அக்னி பாதை: குறைந்த திட்டம், அதிக ஊழல்
                                                                              நிர்பயி
அக்னி பாதை திட்டம் என்றால் என்ன?
இந்திய ராணுவத்திற்கு புதிதாக ஆளெடுப் பதற்கான திட்டம் தான் அக்னி பாதை திட்டம் எனப்படுகிறது. பதினேழரை வயதில் இருந்து 21 வயது வரை உள்ள நபர்களை, நான்கு வருட காலத்திற்கு ராணுவத்தில் சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியா முழுவதில் இருந்தும் அனைத்து தரப்பினரிலிருந்தும் ஆள் எடுக்கப்படுவார்கள். இவர்களில் 25 சதவீதத்தினர் நான்கு வருடங்கள் கழித்து நிரந்தர வேலை வாய்ப்பை பெறுவார்கள். மீதமுள்ள 75 சதவீதத்தினர் திரும்ப வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள். பல்வேறு படை பிரிவுகளுக்கு வீரர்களை தேர்ந்து எடுப்பதற்காக ஏற்கனவே இருக்கும் ஆளெடுப்பு மாதிரியை ஒட்டுமொத்தமாக இந்த திட்டம் மாற்றியமைக்கிறது. இந்தத் திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அக்னி வீரர் எனும் பட்டம் வழங்கப்படும். மேலும், ஒரு மாதத்திற்கு சம்பளமாக ரூபாய் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வழங்கப்படும். நான்கு வருட பணி முடியும் போது வரிவிலக்கப்பட்ட 11. 71 லட்சம் ரூபாய்கள் சேவை நிதி தொகுப்பு பயனாக வழங்கப்படும். இந்த தொகுப்பு பயனுக்கான பங்களிப்பாக வீரர்களின் ஊதியத்தில் இருந்து 30% மும் அரசாங்கத்தின் பங்களிப்பாக 30% மும் இருக்கும். 48 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டம் அவர்களுக்கு கிடைக்கும். அக்னி வீரர் என்ற திறன் சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் வேறு பணிகளுக்கு செல்ல உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மூன்று வருடங்கள் அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு கடன் உதவியாக ரூபாய் 18.2 லட்சம் பெற்றுக்கொள்ளலாம். என்றாலும் அவர்களுக்கு எந்தவிதமான ஓய்வூதியங்களும் முன்னாள் படை வீரர் என்ற தகுதியும் வழங்கப்படாது. ஒரே வீரர்களுக்கு வேறுபட்ட பலன்கள் கிடைக்கும் என்பதாகவே இதற்கு அர்த்தமாகும். ஒரே பதவிக்கு ஒரே மாதிரி ஓய்வூதியம் கோரிய ராணுவத்தினருக்கு, தற்போது, பதவியும் கிடையாது ஓய்வூதியமும் கிடையாது என்பதே கிடைத்துள்ளது. மேலும், நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு வேலை தேட வேண்டும் என்ற நெருக்கடியும் கிடைத்துள்ளது.
ஆளெடுக்கும் முறையில் கொண்டுவரப் பட்டுள்ள இந்த தீவிர மாற்றத்திற்கு அரசாங்கம் கூறும் நியாயப்படுத்தல் என்ன?
இள வயதுடையவர்களையும் துடிப்பானவர்களையும் இராணுவத்தில் புதிதாக சேர்த்துக் கொண்டே இருப்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சராசரி வயது 32 ஆண்டுகள் என இருப்பதை 4-5 ஆண்டுகளாக இந்தத் திட்டம் குறைத்துவிடும் என நம்பப்படுகிறது. இதன் மற்றுமொரு முக்கிய இலக்கு என்பது ஒட்டுமொத்த ஓய்வூதிய சுமையையும் குறைப்பதாகும். ஒட்டுமொத்த பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் 28% ஓய்வூதியத்திற்கு செலவிடப்படுகிறது. 5.2 லட்சம் கோடியில் 1.2 லட்சம் கோடி ஓய்வூதியத்திற்கும் 2.3 லட்சம் கோடி பராமரிப்பு செலவினங்களுக்கும் 1.5 லட்சம் கோடி முதலீட்டு செலவினங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் ஒவ்வொரு 100 பேர்களுக்கு இணையாக 170 ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்கள். எனவே ஊதிப் பெருத்து விட்ட ஓய்வூதியத்திற்கான நிதியை குறைப்பது இதனுடைய இலக்கு ஆகும். அதே நேரத்தில், ஆயுதப் படையை நவீன மயமாக்குவதும் ஆகும். எப்படி? ஆயுதப் படையினரிலிருந்து தொழில் நுட்பத்தை (ட்ரோன்கள் போன்ற) நோக்கி கவனம் குவித்தலை மாற்றுவது என்பதாகும். முதலீட்டுக்கான செலவினத்தை அதிகரிப்பதன் மூலம் இதனை செய்து முடிக்கலாம் என கூறப்படுகிறது.
படையணியில் ஒரே மாதிரி பணி புரியும் அரசாங்கம் கூறும் நியாயப்படுத்தல்கள் அறிவுப்பூர்வமாக உள்ளதா? இல்லையா? சராசரி வயது 4 ஆண்டுகளாக குறைக்கப்படுவதன் மூலம் அது ராணுவத்தின் துடிப்பாற்றலை அதிகப்படுத்துமா? நம்முடைய ஆயுதப்படையினர் தற்போது துடிப்பானவர்களாகவும் . தகுதியானவர்களாகவும் இல்லை என்று இந்த அரசாங்கம் இதன் மூலம் கூற விரும்புகிறதா? இதன் மூலம் சிறிதளவு முன்னேற்றம் கிடைக்கலாம்; எதுவுமே கிடைக்காமலும் போகலாம்.
வயது குறித்த விவாதம் அறிவுக்குகந்ததாக இல்லவே இல்லை. நான்கு வருட துடிப்பாற்றல் எந்த ஒரு அதிகரித்த திறனையும் கொண்டு வரப் போவதில்லை. அதே நேரத்தில் நான்கு வருட குறைவான அனுபவம் கண்டிப்பாக குறைத்து விடும். செயல்திறனை ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படும் இந்த அக்னி வீரர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. இப்படியான கருத்து அபத்தமானது என்று சொல்வதே மிகச் சரியானது. ஆறு பயிற்சியும் நான்கு வருட மாத பணிபுரிந்த அனுபவமும் கொண்ட அக்னி வீரர்களை ஒப்பிடும்போது, பல ஆண்டுகள் பயிற்சி பெற்றும் பணி புரிந்த அனுபவமும் கொண்ட ராணுவ வீரர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஒரு நல்ல வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. முதலாவதாக, ஒரு சிறு பகுதியினரே மீண்டும் வேலை பெறுகின்றனர்; இரண்டாவதாக, அப்படி அவர்கள் பெறும் அந்த வேலையோ படு மோசமானதாக இருக்கிறது. அனேகமாக அவர்களுக்கு ஊர்க்காவல் படையினராகத்தான் வேலை கிடைக்கிறது. அனுபவம் வாய்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் "அக்னி வீரர்கள்" போன்ற அனுபவம் குறைந்தவர்களின் நிலைமை என்னவாகும்?
மத்திய ஆயுத காவல் படையினருக்கு புதிதாக ஆள் எடுக்கும் போது இந்த அக்னி வீரர்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால், மத்திய ஆயுத காவல் படையினருக்கு புதிதாக ஆள் எடுப்பதில் அரசாங்கத்தின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2020 இல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கும்போது வெறும் பத்தாயிரம் பேர்களே புதிதாக எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 2017 இல் இருந்து மத்திய ஆயுத காவல் படையினருக்கு ஆள் எடுப்பதில் 80 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆக, அரசாங்கத்தின் பகட்டான கூற்றுக்களை இளைஞர்கள் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது பற்றி ஆச்சரியப்பட ஏதும் இல்லை நாம் 25% மற்றும் 75% பற்றியும் பேசுவோம். லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா, இந்தத் திட்டம் சமூகத்தை ராணுவ மயமாக்குவதை நோக்கி இட்டுச் செல்லும் என்கிறார். அதற்கு அனேக ஆதாரங்கள் உள்ளன. இது எவ்வாறு நிகழும் என்பதை நாம் புரிந்து கொள்வோம். ஒவ்வொரு வருடமும் எடுக்கப்படும் நபர்களில் 75% பேர் துப்பாக்கிகளை உபயோகிப்பதற்கு பயிற்சி பெறுவார்கள். அதேநேரத்தில், அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு குறுகி விடுவதால் வெறுப்புக்கும் ஆளாவார்கள். அவர்களுடைய பருவ வாழ்வின் மிகவும் துவக்க ஆண்டுகளை (17-21) ராணுவத்தில் சேர்வதற்காக தயார் செய்வதிலும் பணியாற்றுவதிலும் செலவிடுவதால், அவர்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அரிதாகிவிடும். ராணுவத்தில் வேலை பெறுவதற்காக குறைந்தபட்சம் நான்கு வருடங்கள் பயிற்சி செய்வதாக பல்வேறு இளைஞர்கள் தெரிவிக்கிறார்கள். நான்கு வருடங்கள் மட்டுமேயான வேலைக்கு, நான்கு வருடங்கள் பயிற்சி என்பது மிகவும் அநியாயம் அன்றி வேறல்ல. இந்த 75% வெறுப்புக்குள்ளான முன்னாள் படைவீரர்கள் வன்முறையில் ஈடுபடலாம். 25 சதவீதத்தினரில் ஒருவராக வேண்டுமென நிலவும் போட்டோ போட்டியில் பங்கு பெறுவதால் அக்னி வீரர்களுக்கு இடையே ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருக்காது. அனைத்தையும் தாண்டி இந்த 25%தினரை யார் தேர்ந்தெடுப்பது? எந்த ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாத கமாண்டிங் அதிகாரி. இதுவும் கூட, நிர்வாக அல்லது வேறுபல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லும். ராணுவ வீரர்களை விட்டுவிட்டு தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை கொள்வதை குறித்தும் நாம் விவாதிக்க வேண்டி உள்ளது. முதலாவதாக, பராமரிப்பு செலவினங்களுக்கு எதிராக முதலீட்டு செலவினங்களை நாம் நிறுத்த முடியாது. (பள்ளிகள் இயங்க வேண்டுமென்றால் பள்ளிகளுக்கான உள்கட்டுமானங்களும் ஆசிரியர்களும் உங்களுக்கு தேவை) அது போலவே, தொழில்நுட்பத்திற்கு எதிராக படை வீரர்களையும் நிறுத்த முடியாது. திறன் மிகுந்த அனுபவம் வாய்ந்த படையினர், எந்திரங்களை இயக்குவதற்காக உங்களுக்கு தேவை. மேலும், படைவீரர்களுக்கு மாற்றாக தொழில்நுட்பத்தை
உபயோகிக்க முடியாது என்பதை சமீபத்திய போர்கள் காண்பித்துள்ளன. "டூர் ஆஃப் டூட்டி த கிண்டர் கார்டன் ஆர்மி?" என்ற தனது கட்டுரையில் லெப்டினன்ட் ஜெனரல் பி ஆர் சங்கர், இந்த புதிய ஆளெடுக்கும் முறை சிக்கலான எந்திரங்களை இயக்கப் போகும் அனுபவமற்ற படைவீரர்களின் நீண்ட அணி வரிசையை எவ்வாறு உருவாக்கும் என விவரிக்கிறார். அவருடைய கணித அடிப்படை யிலான மதிப்பிடுதலின்படி அனுபவம் மற்றும் இளமையின் விகிதாச்சாரம் என்பது 70:30 என்பதாகவே இருக்க வேண்டும். அதற்கு குறைவாக நீர்த்துப் போக அனுமதிக்கக் கூடாது. அரசாங்கத்தால் முன் வைக்கப்பட்டுள்ள 50:50 என்ற விகிதாச்சாரம் ஒரு பேரிடராகவே அமையும். மேலும், அரைகுறை பயிற்சி பெற்ற படை வீரர்களின் அணி வரிசை உருவாக வழி வகுக்கும். இதனால், நாட்டின் பாதுகாப்பு, அபாயத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.
மேலும் 3.5 ஆண்டுகள் மதிப்பீட்டின் அடிப்படையில் 75% பேர் வெளியேற்றப் படுவார்கள். இந்தக் கால அளவு என்பது பொருளற்றதும் மிகக்குறுகியதும் ஆகும். ஒரு சிறுவனிடம் இருந்து ஒரு மாவீரரை இந்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது என அவர் கூறி முடிக்கிறார். ராணுவத்திற்கு செலவிடப்படும் சில ஆயிரம் கோடிகளை சேமிப்பது என்பது புத்திசாலித்தன மான முடிவாகுமா2010-11 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% இருந்த ஒதுக்கீடு, 2020-21 இல் 26 ஆக வீழ்ந்து விட்டது. மேலும், முதலீட்டு செலவினத்தின் பங்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் வீழ்ச்சி அடைந்து விட்டது. மொத்த பாதுகாப்பு செலவினத்தில் அதன் பங்கு 2011 இல் 30% இருந்து 2018 இல் 22% சதவீதமாக குறைந்து விட்டது.
மொத்த முதலீட்டு செலவினத்தில் பாதுகாப்புக்கான முதலீட்டு செலவினத்தின் சதவிகிதமும் சமீப ஆண்டுகளில் குறைந்து விட்டது. ஆக, பாதுகாப்புக்கான முதலீட்டு செலவினத்தை, செலவழிப்பதில் அரசாங்கத்தின் செயல்பாட்டை கவனத்தில் கொண்டால், அரசாங்கத்தின் நோக்கம் பற்றி கேள்வி எழுவது நியாயமானதாகவே இருக்கும். ஓய்வூதியத்திற்கான செலவினத்தை 30% ஆக அரசாங்கம் குறைத்து விடும் என்றே வைத்துக் கொள்வோம் (என்ன இருந்தாலும் இது ஒரு மாபெரும் சவால்தான்) ஒரு வருடத்திற்கு மொத்தம் 1.2 லட்சம் கோடி என்பது 80,000 கோடியாக குறையும். இதன்படி, ஒரு வருடத்திற்கு 40,000 கோடி சேமிப்பாக கிடைக்கும். (இதுதான் மிகச் சிறந்த கணக்காகும் என்பதை கணக்கில் கொள்க)ஆக இதுவொரு மாபெரும் தொகையாகவே தெரிகிறது. ஆனாலும் நாம் இதனை அனைத்து விசயங்களோடும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
அரசாங்கத்தால் கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ள சலுகைகள், வரி விலக்கு களின் மூலம் விட்டுக்கொடுத்துள்ள வருமா னத்தை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய அளவிலான தொகையே ஆகும். மேலும், பெரும் கார்ப்பரேட்டுகளால் செயல்படாத சொத்துக்களாக (என்பிஏ) ஆக்கப்பட்டுள்ள தொகையோடு ஒப்பிடும்போது மிக மிகச் சிறிய அளவிலான தொகையே ஆகும். இந்த அரசாங்கம் தனது கள்ளக் கூட்டாளி கார்ப்பரேட்டுகளின் மீது கைவைக்கத் தாயாராக இல்லை. ஆனால், தனது வீரர்களுக்கு செலவழிக்க வேண்டிய தொகையை வெட்டுவதற்கு சட்டத்தை திருத்தம் செய்கிறது என்பதாகவே தெரிகிறது. இதனால் நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. அவர்கள் உண்மையிலேயே நாட்டைப் பாதுகாப்பது பற்றி கொள்கிறார்களா அல்லது இந்த நாட்டில் உள்ள ஒரு சில மனிதர்களை பாதுகாப்பது பற்றி கவலை கொள்கிறார்களா?
ராணுவத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் அதில் தேவையற்ற செலவினங்கள் நிறுத்தப்பட வேண்டும் என விவாதிக்க முடியும் (விவாதிக்கவும் வேண்டும்). அதே நேரத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம், போஷாக்கான உணவு, பொருத்த மான காலணிகளும் சீருடைகளும் போன்ற வற்றை வீணானவை என்று கூற முடியாது. ராணுவத்தில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான நிரந்தர வேலை வாய்ப்புகள் ஒழித்துக் கட்டப்படும், ராணுவ வீரர்கள் மாபெரும் ஒப்பந்த முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதே இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஒரே வெற்றி(?) யாகும். பொருளாதாரத்தின் மற்ற பல்வேறு துறைகளில் நிகழும் ஒப்பந்தமய மாக்கத்தோடு இதுவும் இணைந்து செல்லும்
போக்காகவே தெரிகிறது. உழைப்பு சக்தியின் பங்கெடுப்பு வீழ்ச்சி அடைகிறது; வேலையில்லா திண்டாட்டம் விண்ணை எட்டுகிறது; வேலை வாய்ப்பு நெகிழ்திறன் (பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பில் நிகழும் மாற்றம்) வீழ்ச்சியை சந்திக்கிறது. இந்த நாட்டில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பற்றவை, நிச்சயமற்றவை என்ற தீய சக்திகளின் கரங்களுக்குள் தள்ளி விடுவதன் மூலம் இந்த அரசாங்கம் எதிர்திசையில் ஓரடி எடுத்து வைத்துள்ளது. ராணுவத்தால் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியால் கிடைக்கும் திறமைகள் ராணுவத்தில் இருந்து வெளியே வந்த பிறகு, சந்தையின் தேவைகளுக்காக தேவைப்படும் திறமைகள் அல்ல என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.