சிறிலங்காவிடமிருந்து இந்தியாவுக்கான பாடங்கள்: விலைவாசியைக் கட்டுப்படுத்து, வேலைகொடு, மதவாத சதிகளை நிறுத்து!

இந்தியாவின் தெற்கிலுள்ள அண்டை நாடான சிறிலங்கா பயங்கரமான பொருளாதார நெருக்கடியின் கீழ் உழன்று கொண்டிருக்கிறது. இந்தத் தீவு நாட்டின் நொறுக்கும் கடன் சுமை அந்த நாட்டை, விண்ணைமுட்டும் விலைவாசியாலும், இன்றியமையாத தேவைகளின் பெரு மளவிலான பற்றாக்குறையாலும் சுட்டிக் காட்டப்படுகிற முன்னெப்போதும் இல்லாத பெருங்குழப்பத்தில் தள்ளிவிட்டு விட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக நாட்டின் அதிபராகவும், தலைமை அமைச்சராகவும் ஆண்டு கொண்டிருக்கும் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக சிறிலங்கா மக்கள் கிளர்ந்தெழுந்து, அவர்களது ஆட்சிக்கு முடிவுகட்ட முனைகிறார்கள். கோத்தபய ராஜபக்சே தனது சகோதரர் மகிந்தாவைத் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்துவிட்டு தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள, கையறு நிலையில், தன்னால் இயன்றதையெல்லாம் செய்ய முயல்கிறார். ஆனால், மக்களின் கொந்தளிப்புத் தணியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பொருளாதாரத்தை சரியாகக் கையாளாததற்கான விலையை சிறிலங்கா கொடுத்துக் கொண்டிருப்பதாக மோடி அரசாங்கம் நம்மிடம் சொல்கிறது. ஆனால், இந்தியப் பொருளாதாரமும் நெருக்கடியின் அறிகுறிகளை காட்டிக் கொண்டிருப்பதை நம்மிடம் சொல்லாமல் மூடி மறைக்கப் பார்க்கிறது. மொத்தவிற்பனை விலைக் குறியீடுகள் கடந்த பதின்மூன்று மாதங்களாகத் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் அதிகரித்துக் கொண்டுள்ளது. ஏப்ரலில் அது 15 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது; 1991 செப்டம்பரிலிருந்து இதுவே மிகமிக அதிக பட்ச உயர்வாகும். விலைவாசி உயர்வுடன் கூடவே வேலைகள் மறைந்து வருவதாலும் வருமானம் வீழ்ந்து போவதாலும் எளிய மக்கள் கடினமான தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ரூபாய் மதிப்பு மிகமிகதாழ்ந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்து விட்டது; இறக்குமதியாலும், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதாலும் இடைவிடாது ஏறிவரும் சுமைதான் இதற்கான காரணமாகும்.
(சிறிலங்காவின்) கடன் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வீதம் 100%த்தை தாண்டி விட்டது. வேறு சொற்களில் கூறினால், சிறிலங்கா உற்பத்தி செய்வதைக் காட்டிலும் கூடுதலாகக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. சிறிலங்கா முதல் முறையாகக் கடனை திரும்ப செலுத்தத் தவறிவிட்டது. இந்தியாவைப் பொறுத்த வரையில், கடன் உள்நாட்டு உற்பத்திவிகிதம் அதனைகாட்டிலும் கொஞ்சம் குறைவாக, 85%க்கும் 90%க்கும் இடையில் நிலை கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கம், 2014ல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து பார்த்தால் அடுத்த மார்ச்சில், இந்தியாவின் மொத்தக்கடனை 100 லட்சம் கோடியாக ஆக்கி விடுமென்று தெரிகிறது. இந்தியாவுக்கு ஒரே அதிர்ச்சித் தாங்கியாக இருப்பது அதன் அன்னியச்செலாவணிக் கையிருப்பாகும்; ஆனால், அதுவும்கூட ஏற்கனவே சரியத் துவங்கிவிட்டது. ருஷ்யா, உக்ரைன்மீது போர் தொடுத்ததிலிருந்து, இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பு, ஏற்கனவே, 36 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு காலியாகிவிட்டது; இதனால், ஒட்டு மொத்த இருப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கீழே போய்விட்டது. இந்த அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்டு அதிகரித்துக் கொண்டிருக்கும் வர்த்தகப் பற்றாக்குறைக்கு செலவிட்டாகவேண்டும்; கூடுதலாக, இந்த செப்டம்பர் வாக்கில், 256 பில்லியன் டாலர் கடனை செலுத்துவதற்கும் இந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பை பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால், அந்நியச் செலாவணி கையிருப்பு அபாயகரமான மட்டத்துக்குக் கீழேபோய்விடும்.
சிறிலங்காவின் தனிநபர் உள்நாட்டு மொத்த உற்பத்தி, இந்திய அளவைப் போல இன்றளவும் இரண்டுமடங்காக உள்ளது. சமூகப்பொருளாதார வளர்ச்சி குறியீடுகளில் பெரும்பாலானவற்றைக் கணக்கிலெடுத்தால், சிறிலங்கா இந்தியாவைக் காட்டிலும் முன்னேறிய ஒன்றாகவே உள்ளது. இன்றைக்கு சிறிலங்கா இத்தகையப் பெருமளவிலான குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டதென்றால், அது பெருந்தொற்றாலும் மேலும் சிக்கலாக்கி விட்ட உக்ரைன் போராலும் சுண்டிவிடப்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவால் ஏற்பட்ட தில்லை. மாறாக, சிறுவீத உள்நாட்டு உற்பத்தியையும், சாமான்ய மக்களின் நுகர்வுத் தேவைகளையும் ஆண்டுக்கணக்கில் புறக்கணித்துவிட்டு, பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக பெருமளவில் கடன்களை வாங்கியதும்; கார்ப்பரேட் நிறுவன  ஆதரவு, வல்லரசு ஆதரவு, மக்கள் விரோத புதியதாராளவாத பொருளாதார மாதிரிக்கான அடித்தளமாக கொண்டவையாகும். தெற்காசியாவிலேயே முதலாவதாகப் புதிய தாராளவாதத்தை ஏற்றுக் கொண்ட நாடு சிறிலங்காதான்.

இந்தியாவும் அதையொத்த பாதையிலேயே சிக்கிக்கொண்டுள்ளது. ஊதிப் பெரிதாக்கப்பட்ட பெரியதிட்டங்களின் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்ட திடீர்த்தாக்குதலும், வெறுமையான மிகைப்படுத்தல்களும், மோடியின் வளர்ச்சி மாதிரியை வரையறுக்கின்றன. ஆனால், யதார்த்தத்தில், பலபத்தாண்டுகளாக மக்களின் பணத்தால் கட்டிஎழுப்பப்பட்ட இப்போதிருக்கும் பொதுச் சொத்துக்கள், அதானியாலும் அம்பானி யாலும் அற்பதொகைக்கு வளைத்துப் போடப் படும் அதேவேளையில், மிகச்சில புதிய சொத்துக்களே உருவாக்கப்படுகின்றன. தலையாய சொத்துகளும், உள்கட்டமைப்பும் தெரிவு செய்யப்பட்ட வேண்டப்பட்டவர்களின் கைகளில் குவிந்து கொண்டிருப்பதால், நடுத்தர, சிறிய தொழில் துறைகளில் பெரும்பகுதி அழிக்கப்படுகிறது. இதனால், தொழில்துறை வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் ஆழமறியாத படுகுழிக்குள்ளே தள்ளப்படுகின்றன. நாடாளுமன்றத்தில், 2021 டிசம்பரில் அரசாங்கமே ஒப்புக்கொண்டபடி, 2015 முதல், மொத்தம் 8,81,254 இந்தியர்கள் தம் குடியுரிமையை விட்டுவிட்டனர். ஏராளமான சொத்து மதிப்பை உரிமையாக வைத்துள்ள தனிநபர்களும் இதில் அடங்குவர். இந்த பெரிய அளவிலான வெளியேற்றத்துக்கு, மதவாத வெறுப்பு வளர்ந்து கொண்டிருப்பதோடு சேர்ந்து உண்டாகும் பொருளாதார மந்தச் சூழலும் காரணமாகும். இது, மோடி ஆட்சியின் முதன்மையான சாதனைகளில் ஒன்றாகும்.

     பொதுமுடக்கத்தின்போதும், பெருந்தொற்றுக் காலத்திலும் மற்ற ஒவ்வொரு துறையும் வளர்ச்சி இன்றி நின்றுவிட்டன. அப்போது, வேளாண்துறை மட்டுமே பெருந்தொழில் நிறுவனங்களின் சுருக்குக்கயிற்றிலிருந்து தப்பித்து கொஞ்சம் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியைக் காட்டியது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பு, விவசாயத்தை முழுமையும் பெருந்தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிற மூன்று வேளாண் சட்டங்களை நிர்ப்பந்தித்தது. ஆனாலும், பெருந்தொழில் நிறுவன நலன்களுக்குச் சாதகமாக விவசாயத்தை மறுகட்டமைப்புக்குள்ளாக்குவது தளராமல் தொடர்ந்து வருகிறது. உணவுத்தானியங்களை விளைவிப்பதிலிருந்து விலகி, பணப்பயிர்களை விளைவிப்பதை நோக்கிய அஞ்சத்தக்க திருப்பம் நடைபெற்று வருகிறது. இதனால், இந்தியாவின் உணவுப்பாதுகாப்பு பாரதூரமான அச்சுறுத்தலுக்குள்ளது. ஆளாகியிருக்கிறது.

    இராஜபக்சே குடும்பம் இனிமேலும் சிறிலங்கா மக்களைத் தங்கள் விருப்பப்படி ஆட்டிப்படைக்க முடியாது என்பதும், சிறிலங்கா வின் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான வன்முறை, மற்றும் தொல்லை கொடுக்கும் பரப்புரைகளின் வழியாக எளியமக்களின் உயிர்வாழ்க்கை, தேவைகள், உரிமைகள் ஆகிய சிக்கல்களிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பமுடியாது என்பதும் மக்கள் எழுச்சியின் பொருளாகும். இந்தியாவில் உள்ள அரசாங்கம் எதையும் மறுக்கும் மனநிலையில் வாழ்ந்துவருகிறது; இதுமட்டுமின்றி, மக்களின் மீது, பிரிவினை மற்றும் அழிவுவாத வேலைத் திட்டத்தைத் திணிப்பதன் வாயிலாக மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறது. பொருளாதாரம் மிகவேகமாகச் சீரழிகிறது. உணவு, எரிபொருள் விலைகளும், பிறஅடிப்படையான இன்றியமையாத பொருட்களின் விலைகளும் கூரையைப் பிய்த்துக் கொண்டு உயரப்பறக்கின்றன. ஆனால், அரசாங்கமோ ஏழைகளின் வீடுகளை அதிலும் குறிப்பாக இஸ்லாமியர் வீடுகளை எந்திரங்களைக் கொண்டு இடிப்பதிலும், அவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதிலும் மும்முரமாக
உள்ளது. (சிவலிங்கம் போன்றவற்றை) மீண்டும் கண்டுபிடிப்பது, கோவில்களைக் கட்டுவது என்ற பெயரால் பள்ளிவாசல்களையும் நினைவுச் சின்னங்களையும் தோண்டிக் கொண்டிருக்கிறது.

மக்களை பிளவுபடுத்தும் அழிவுகரமான இந்தப் பரப்புரை இயக்கம் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்ததிலிருந்து அச்சந்தரும் வகையில் உச்சமடைந்து வருகிறது. திருவிழாக்கள், மதவாத அணிதிரட்டல்கள் எனும் கண்கொள்ளாக் காட்சிகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு, மாநிலமாக இஸ்லாமியர்களின் வீடுகளும் கடைகளும் இடிக்கப்படுகின்றன. காசி, மதுராவிலிருந்து தாஜ்மகால், குதுப்மினார் விலக்கிக் கொள்ளுமாறு அரசாங்கத்தைவரையிலும் சங்கப்படையினர் வரலாற்றை மாற்றி யெழுதும் (கடத்தும்) முயற்சிகளில் இறங்கியுள்ளன. முக்காடு (ஹிஜாப்) அணிந்த இஸ்லாமியப் பெண்கள் உயர் கல்விப் பெறுவதை மறுத்து விட்ட பிறகு, இப்போது, பஜ்ரங்தள குண்டர்கள் கர்நாடக மாநிலக் கல்வி நிலையங் களில் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிமுகாம் நடத்த அந்த மாநில அரசாங்கம் அனுமதித்துள்ளது.

நமது ஜனநாயகக் குடியரசில், அரசமைப்புச் சட்ட விதிகளின் காவலனாக இருக்க வேண்டிய நீதித்துறை, இந்திய ஜனநாயகத்தின் நெருக்கடியான கட்டத்தில், நிர்வாகத்தின் பக்கம் சாய்ந்து போவதாகவேத் தோன்றுகிறது. எனவே, இப்போது பொறுப்பு, ஒரு அரசமைப்புச் சட்டத்தை ஏற்று, இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட மக்கள் ஜனநாயக குடியரசாக ஏற்றுக்கொண்ட, எல்லாவிதமான அசாதாரண நிலமைகளிலும் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய "இந்தியமக்களாகிய நம்மிடமே" உள்ளது. விலைவாசியைக் கட்டுப் படுத்து, வேலைகொடு, இல்லையேல் பதவி விலகு என்று அரசாங்கத்திடம் உரத்தும் தெளிவாகவும் சொல்லவேண்டிய நேரமிது. ஒரு கற்பனையான கடந்த காலத்தைத் தேவையின்றி கிளறிவிட்டு, நிகழ்காலத்தில் நம்மைக் காயப்படுத்தும் சதிக்கு உறுதியான மறுப்பு சொல்ல வேண்டிய நேரம் இது.

              லிபரேஷன் ஜூன் 2022: தலையங்கம் தமிழாக்கம்:

                                                         பேரா.      கோச்சடை