புகழ்மிக்க நக்சல்பாரி எழுச்சியின் 55வது ஆண்டை
நினைவில்
கொள்வோம்
தொடர்ச்சியாக நிகழ்ந்த வெகுமக்களின் எழுச்சிகளால், நவீன இந்திய வரலாறு மீண்டும் மீண்டும் குறுக்கீடுகளுக்கு உள்ளானது.
இந்தியாவின் விடுதலைக்கான நீண்ட, நெடிய போராட்டம், ஒடுக்கப்பட்ட இந்தியர்களின் பல்வேறு பிரிவினர்களின் எழுச்சிகளால் உந்தித் தள்ளப்பட்டது. அன்னிய நாட்டிலிருந்து வந்த காலனித்துவ ஆட்சியாளர்கள் மட்டுமே இந்திய மக்களை ஒடுக்கவில்லை; சாதி அமைப்பு, ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவ அதிகாரம், உள்ளூர் மன்னராட்சிகள், அரச குடும்பத்தினர் போன்ற இந்தியர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய உள்நாட்டு சமூகக் கட்டமைப்பாலும் இந்திய மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். முதல் விடுதலைப் போர் (1857-59) உள்ளிட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் கிளர்ச்சிகள், ஒத்துழையாமை மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற காந்தியின் தலைமையின் கீழ் நடந்த மாபெரும் வெகுமக்கள் விழிப்புணர்வு, 1940 களில் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையிலான தெபாகா, தெலுங்கானா போன்ற விவசாயிகளின் எழுச்சி என எதைப் பற்றிப் பேசினாலும், அவற்றில் நிலப்பிரபுக்களாலும் கந்துவட்டிக்காரர்களாலும், காலனித்துவ ஆட்சியாளர்களாலும் கொள்ளையடிக்கப்பட்ட பழங்குடி மக்களின், ஏழை விவசாயிகளின் கிளர்ச்சிகளே மக்கள் எதிர்ப்பின்மைய நிகழ்வாக இருந்தன என்பது புரியும்.
உண்மையான சமத்துவம், விடுதலை, நீதி என்ற கனவை நனவாக்குவதற்காக நிகழ்ந்த இந்தியாவின் போராட்டத்தால், 1947 க்குப் பிறகும் எழுச்சிகள் தொடர்ந்த வண்ணமிருந்தன. மே 25, 1967 அன்று நக்சல்பாரியில் நிகழ்ந்த நிலமற்ற விவசாயிகளின், ஒடுக்கப்பட்ட தேயிலை தொழிலாளர்களின் எழுச்சி அத்தகையதொரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள், இளைஞர்கள் இடையே இது ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனை நசுக்க அரசு ஒரு உண்மையான போரைக் கட்டவிழ்த்து விட்டது. அரசின் இன்றைய ஆயுதக் களஞ்சியத்திற்கு காலனிய காலத்திலிருந்து கிடைத்த, கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படும் ஆயுதங்களான கொடூரமான சட்டங்கள், காவல்துறையின் வன்முறை, நீதித்துறைக்கு புறம்பான பயங்கரவாதம் ஆகிய வற்றுக்கு, 1970களின் ஆரம்பத்தில் நிகழ்ந்த அரசு ஒடுக்குமுறை என்னும் ஆய்வகத்தில் முதல் பெரும் உத்வேகம் கிடைத்தது. என்றாலும்கூட, 55 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அந்த வரலாற்று எழுச்சியிலிருந்து துவங்கிய நக்சல் பாரியின் மரபு, ஒவ்வொரு நாளும் வளர்ந்து, ஆழமடைந்து, பரவி வருகிறது.
இந்த எழுச்சி, 22 ஏப்ரல், 1969 இல் சிபிஐ (எம்எல்) உருவாவதற்கு வழிவகுத்தது, மேலும், கம்யூனிஸ்டுகளை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த சுஹார்டோ காலத்து இந்தோனேசியாவின் சுவடுகளைக் கொண்டிருந்த, மிக அதிக அளவிலான நீதித்துறைக்கு புறம்பான வன் முறைகள், படுகொலைகள் உள்ளிட்ட, இந்திய அரசின் முழு வலிமையையும் கோபத்தையும் அப்போதே பிறந்த, புதிய கட்சி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனபோதிலும் கட்சி அதனை எதிர்கொள்வதில் வெற்றி பெற்றது. இது, இந்தியாவில் கம்யூனிச இயக்கத்திற்கு பெரும் ஆற்றலை வழங்கி, அதனை புரட்சிகரமானதாக்கியது. ஏறக்குறைய இதேபோன்ற பரந்த அளவிலான எதிர்ப்புக் குரல்களைக் குறிவைத்துத் தாக்குவதற்காக, மோடி ஆட்சியால் மேற்கொள் ளப்படும் 'நகர்ப்புற நக்சல்' என்ற புதிய வார்த்தையின் கண்மூடித் தனமான பயன்பாடு, நக்சல்பாரியின் சக்திக்கும் அதன் மீண்டெழும் தன்மைக்கும் சாட்சியமளிக்கிறது.
நக்சல்பாரியைக் குறித்த பிரபல புராணக் கதைகளுக்கு மாற்றாக, நக்சல்பாரி என்பது இந்திய மண்ணில் சீனப் புரட்சியின் பாதையைப் பின்பற்ற முயற்சிக்கும் சில சிதறிப்போன புரட்சியாளர்களின் அராஜகவாத, சாகசவாத செயல் அல்ல. உண்மையிலேயே அப்படி இருந்திருந்தால் அது ஒரு நீர்குமிழி போல சில காலமே இருந்திருக்கும். ஆனால், அநீதிக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக கலகம் நிகழும் இந்தியாவின் மரபில் வேர் கொண்ட வெகுமக்கள் எழுச்சியே நக்சல்பாரியாகும். இந்திய விடுதலை இயக்கத்தின் தீப்பொறியையும் ஆற்றலையும் அது கொண்டிருந்தது. மேலும் அதன் சமூக மாற்றத்திற்கான ஆற்றலையும் மரபையும் நனவாக்க எடுக்கப்பட்ட ஒரு துணிச்சலான, புகழ்மிக்க முயற்சியுமாகும்.

இது, கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில், தெபாகா மற்றும் தெலுங்கானாவின் உணர்வை மீண்டெழ செய்வதற்கான ஒரு தீர்மானகரமான முயற்சியாகும், மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் எதிர்பார்ப்புக்கு கிடைத்த பெரும் ஏமாற்றத்தின் காரணமாக நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் (1967 தேர்தலில் காங்கிரஸ் ஒன்பது மாநிலங்களை இழந்தது) முதல் பேரலையை ஒரு தீர்மானகரமான புரட்சிகர விருப்பமாக மாற்றுவதற்கான முயற்சியுமாகும்.
தோழர் சாரு மஜூம்தார் தெபாகா இயக்கத்தின் அர்ப்பணிப்புமிக்க அமைப்பாளராக இருந்தார்.
மேலும் அவர், தெபாகா நாட்களில் இருந்து பெற்று வளர்த்த, தனது அனைத்து புரட்சிகர அனுபவங்களையும் நுண்ணறிவையும் கொண்டு, தனது தோழர்களுடனும் டோர்ஸ், டார்ஜிலிங் மலைப் பகுதி மற்றும் வடக்கு வங்காளத்தின் போராடும் மக்களுடனும் இணைந்து நக்சல்பாரி எழுச்சியைக் கட்டியெழுப்பினார். சிபிஐ(எம்எல்) கட்சியின் உதயமும் அதன் விரைவான பரவலும் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆழமான வேர்களையும் அதன் வேர்க்கால் மட்டத்திலான ஈர்ப்பையும் வலிமையையும் காட்டியது.
1970 களில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை காலத்திலிருந்து பாசிசத் தாக்குதல் மிகுந்த தற்போதைய ஆட்சி வரையிலும் தனது அடித்தளத்தை தக்கவைத்துக்கொள்வதிலும்
அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதிலும் இயக்கம் வெற்றிபெற்ற விதம் அதன் உள்ளார்ந்த வலிமையையும் மீண்டெழும் தன்மையையும் காட்டுகிறது.
நக்சல்பாரியின் 55 வது ஆண்டு நினைவு நாளில், இந்த இயக்கத்தின் அனைத்து தியாகிகளுக்கும், ஒரு மகத்தான நோக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்கள், செயல்வீரர்களுக்கும், இந்தியா முழுவதும் அதன் செய்தியை பரப்பிய அனைத்து கவிஞர்கள், பாடகர்கள், கதைஞர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த மரியாதையை நாங்கள் செலுத்துகிறோம். மிகப் பெரும் அடக்குமுறைகளைத் தாங்கிக் கொண்டு, தங்களின் தைரியத்தாலும் ஆற்றலாலும் அன்பாலும் இயக்கத்தை நிலைநிறுத்திய, போராட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் ஆழ்ந்த மரியாதை செலுத்துகிறோம். அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பினுடைய தணியாத உணர்வின் உருவகமாக நக்சல்பாரி மாறியுள்ளது. அதிகார வெறி பிடித்த ஆட்சியாளர்களின் ஆணவத்துக்கும் முரட்டுத்தனத்திற்கும் முன்னால், போராடும் மக்கள் பெருந்திரளின் புரட்சிகரமான புன்னகை அது. போராட்டம் முடிந்து விடவில்லை. எனினும் மக்களுக்கே இறுதி வெற்றி. நக்சல்பாரிக்கு செவ்வணக்கம்!

தமிழாக்கம் – செந்தில்