ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரியும் உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் இடதுசாரிக் கட்சிகள், விசிக நாடு தழுவிய பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்
          ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் குறிப்பாக பெட்ரோல், டீசல், எரிவாயுக்கான வரிகளை ரத்து செய்யக்கோரியும் விண்ணை முட்டும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் ரேசன் கடைகளில் வழங்கிடக் கோரியும் அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் வருமான வரி கட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ.7500 நேரடியாக வழங்கிடக் கோரியும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இகக(மாலெ), இகக(மா), இகக உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் மே 25 – 31 வரை பிரச்சார இயத்திற்கும் ஆர்ப்பாட்டம் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தன. அக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சேர்ந்து பிரச்சாரம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. மாநிலம் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டைத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன், இகக (மா) மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், இகக மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.