள பேரூராட்சிகளில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டுமென்று கோரி 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனுக்களுடன் அணிதிரண்ட அனுபவத்தை நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட பொதுச் செயலாளர் குணசேகரன் பொதுக்குழுவிற்கு கவனப்படுத்தினார். கிராமப்புரங்களிலும் நகர்ப்புரங்களிலும் வேலைவாய்ப்பு கோரும் பிரச்சனை பற்றி எரியும் பிரச்சனையாக இருப்பதை எடுத்துக் கூறினார். புதுக்கோட்டை, தேனி, கள்ளக்குரிச்சி மாவட்டங்களில் முறையே 75,000,50,000 உறுப்பினர்கள் சேர்ப்பதற்குரிய வழிமுறைகள் பற்றி அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் விவரித்தனர்.உறுப்பினர் ரசீதுகள் விரைந்து கிடைக்கச் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர். திருநாவலூர், கந்தர்வக்கோட்டை ஒன்றியங்களில் நடைபெற்ற
500 பேர்களுக்கு மேற்பட்ட அணிதிரட்டலில் பங்குபெற்றதைப் போல, மே-ஜூன் காலத்தில் நடக்க உள்ள இகக(மாலெ) ஒன்றிய அணி திரட்டல்களில் அதிக எண்ணிக்கையில் கிராமப் புறத் தொழிலாளர்களைப் பங்கேற்கச் செய்வ தென்றும் முடிவு செய்யப்பட்டது. உறுப்பினர் ரசீது அச்சடிக்கும் செலவிற்காக புதுக்கோட்டை மாவட்டத் தொகையாக ரூ. 3500அய் தோழர் வளத்தானும் தேனி மாவட்டத் தொகை ரூ 2000 அய் தோழர் கோபாலும் கடலூர் மாவட்டத் தோழர் பாலசுப்பிரமணியன், தஞ்சை மாவட்டத் தோழர் செந்தில் குமார் தலா 1000மும் மாநிலத் தலைவர் பாலசுந்தரத்திடம் வழங்கினர்.
பொதுக்குழுவை வாழ்த்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநிலத்தலைவர் அ.சிம்சன் பேசினார். புரட்சிகர விவசாயப் போராட்டத்தையும் புதிய ஜனநாயக புரட்சியை யும் பிரிக்க முடியாது என்று கூறிய அவர் புரட்சிகர விவசாயப் போராட்டத்திற்கு தோழர் வினோத் மிஸ்ராவின் அளப்பரிய பங்களிப்பை சுட்டிக்காட்டினார். அந்த மரபில் வந்த நாம் கிராமப்புற புரட்சிகர வெகுமக்கள் இயக்கமான அவிகிதொசவை வலுப்படுத்துவதில் பொதுக்குழு வெற்றிபெற வேண்டுமென்றுகூறி வாழ்த்தினார். பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராசன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். லட்சம் உறுப்பினர்களைக் பல கொண்ட அமைப்பாக அவிகிதொசவை கட்டு வது ஒரு புரட்சிகர பணி என்று கூறிய அவர் எண்ணிக்கையின் முக்கியத்துவத்தையும் விளக்கிப் பேசினார். அளவு மாற்றம் பண்பு மாற்றத்துக்கு இட்டுச் செல்லும் என்று கூறிய அவர், எண்ணிக்கையே ஒரு பண்பு என்பதையும் வலியுறுத்திக் கூறினார். மிகப்பெரும் எண்ணிக் கையில் கிராமப்புறத் தொழிலாளர் அவிகிதொச வில் அமைப்பாக்குவது கட்சி அவர்கள் மத்தியில் விரிந்து பரந்த அளவில் செல்வதற்கு வழியேற் படுத்திக் கொடுக்கும் என்பதால் கட்சிப்பணியு மாகும் என்று கூறியவர் இந்தப்பணியில் வெற்றி பெற அவிகிதொச ஒரு ஆற்றல் மிக்க சக்தியாக களப்பணியாற்றிட வேண்டும். இந்தக் களப்பணியில் இகக(மாலெ), அவிகிதொசவுக்கு துணைநிற்கும் என்று கூறி வாழ்த்தினார்.
மே 25, நக்சல்பாரி நாளன்று தமிழ்நாடு முழுவதும் நமக்கான மாவட்டங்கள், ஒன்றியங்களில் ஊராட்சிகளில் உறுப்பினர் சேர்ப்பை இயக்கமாக நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. அந்த ஒரு நாளில் அதிக ஒன்றியங்களில் அதிக ஊராட்சிகளில் குறைந்தது 50 முதல் 75 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இப்போது உறுப்பினர் சேர்ப்புமூலம் அமைப்பாக்கப்படும் தேசிய ஊரக வேலைத்திட்ட உரிமைச் சங்கம், இந்த திட்டத்தை சீர்குலைக்க சதிசெய்யும் மோடிஎதிர்ப்பு அரசியல் சக்தியாக எழுந்திட வேண்டுமென்றும் முடிவுசெய்யப்பட்டது. உறுப்பினர் ஒருவருக்கு ரூ 5 உறுப்பினர் கட்டணமாக வசூலிக்கப்படும். இதில் ரூ.1,2023 பிப்ரவரியில் பாட்னாவில் நடைபெற உள்ள இகக(மாலெ) 11ஆவது காங்கிரசுக்கு நிதியாக அளிப்பது என்றும் அறிவிக்கப்பட்டது.