கார்ப்பரேட்டுகள்-காவிகள்-காக்கிகள்
ரமேஷ் கணபதி
ஸ்டெர்லைட் எதிர்த்து போராடிய மக்கள் மீது அடிமை எடப்பாடி அரசு துப்பாக்கிச் சூடு நடத்தி 14 பேரைக் கொன்றது. துப்பாக்கிச் சூடு நடைபெற்று நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. கடந்த மே 22ம் தேதி நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை மக்கள் ஆங்காங்கே நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்பாக பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய ய காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் வரை தண்டிக்கப்பட வேண்டும் என்று இகை(மாலெ) அன்றே கோரிக்கை வைத்தது. ஒன்றிய மோடி அரசின் கையில் உள்ள மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணையில் எதுவும் நியாயம் மக்களுக்குக் கிடைக்காது என்று இகக(மாலெ) சொன்னது. இக்க(மாலெ) சொன்னதையும் தாண்டி இன்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் மக்களே குற்றவாளிக ளாக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் எல்லாம் சாட்சிகளாகச் சேர்க்கப் பட்டுள்ளார்கள். துப்பாக்கி சூடு நடத்தி 14 பேரைக் கொன்றவர்கள் எவரும் குற்றவாளிகள் இல்லை என்கிறது மோடியின் கையில் உள்ள சிபிஐ. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்ற போதும், மக்களையே குற்றவாளிகள் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள மிகவும் கொடுமையானதாகும். கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக  மிகவும் திட்டமிட்டு இப்போது குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இன்னொரு புறம்   ஓய்வு பெற்றநீதிபதி அருணா ஜெகதீசன் குழு
தன்னுடைய அறிக்கையினை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் உள்ள விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
      ஸ்டெர்லைட்டால் கடும் பாதிப்புக்குள்ளான மக்கள் வேறு வழியின்றி ஸ்டெர்லைட்டை மூடக் கோரி அமைதி வழியில் போராட்டம் நடத்தி 2018 மே 22 மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்றார்கள். அவ்வாறு அமைதியாகச் சென்றவர்களை கண்மூடித் தனமாகச் சுட்டுக் கொன்றவர்களைக் காப்பாற்ற, மக்கள் காவல்துறையினரை விரட்டி அடித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி விட்டு கல்லெறிந்து அராஜகச் செயலில் ஈடுபட்டார்கள் என்கிறது சிபிஐ. இது ஸ்டெர் லைட் முதலாளி அனில் அகர்வாலுக்கு ஆதரவான குற்றப்பத்திரிகை என்றும் மக்களைக் குற்றவாளிகள் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரியபோது தமிழக முதல்வர் ஸ்டாலின் கையில் உள்ள காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. அது மட்டுமின்றி மே 22 அன்று ஸ்டெர்லைட் தியாகிகள் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்த சுமார் 80 பேர்களை காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தது. கைது செய்யப்பட்டவர்கள் மாலை வரை காவல்துறையினர் கொடுத்த தண்ணீரைக்கூட குடிக்கமாட்டோம் என்று கூறி பட்டினி கிடந்துள்ளனர். வேறு வழியின்றி இரவு 7 மணிக்கு கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையே வீடுகளுக்கு சென்று சேர்த்துள்ளது.
            ஒன்றிய அரசின் கீழ் உள்ள மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ), துப்பாக்கிச் சூட்டு  சம்பவத்தின் குற்றவாளிகள் அனைவரும்
பொதுமக்கள்தான் என்று சொல்லியுள்ளதை கண்டனம் செய்ய ஒரு ஆர்ப்பாட்டம் கூட நடத்த, தமிழ்நாட்டில் அதுவும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பிரச்சாரம் செய்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய திமுக ஆட்சியில் இருக்கும்போது, அனுமதி மறுக்கப் படுகிறது என்று சொன்னால், தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை ஒன்றிய மோடி - அமித்ஷா கட்டுப்பாட்டில் உள்ளதா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஏனென்றால், உத்தரப்பிரதேசம் ஞானவாபியில் மசூதிக்கு அடியில் சிவலிங்கம் இருக்கிறது என்று சொல்லி புது சர்சையை உருவாக்கியுள்ள சங்கிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், தமிழக காவல்துறை தடை விதிக்கிறது. வழக்கு போடுகிறது. நாகர்கோயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கிகள் உருவாக்கும் இப் புதுப் பிரச்சினையைக் கண்டித்துப் பேசிய தோழர் சுப.உதயகுமார் மீது பிரதமர் மோடி யையும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் விமர்ச்சித்துப் பேசினார் என்றும் மேற்படி உதயகுமார், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் மக்களைத் தூண்டிவிட்டு பெரும் உயிர் சேதத்தையும் பொதுச் சொத்துக்களுக்கு சேதத்தையும் ஏற்படுத்தியவர் என்றும் நாகர்கோயில் கோட்டார் காவல் நிலையத்தில் 18.5.2022 அன்று அவர்மீது ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார்கள். இந்தியப் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியைத் தர வேண்டும் என்றும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் இன்னும் பல கோரிக்கைகள் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார் வர வைச்சு செய்து விட்டார் என்று பெருமையாகப் பேசுகிறார்கள். ஆனால், நடைமுறையில் மோடியை விமர்சனம் செய்தார்கள் என்று மற்றவர்கள் மீது, மக்கள் மீது வழக்குப் போடுகிறது ஸ்டாலின் கையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை. அப்படியானால் தமிழ்நாடு காவல்துறையில் என்ன நடக்கிறது என்பது தமிழக முதல்வர் அவர்களுக்குத் தெரிய வில்லையா? தமிழ்நாடு காவல் துறையில் உள்ளவர்கள் காவிகளாகவேச் செயல்படுவது ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு வரவில் லையா? அல்லது தமிழ்நாடு காவல்துறையும் டெல்லி மாநில காவல்துறை போல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கிறதா? இதில் எது உண்மை?
      ஒன்றிய அரசின் மதவெறி பாசிச நடவடிக் கையை, தமிழ்நாட்டிற்கு எதிரான ஓரவஞ்சனை நடவடிக்கையை திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக் காட்டிப் பேசும் போது அதையே தமிழ்நாட்டில் உள்ள மற்ற தலைவர்கள் குறிப்பாக இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பேசினால் அதற்கு தடை விதிக்கப்படுவதும் எஃப்ஐஆர் போடுவதும் நடக்கிறது என்று சொன்னால் மாநில சுயாட்சி என்று பேசுவது எதற்காக? மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று சொல்வது எதற்காக?
          மே 22 அன்று தூத்துக்குடியிலுள்ள பண்டா ரம்பட்டியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட் டத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் களுக்கு 4ம் ஆண்டு அஞ்சலி செலுத்துகிற வகையில் சுவரொட்டிகளும் தட்டி போர்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அந்த தட்டி போர்டுகளை, சுவரொட்டிகளை தூத்துக்குடி காவல்துறையில் உள்ளவர்கள் கிழித்து அகற்றியுள்ளார்கள். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பண்டாரம்பட்டி மக்கள், தூத்துக்குடி காவல்துறையில் உள்ள வர்கள் தமிழ்நாடு அரசிடம் ஊதியம் வாங்கு கிறார்களா? அல்லது ஸ்டெர்லைட் நிர்வாகத் திடம் ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கிறார்களா? என்று கேட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்கள். அதன்பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் வந்து சமாதானம் செய்துள்ளார்கள். ஜனவரி மாதம் 30ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று நாடு முழுவதும் உறுதிமொழி எடுப்பது வழக்கமான ஒன்று. அப்படியொரு உறுதிமொழி நிகழ்ச்சி இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளால் கோவையில் கடந்த ஜனவரி 30 அன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் பேசிய தலைவர்கள், காந்தியைக் கொன்ற கோட்சே என்று பேசினார்கள். இது நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் கூட இருப்பதுதான். இதைப் பேசக் கூடாது என்று அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் கூறி உறுதி மொழி நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்றார்கள். காந்தி எப்படி செத்தார் என்பதைக் கூட சொல்லாதே என்கிறார்கள் ஸ்டாலின் அவர்கள் கட்டுப் பாட்டில் உள்ள காவல்துறையினர். கோவை, குமரி, தூத்துக்குடி என தமிழக மெங்கும் காக்கிக்குள் கார்ப்பரேட் விசுவாசிகளும் காவி பாசிஸ்டுகளும் மறைந்திருக்கிறார்கள் என்ப தையே இது காட்டுகிறது.
             உண்மையில், கார்ப்பரேட்டுகளின் கையாட்களும் காவிப் பாசிஸ்ட்டுகளும் தமிழ்நாடு காவல்துறையில் ஒளிந்து கொண்டிருக்கிறார்களா? அல்லது தமிழ்நாடு ஆட்சியாளர்களிடம் கார்ப் பரேட் விசுவாசமும் காவிப்பாசமும் மறைந்து கொண்டிருக்கிறா? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழத்துவங்கிவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் அனுமதி யைத் தாண்டி, விதிகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரியில் ஆறு பேர்கள் பாறைக்குள் புதைந்து போனார்கள். அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிதி போதுமானது அல்ல, கூடுதல் நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்திட அந்த எல்லைக்குள் வரும் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக அனுமதி கேட்டு மனு கொடுக்கப் படுகிறது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. கல்குவாரி முதலாளிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது என்பதுதானே இதன் பொருள். அந்தக் கல்குவாரியை நடத்திய செல்வராஜும் அவர் மகனும் கைது செய்யப்பட்டுவிட்டால் மட்டும் போதுமா? இதுபோல் தமிழ்நாடு எங்கும் இருக்கும் கல்குவாரிகள் மூடப்பட வேண்டாமா? இதுபோன்ற கல்குவாரி மரணங்கள் தடுக்கப்பட வேண்டாமா? இதே கல்குவாரியில் இதற்கு முன்பும் பலர் இதுபோன்று மரணமடைந் துள்ளார்கள் என்றும் அவையெல்லாம் மறைக்கப் பட்டுவிட்டது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
          கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுபோல் இயங்கி வந்த கல்குவாரியை மூட வலியுறுத்தி இதக (மாலெ) சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தது மட்டுமின்றி, போராட்டம் நடத்துவதற்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்படி கல்குவாரி மூடப்பட்டது. இதுபோன்ற கல்குவாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் தங்கள் பினாமிகள் மூலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் பரவலாகப் பேசுகிறார்கள். தமிழ்நாடு காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும் போது அதில் உண்மை இருப்பதுபோல் தெரிகிறது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரியோ, மனித உரிமை மீறலைக் கண்டித்தோ, கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவோ, காவிப் பாசிச சங்கிகளின் அராஜகச் செயல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியோ ஆர்ப்பாட்டம் என்று அறிவித்தால், அதற்கு அனுமதி மறுக்கப் படுகிறது அல்லது ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இது மக்களிடம் ஸ்டாலின் அவர்கள் சொல்வதுபோல் 'நம்ம ஆட்சி'தானா? என்கிற கேள்வியைதான் எழுப்புகிறது. மோடி தமிழ்நாட்டிற்குள் வரும்போது 'திருப்பிப் போ மோடி' ட்ரெண்ட் ஆகிறது என்று சொல்லும் அதேவேளை மோடி ஆட்சியின், ஆர்எஸ்எஸ்ஸின் அபிலாசைகள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மறைமுகமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றன.
          நாளிதழ் ஒன்றில் இரண்டு செய்திகள் அடுத்தடுத்த பக்கங்களில் பார்க்க முடிந்தது. ஒரு பக்கத்தில் மேதா பட்கர், கனிமொழி, திருமாவளன், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிக ளின் நினைவேந்தல் நிகழ்ச்சி. அதில் பேசிய மேதாபட்கர் அவர்கள் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றும் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்றும் பேசினார். இன்னொரு பக்கத்தில் அசானி புயல் காரணமாக பழுந்த டைந்த,தூத்துகுடி திரேஸ்பு ரத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவரின் படகை சீரமைக்க ரூ.1 லட்சம் நிதியை ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரிகள் அவருக்கு வழங்கி அவரின் நன்றியைப் பெறுவதாகச் செய்தி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளது இதே வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம். இவை சொல்லும் செய்தி என்ன? அனில் அகர்வால் போன்றோரின் ஆள் தூக்கி ஆலைகள் மூடப்பட வேண்டும் என்று சொல்லும் அதேவேளை, மக்களுக்கு அரசு செய்ய வேண்டியதை, அந்த ஆலை நிர்வாகத்தினர் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்றால் அரசாங்கம் கார்ப்பரேட்டுகளின் அரசாங்கம்தான் என்பது சொல்லாமலேயே தெரிகிறதல்லவா?
திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக் கான ஆட்சியாக இருக்க வேண்டுமேயொழிய, கார்ப்பரேட்டுகள்-காவிகள்-காக்கிகள் ஆட்சியாக இருக்கக்கூடாது.