தலையங்கம்

 அப்ரின் பாத்திமாவும் அக்னிபாத்தும்
அப்ரின் பாத்திமா மோடி-யோகி அரசுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காக, அவர் இஸ்லாமியர் என்பதனால், அவரின் வீட்டை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புல்டோசர் கொண்டு இடித்து தரை மட்டம் ஆக்கி, அவரின் குடும்பத்தாரை அநியாயமாக நடுத் தெருவில் நிற்க வைத்துள்ளது உத்தரபிரதேச யோகி சாமியார் அரசு. இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை, தலித்துகளைத் தாக்குவது மோடி ஆட்சியின் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 50 நாட்களில் இந்த நாட்டையே தலைகீழாக மாற்றிக் காட்டுவேன், நான் சொன்னதைச் செய்யவில்லை என்றால் என்னை நடுத் தெருவில் நிற்க வைத்து கல்லால் அடியுங்கள் என்றெல்லாம் வீரமாகப் பேசினார். இன்று எல்லாத்தையும் தன் நண்பர் அதானிக்காகவும் அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்காகவும் இந்திய நாட்டின் ஒவ்வொரு பாகத்தையும் விற்றுக் கொண்டிருக்கிறார். சமையல் எரிவாயுவிற்கான வைப்புத் தொகை ரூபாய் 2200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை, வேலையில் இருந்து வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2014ல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று வாக்குறுதியளித்தார். 2022 ஜூன் 14ல் 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை தருவேன் என்கிறார் மோடி. அரசாங்க வேலை என்பது இளைஞர்களின் கனவு. லட்சியம். அது ராணுவத்திலும் காவல்துறையிலும் மட்டுமே என்று குறுக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது ராணுவத்திலும் இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என 'அக்னிபாத்' என்ற பெயரில் ராணுவத்திலும் ஒப்பந்த முறையைக் கொண்டு வருகிறது மோடி அரசு. சில மாதங்கள் பயிற்சி, பின்னர் களப்பணி, நான்கு ஆண்டுகள் கழித்து வீட்டிற்குப் போய்விட வேண்டும். ஓய்வூதியம் எதுவும் கிடையாது. நாட்டிற்குள் ஒரு வேலையும் கிடையாது என்கிற நிலையில், குடும்பத்தை விட்டுப் பிரிந்தாலும் உத்தரவாதமான வேலையான ராணுவ வேலை இருக்கும் என்று எண்ணி இளைஞர்கள் பலர் ராணுவத்தில் சேர்வார்கள். இப்போது அதையும் இல்லாமல் செய்கிறது மோடி அரசு. அதுமட்டுமின்றி சில மாதங்கள் மட்டுமே பயிற்சி எடுத்துக் கொண்டு நாட்டைப் பாதுகாக்க அவர்கள் பணியாற்ற வேண்டுமாம். இது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக் குள்ளாக்குகிறது. 'தேசத்தைக் காக்க எல்லையில் போராடும் ராணுவ வீரனைப் பாருங்கள்' என்று உசுப்பேத்தி, ராணுவ வீரர்களை தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு மேலும் அதிகமாக பயன்படுத்தி இளைஞர்களைப் பலிகடா ஆக்கிடவே இந்த அக்னிபாதை திட்டம். இதை உணர்ந்ததால்தான் நாடு முழுவதும் இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளார்கள். அப்ரின் பாத்திமா போன்றவர்கள் போராடும்போது அவர்களைத் தனிமைப்படுத்தி, அச்சுறுத்த புல்டோசர் கொண்டு அவர்கள் வீட்டை இடித்த மோடி-யோகி, இப்போது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கும் இளைஞர்களை பலிகடாவாக்கும் அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களின் எத்தனை வீடுகளை இவர்கள் இடிப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கு வீடுகளே இல்லாத நிலைதான் இருக்கின்றது. தங்களுக்கு உத்தரவாதமாக இருந்து வரும் ராணுவ வேலைக்கும் உலை வைத்து ராணுவத் தளவாடங்களை மட்டுமல்ல ராணுவத்தையே அதானி, அம்பானி கைகளில் ஒப்படைக்கத் தயாராகிவிட்ட மோடி அரசுக்கு எதிராக இளைஞர்கள் களம் இறங்கியுள்ளார்கள். இனி மோடி- ஷா-யோகி ஆட்சிக்கு அக்னி பரீட்சை ஆரம்பமாகிவிட்டது.