பாபர் மசூதி இடிப்பை கியான்வாபியில் மீண்டும் அரங்கேற்ற சங்பரிவாரை அனுமதியோம்!
கியான்வாபி மசூதியில் சர்ச்சையைக் கிளப்புவதன் மூலம் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை மீண்டும் அரங்கேற்ற சங் பரிவார் திட்டமிடுகிறது. இது 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி நிலவரப்படி ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலத்தின் நிலையை உறுதி செய்யும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991க்கு எதிரான அப்பட்டமான சட்டவிதி மீறலாகும்.
பாபர் மசூதி இடிப்பை அருவருப்பான குற்றவியல் நடவடிக்கை என கருதினாலும், ராமர் கோயில் உரிமை தொடர்பான கோரிக்கைக்கு சாதகமாக தீர்ப்பளிப்பதன் மூலம் இதுபோன்ற மற்ற சர்ச்சைக்குரிய கோரிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உணர்வுக்கு இது முற்றிலும் எதிரானதாகும்.
ஆனால் சங் பரிவார் அமைப்புகள் தொடர்ச்சியாக ‘அயோத்தி சிர்ஃப் ஏக் ஜாங்கி ஹை, காசி மதுரா பாகி ஹை’ (அயோத்தி என்பது காசி மற்றும் மதுராவில் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே) என்ற ஆக்ரோஷமான முழக்கத்தை மீண்டும் மீண்டும் எழுப்பி தயாராகி வருகிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்தச் சதியை முறியடிக்க வேண்டும். கியான்வாபியை நோக்கிய பிஜேபியின் நகர்வுகளுக்கு எதிராக அமைதியை விரும்பும் இந்தியர்கள் அனைவரும் உறுதியுடன் ஒன்றுபட வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வருகின்றது, பொருளாதாரம் ஒரு அபாயகரமான சிக்கலில் உள்ளது. மேலும் பெரும்பான்மையான இந்தியர்கள் தங்கள் வேலை, வாழ்வாதாரம், வீடு மற்றும் வாழ்க்கையின் பிற அடிப்படைத் தேவைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். மோடி அரசு இந்த நெருக்கடிகளுக்கு எந்தத் தீர்வையும் காணவில்லை, மக்களுக்கு நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. ஆனால், அது எல்லா நெருக்கடியிலும் புதிய வாய்ப்புகளை தேடவும் மக்களின் வலிகளை மேலும் மேலும் அதிகரிக்க மட்டுமே செய்கிறது.
இந்தியா பன்முகத்தன்மை, நல்லிணக்கம் ஆகிய இரு தூண்களின் மேல் நின்றுதான் எத்தகைய கடும் சூழலையும் எதிர்கொள்ள முடியும். எனவே இந்த அஸ்திவாரங்கள் மீதான தாக்குதல் வெறும் இஸ்லாமிய சமூகத்தின் மத உரிமை மற்றும் பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவின் தொடர்ந்து வரும் வரலாற்று மரபு மற்றும் அதன் ஆன்மாவின் மீதான நேரடியான தாக்குதலாகும்.